Published:Updated:

காவு வாங்கிய கந்துவட்டிக் கொடுமை!

காவு வாங்கிய கந்துவட்டிக் கொடுமை!
பிரீமியம் ஸ்டோரி
News
காவு வாங்கிய கந்துவட்டிக் கொடுமை!

கழுத்தை நெரிக்க நைலான் கயிறு... காரில் பயணித்த பிணம்...கொலை

காவு வாங்கிய கந்துவட்டிக் கொடுமை!

திருச்சியில் நடந்திருக்கும் ஒரு கொலை பல்வேறு திடுக்கிடும் செய்திகளைச் சொல்கிறது. தமிழகத்தில் சட்டரீதியாகக் கந்துவட்டி தடை செய்யப்பட்டு இருந்தாலும், நடைமுறையில் கந்துவட்டிக் கொடுமைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. கந்துவட்டிக்குப் பணம் கொடுத்துவிட்டு அதைத் திருப்பிக்கேட்டவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். சாதாரண கொடுக்கல், வாங்கல் தகராறு கொலை வரைக்கும் போகிறது. கொலைகள் மிகச் சர்வசாதாரணமாக மாறிவிட்டன. இன்னும் பல அதிர்ச்சிகள் இருக்கின்றன. மேலும் படியுங்கள்...

கந்துவட்டிதான் காரணம்!

திருச்சி மேலசிந்தாமணி சுப்பிரமணியசுவாமி கோயில் தெருவில் வசித்து வந்தவர், செந்தமிழ்ச்செல்வன். பால்கோவா, ஊறுகாய் போன்ற உணவுப்பொருட்களை மொத்தமாக வாங்கி, கடைகளில் விற்பவர். அதுபோக, கந்துவட்டிக்குப் பணம் கொடுத்துவந்தார். இவரது தம்பி மணிகண்டன். இவர், தனது அண்ணன் செந்தமிழ்ச்செல்வனை கடந்த 14-ம் தேதியில் இருந்து காணவில்லை என்று கடந்த 29-ம் தேதி திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். செந்தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்டார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கொலைக்குக் காரணம் கந்துவட்டி.

இதுகுறித்து திருச்சி மாவட்ட காவல் துறை வட்டாரத்தில் விசாரித்தோம். “மணிகண்டன் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சீத்தாராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். செந்தமிழ்ச்செல்வனும் திருச்சியில் ஹோட்டல் மற்றும் பார் நடத்திவரும் அரியாவூர் கண்ணன் என்பவரும் நெருக்கமாகப் பழகியுள்ளனர். கண்ணனுக்கு செந்தமிழ்ச்செல்வன் 10 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். செந்தமிழ்ச்செல்வன் தன் மனைவியைப் பிரிந்து தனியாக வசித்ததால், கண்ணனின் ஹோட்டலில்தான் மூன்றுவேளையும் சாப்பிட்டு வந்துள்ளார். அந்த ஹோட்டல் அருகே செந்தமிழ்ச்செல்வனின் மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது. அதனால், ஹோட்டல் மேனேஜர் ஹரி உள்ளிட்ட சிலரிடம் விசாரித்தோம். விசாரணையின்போது முன்னுக்குப்பின் முரணாக ஹரி பதில் சொன்னார். அவர் மீது எங்களுக்குச் சந்தேகம் வந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரித்த போதுதான், செந்தமிழ்ச்செல்வனை ஹரி கொலை செய்திருப்பது தெரியவந்தது” என்று சொல்கிறார்கள்.

திட்டம் போட்ட அ.தி.மு.க பிரமுகர்!

ஹரி வாக்குமூலம் படுபயங்கரமாக இருக்கிறதாம். ‘‘முதலாளி கண்ணன் மூலமாக செந்தமிழ்ச்செல்வனுடன் எனக்குப் பழக்கம். ஹோட்டலில் வேலை பார்த்து கிடைக்கிற வருமானத்தைவைத்து வாழ்ந்து வந்தேன்.  குடும்ப  கஷ்டம் காரணமாகச்  செந்தமிழ்ச்செல்வனிடம் கடந்த சில மாதங்களுக்கு முன் 11.50 லட்ச ரூபாய் வட்டிக்கு வாங்கினேன். வாங்கிய பணத்துக்கு வட்டி கட்ட முடியவில்லை. அதனால், அவர் கடைக்குச் சாப்பிட வரும்போதெல்லாம் என்னிடம், ‘உன்னால பணம் கட்ட முடியாது. மொத்தப் பணத்தையும் கொடு. இல்லைன்னா நடக்கறதே வேற’னு அசிங்கமா திட்ட ஆரம்பித்தார். இதை முதலாளி கண்ணனிடம் சொன்னேன். அவர் தனது நண்பரும், உறையூரில் பார் நடத்திவரும் சிவா என்பவரிடம் சொல்ல, சிவா கொலைக்கான திட்டம் போட்டு கொடுத்தார். இந்த சிவா அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்.

