Published:Updated:

காதலிக்க மறுத்தால் கொலை!

காதலிக்க மறுத்தால் கொலை!
பிரீமியம் ஸ்டோரி
News
காதலிக்க மறுத்தால் கொலை!

குற்றவாளிகளைக் காப்பாற்றும் சாதி!கொடுமை

காதலிக்க மறுத்தால் கொலை!

ருதலைக் காதல் விவகாரத்தில் ஓர் அப்பாவி பெண்ணின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது.

விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை வ.பாளையத்தைச் சேர்ந்த விவசாயக் கூலி அங்கப்பனின் மகள் நவீனா. சென்ற வருடம் ப்ளஸ் டூ படித்துக்கொண்டிருந்த இவர், பள்ளிக்குத் தனியார் பேருந்தில் சென்று வருவது வழக்கம். அப்போது அந்தப் பேருந்தில் ஓட்டுநராக இருந்த இந்திரா நகரைச் சேர்ந்த செந்தில், நவீனாவை ஒருதலையாகக் காதலித்து இருக்கிறார். ஒரு கட்டத்தில் செந்திலின் காதல் குறித்த பேச்சுக்கள் தொல்லையாக மாறவே, அவர் மீது விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் தனது பெற்றோருடன் சென்று நவீனா புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறை கைது செய்ய பின்னர், ஜாமீனில் வெளிவந்திருக்கிறார் செந்தில். ஆனால், அதன்பிறகும் நவீனாவுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தினார் நவீனா.

இந்த நிலையில், ஒரு காலும் ஒரு கையும் துண்டிக்கப்பட்ட நிலையில் மாம்பழப்பட்டு ரயில்வே கேட் அருகே கிடந்த செந்தில், மருத்துவமனையில் பெற்ற ஒரு மாத சிகிச்சைக்குப் பின், விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஜூலை 3-ம் தேதி புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், நவீனாவின் பெற்றோர் தூண்டுதலின் பேரில்தான் தன் கை, கால்களை யாரோ வெட்டி வீசியதாகத் தெரிவித்திருந்தார்.

இது சாதி ஆணவக் கொலைதான் என்று அனைவரும் அடித்துக் கூறினார்கள். அதுபற்றி அப்போதே நாம் விசாரித்தோம். செந்தில் சொல்வதில் உண்மை இல்லை என்று தெரிய வந்தது.
 

காதலிக்க மறுத்தால் கொலை!

12-07-2015 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், “காதலும் இல்லை... கை, கால்கள் வெட்டப்படவும் இல்லை” என்ற தலைப்பில் கட்டுரையை வெளியிட்டோம். அப்போது பேராசிரியர் அ.மார்க்ஸ், கோ.சுகுமாறன் உள்ளிட்ட உண்மை கண்டறியும் குழு ஆய்வு செய்து, செந்திலுக்கு ரயில் விபத்தில்தான் கை, கால்கள் துண்டிக்கப்பட்டன என்றனர். மருத்துவமனை அறிக்கைகளும் அதனை உறுதிப்படுத்தின.

 இந்த நிலையில் கடந்த 29-ம் தேதி நவீனாவின் வீட்டினுள் நுழைந்த செந்தில், பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டு அங்கிருந்த நவீனாவை கட்டிப்பிடித்ததால் அவரும் சேர்ந்து தீயில் கருகினார். செந்தில் அப்போதே இறந்துவிட, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவீனா கடந்த 2-ம் தேதி உயிரிழந்தார். 

துகுறித்து பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், “செந்திலின் நாடகக் காதலால் நவீனாவும், அவரது குடும்பத்தினரும் கடந்த சில ஆண்டுகளாகவே பாதிக்கப்பட்டு வந்துள்ளனர். பள்ளிக்கும், வேலைக்கும் செல்கிற பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதும், காதலிக்கும்படி மிரட்டுவதும் அதிகமாகி வருகிறது” என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

நவீனாவின் தாய் நாகம்மா, “அவன் பொய் புகார் கொடுத்தப்பவே சரியா தண்டிச்சி இருந்தா, இப்போ என் பொண்ணுக்கு இந்த நிலைமை வந்திருக்காது.  அடிக்கடி எங்களை வந்து மிரட்டுகிறான் என்று பலமுறை போலீஸிடம் சொன்னோம். ஆனா, ‘கையும் காலும் இல்லாதவன் என்ன செய்துடப் போறான். அடுத்த முறை அவன் வந்தா எங்களுக்கு போன் செய்யுங்கள்’ என்று ஒவ்வொரு முறையும் எங்களைத் திருப்பி அனுப்பிட்டாங்க. இப்ப என் புள்ளைய கரிக்கட்டையா ஆக்கிட்டானுங்களே” என்று கதறினார்.

காதலிக்க மறுத்தால் கொலை!

‘‘சம்பவம் நடந்ததுமே உண்மை எதுவென்று விசாரிக்காமலேயே சாதி ரீதியிலான போராட்டங்களை முன்னெடுத்த அமைப்புகள், உண்மை தெரிந்தபிறகு அதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தால் ஒருவேளை காவல் துறை அந்தக் கயவனின் மீது நடவடிக்கை எடுக்கவாவது உதவியிருக்கும். உண்மையில் இந்த அமைப்புகள், ஆதரவாகப் போராட்டத்தில் குதித்ததுதான் அவனை அடுத்தகட்டத்துக்குச் செல்ல வைத்திருக்கிறது” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

ஒட்டுமொத்த சமுதாயமே ஒருமித்தக் குரலில் கண்டித்திருக்க வேண்டிய இந்தச் சம்பவம், சாதிரீதியில் பார்க்கப்பட்டதுதான் வேதனையின் உச்சம்.

- ஜெ.முருகன்,படம்: தே.சிலம்பரசன்