Published:Updated:

எங்கள் வீட்டில் வேலை செய்தால்தான் ராஜ்பவனில் வீடு!

எங்கள் வீட்டில் வேலை செய்தால்தான் ராஜ்பவனில் வீடு!
பிரீமியம் ஸ்டோரி
News
எங்கள் வீட்டில் வேலை செய்தால்தான் ராஜ்பவனில் வீடு!

மிரட்டினாரா ராஜ்பவன் அதிகாரியின் மனைவி?சர்ச்சை

எங்கள் வீட்டில் வேலை செய்தால்தான் ராஜ்பவனில் வீடு!

ளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என கவர்னர் ரோசய்யா மீது விமர்சனங்கள் விழுந்திருக்கும் நிலையில், கவர்னர் மாளிகையில் இருந்து அடுத்த புயல் ஒன்று வீச ஆரம்பித்திருக்கிறது. ‘‘ஊழியர்களைப் பழி வாங்குகிறார்’’ என கவர்னரின் செயலாளராக இருக்கும் ரமேஷ் சந்த் மீனா மீது புகார் வாசிக்கிறார்கள் ராஜ்பவன் ஊழியர்கள்.

2013-ம் ஆண்டு மார்ச் மாதம் கவர்னரின் செயலாளராக நியமிக்கப்பட்டவர் ரமேஷ் சந்த் மீனா. ‘அவரை மாற்ற வேண்டும்’ எனப் புகார்கள் எழுந்திருக்கின்றன. தங்கள் அடையாளங்கள் தெரிந்தால் பழிவாங்கப் படுவோம் எனப் பேச ஆரம்பித்தார்கள் கவர்னர் மாளிகை ஊழியர்கள்.

‘‘இதுவரையில் எத்தனையோ செயலாளர்கள் கவர்னர் மாளிகையில் இருந்திருக்கிறார்கள்.  ரமேஷ் சந்த் மீனா வந்த பிறகுதான் தொல்லைகள் ஆரம்பமாகின. தற்காலிக ஊழியர்கள் நிறைய பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்படும். அது ஒழுங்காக வழங்கப்படுவதில்லை. இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்குப் பணி நிரந்தரம் செய்யப்படுவது கிடையாது. 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்வதற்கு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. ராஜ்பவனில் நிறையக் காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில்தான் கோயம்பேடு மற்றும் பனையூரில் உள்ள ரமேஷ் சந்த் மீனாவின் வீடுகளுக்கு ராஜ்பவன் தோட்டத்தில் பணியாற்றி வரும் தற்காலிகத் துப்புரவுப் பணியாளர்கள் அனுப்பிவைக்கப்படுகிறார்கள். உடல்நிலையைக் காரணம் காட்டி அங்கே வேலைக்குப் போகவில்லை என்றால், ரமேஷ் சந்த் மீனாவின் மனைவி, ராஜ்பவன் அதிகாரிகளிடம் புகார் சொல்கிறார். இதனால், ராஜ்பவனில் உள்ள குடியிருப்புகளில் இருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். இப்படி ரமேஷ் சந்த் மீனாவின் வீட்டில் இருந்து வரும் உத்தரவுகளால் இதுவரை 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

எங்கள் வீட்டில் வேலை செய்தால்தான் ராஜ்பவனில் வீடு!

வாய்பேச முடியாத பாபு என்ற ஊழியர் பனையூர் தோட்டத்தில் வேலை பார்த்தார். இதனால் அவரின் வலது கை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து வேலை செய்யமுடியாத நிலையில் ராஜ்பவன் அரசுக் குடியிருப்பைக் காலி செய்துவிட்டுக் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார். ரமேஷ் சந்த் மீனாவின் மனைவியின் சொல்படி நடப்பவர்களுக்கு மட்டுமே ராஜ்பவன் அரசுக் குடியிருப்பில் வீடும், சம்பளமும் கிடைக்கும். துப்புரவுப் பணியாளராக இருந்த வெங்கட்ராமன் மறைந்தபிறகு அவரது மனைவி ரவணம்மா பணியில் சேர்க்கப்பட்டார். அவர் கோயம்பேடு மற்றும் பனையூர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கே பணி செய்ய மறுத்ததால், கட்டாயப்படுத்தி வெளியேற்றி னார்கள். 10 ஆண்டுகளுக்கும் மேல் துப்புரவுப் பணியாளராக வேலைபார்த்த முத்துலட்சுமி முதுகுத்தண்டு பிரச்னையால் சிகிச்சை பெற்று வந்தார். அவரால், ரமேஷ் சந்த் மீனா வீட்டில் வேலை பார்க்க முடியவில்லை. ‘இங்கே வேலை பார்த்தால்தான் அரசுக் குடியிருப்பு’ என ரமேஷ் சந்த் மீனாவின் மனைவி சொல்லிவிட்டதால் வேறு வழியில்லாமல் அரசுக் குடியிருப்பைக் காலி செய்துவிட்டு வெளியேறிவிட்டார். கவர்னர் மாளிகையில் வேலை செய்ய நியமிக்கப்பட்ட ஊழியர்களை, தங்கள் சொந்த வீடுகளுக்கு எப்படி அனுப்பி வைக்க முடியும்? முதல்வர் மனதுவைத்து எங்களைக் காப்பாற்ற வேண்டும்’’ என்றார்கள்.

கவர்னர் மாளிகை செயலகத்தில் விசாரித்தபோது ‘‘ரமேஷ் சந்த் மீனா மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். தற்காலிக ஊழியர்கள் பலர் ஒழுங்காக வேலை செய்யவில்லை. அதற்காக நடவடிக்கை எடுத்ததால் இப்படிச் சொல்கிறார்கள். ரமேஷ் சந்த் மீனாவின் வீடுகளுக்கு கவர்னர் மாளிகை ஊழியர்கள் பணிக்கு அனுப்பப்படுவது கிடையாது’’ என்றார்கள்.

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி,  சி.தேவராஜன் படம்: பா.காளிமுத்து