நைலான் கயிற்றால் இறுக்கினார்கள்!

காவு வாங்கிய கந்துவட்டிக் கொடுமை!

வழக்கம்போல் கடந்த மாதம் 14-ம் தேதி,  ஹோட்டலுக்குச் சாப்பிட வந்த செந்தமிழ்ச்செல்வனிடம், ‘நாகமங்கலம் பக்கத்துல கம்மியான ரேட்டில் பிளாட் விற்பனைக்கு இருக்கு. அதை வாங்கப் பணம் கொடுத்தால், அந்த இடத்தைக் கூடுதல் விலைக்கு விற்று, உங்களுக்குத் தரவேண்டிய மொத்தப் பணத்தையும் கொடுத்துவிடுகிறேன்’  என்று சொன்னோம். அதை நம்பாத செந்தமிழ்ச்செல்வன், ‘அந்த இடத்தைப் பார்க்க வர்றேன்’னு சொன்னார். கடையில் புரோட்டா மாஸ்டர் மகன் ராஜ்குமார்,  படிப்பைப் பாதியிலேயே நிறுத்திட்டு அவங்க அப்பாக்கிட்ட ஆட்டோ வாங்கிக் கொடுக்கச் சொல்லிக் கட்டாயப் படுத்திக்கிட்டு இருந்தான். அவனிடம், ‘நீ வந்து நில்லு. மற்றதை நான் பார்த்துக்கிறேன்’னு சொல்லிக் கூட்டிட்டுப் போனேன்.  ராஜ்குமாருடன் முதலாளி கண்ணனுக்குச் சொந்தமான காரில்  கிளம்பிப் போனோம். திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் நாகமங்கலத்துக்கு அருகில் போய்,  சிறுநீர் கழிப்பதற்காக காரை நிறுத்தினோம். காரின் பின்பக்கக்  கதவைத் திறந்து, ஏற்கெனவே திட்டமிட்டபடி வைத்திருந்த நைலான் கயிற்றால் முன்  சீட்டில் உட்கார்ந்து இருந்த செந்தமிழ்ச் செல்வனின் கழுத்தை நெரித்துக் கொன்றேன். பிறகு உடம்பை காரில் போட்டு கண்ணனின் சொந்த ஊரான அரியாவூரில் உள்ள வீட்டுக்குக் கொண்டு போனோம். அதன்பிறகு வேலைக்கு வந்து விட்டேன்” என்று சொன்னதாகச் சொல்கிறது போலீஸ்.

பிணத்துடன் பயணம்!

போலீஸார் தொடர்ந்து சொல்லும்போது, ‘‘அரியாவூரில் பிணத்தை வைத்துவிட்டு ஹோட்டலுக்குச் சென்று வேலை செய்துள்ளார் ஹரி. அன்று இரவு உய்யக்கொண்டான் திருமலையைச் சேர்ந்த வேலு, கோபால்  உள்ளிட்ட  2 பேரை சேர்த்துக்கொண்டவர், பாத்ரூம் சுத்தம் செய்யும் ஆசிட் வாங்கி எடுத்துக்கிட்டு காரில்  கிளம்பியிருக்கிறார்கள். இரவு முழுக்க காரில், பிணத்தோடு பயணம் செய்தவர்கள், விடியற்காலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் செல்லும் வேலூர் - ஆந்திரா சாலையில் உள்ள காட்டுப் பகுதியில் உடலை வீசியதுடன்,  அடையாளம் தெரியாமல் இருக்க, முகத்தில் ஆசிட்டை ஊற்றிவிட்டு வழக்கம்போல வேலைக்கு வந்துவிட்டார்கள்.  ஹரி உள்ளிட்ட 3 பேர் சேர்ந்து செந்தமிழ்ச்செல்வனை காரில்  நாகமங்கலம் பகுதிக்கு அழைத்துச்சென்று, கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

கொலையை மூடி மறைக்க, அதே காரில்  வேலூர் - ஆந்திர தேசிய நெஞ்சாலையில் குடியாத்தம் அருகே உடலைப் போட்டுவிட்டதாகச்  சொன்னார்.  இதையடுத்து வேலூர் மாவட்டம் பரதராமி போலீஸ் ஸ்டேஷனில் விசாரித்தோம்.  அந்த போலீஸார்தான், ‘கடந்த 16-ம் தேதி அந்த இடத்தில் இருந்து முகம் சிதைந்த நிலையில் அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கண்டெடுக்கப்பட்டது. வேலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடல், அடையாளம் தெரியாததால் மாநகராட்சி மூலம் தகனம் செய்துவிட்டோம்’ என்றார்கள். அதன்பிறகு இன்ஸ்பெக்டர் சீத்தாராமன், எஸ்.ஐ சுலோச்சனா  ஆகியோர் அடங்கிய  தனிப்படை போலீஸார் ஹரியுடன் வேலூர் பரதராமிக்கு சென்று பிணம் வீசப்பட்ட இடத்தில் விசாரணை நடத்தி, இறந்துபோனது செந்தமிழ்ச்செல்வன்தான் என்பதை உறுதி செய்தோம் என்றவர்கள், இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்த  கண்ணன்,  உறையூரில் பார் நடத்தும் சிவா என்கிற சிவக்குமார், வேலு, கோபால், 17 வயது சிறுவன் ராஜ்குமார் உள்ளிட்ட  6 பேர்  தலைமறைவாக இருக்க அதில் 5 பேரை கைதுசெய்து ரிமாண்ட் செய்துள்ளோம்” என்றார்கள்.

ஆளைக் கொல்லும் கந்துவட்டி!

கந்துவட்டிக்கு மேலும் ஓர் உயிர் பலியாகியுள்ளது என்று சொல்லும் சமூக ஆர்வலர்கள், ‘‘தமிழகத்தில் நாளுக்கு நாள் கந்து வட்டிக்கொடுமை அதிகரித்து வருவதாகவும் அதைத் தடுக்க கடந்த 2003-ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்த அ.தி.மு.க அரசு, ஆனால் அதை மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தத் தவறிவிட்டது.  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.கிருபாகரன், கடந்த சில வருடங்களுக்கு முன் தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், கந்துவட்டி பிரச்னையைத் தானாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் பொதுநல வழக்குப்பதிவு செய்ய வேண்டும். விசாரித்து உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்கின்றனர்.

அதனை ஏற்றுக்கொண்ட அப்போதைய  தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், கந்துவட்டிக் கொடுமையைத் தடுப்பது தொடர்பாக அறிக்கை தாக்கல்  செய்யவும், இந்த வழக்கு விசாரணையின்போது கோர்ட்டுக்கு உதவும்  விதமாகவும் செயல்பட மூத்த வக்கீல் முத்துக்குமாரசாமியை நியமித்தார். அந்த வழக்கில் வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி, ‘‘தமிழகத்தில், கந்துவட்டி, மணிக்கணக்கு வட்டி, தின வட்டி, மீட்டர் வட்டி என்று பல்வேறு  வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் உள்ளது. தமிழ்நாடு கந்து வட்டி தடைச்சட்டமும் அமலில்  உள்ளது. ஏழை மக்கள், கந்து வட்டிக்காரர்களிடம் பெரும் வட்டிக்கு பணம் பெறுகின்றனர். கந்து வட்டிக்காரர்கள் வட்டிக்கு வட்டி போட்டு, வாங்கிய கடன் தொகையைவிட அதிகமாகப் பணத்தை வசூலிக்கின்றனர். கந்து வட்டிக் கும்பலின் கொடுமையைத் தாங்க முடியாமல் பலர் தற்கொலை  செய்துகொள்கின்றனர். இதைத் தடுக்க மாவட்டம்தோறும் கண்காணிப்பு  கமிட்டி அமைக்க வேண்டும். போலீஸிடம் புகார் கொடுக்கும் போது, புகார் நகல் ஒன்றை கண்காணிப்புக் குழுவிடமும் கொடுக்கவேண்டும்” என அறிக்கை தாக்கல் செய்தார். அதைத் தமிழக அரசு செயல்படுத்தியதா என்றால், இல்லை.

கந்து வட்டியை ஒழிக்க இனிமேலாவது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

- சி.ய.ஆனந்தகுமார் படங்கள்: தே.தீட்ஷித்