Published:Updated:

பிரம்மச்சர்யம்! கட்டாயப்படுத்துகிறதா ஈஷா?

பிரம்மச்சர்யம்! கட்டாயப்படுத்துகிறதா ஈஷா?
பிரீமியம் ஸ்டோரி
பிரம்மச்சர்யம்! கட்டாயப்படுத்துகிறதா ஈஷா?

சர்ச்சை

பிரம்மச்சர்யம்! கட்டாயப்படுத்துகிறதா ஈஷா?

சர்ச்சை

Published:Updated:
பிரம்மச்சர்யம்! கட்டாயப்படுத்துகிறதா ஈஷா?
பிரீமியம் ஸ்டோரி
பிரம்மச்சர்யம்! கட்டாயப்படுத்துகிறதா ஈஷா?
பிரம்மச்சர்யம்! கட்டாயப்படுத்துகிறதா ஈஷா?

ஷா மீது வரிசையாக விமர்சன ஈட்டிகள் பாய ஆரம்பித்து உள்ளன. ‘‘எனது மகள்களைத் திட்டமிட்டு சந்நியாசி ஆக்கிவிட்டார்கள். அவர்கள் இருவரையும் மீட்டுத்தாருங்கள்” என்று அரசிடமும் போலீஸிடமும் கோவை பேராசிரியர் காமராஜ் கூறியிருந்த புகாருக்கு இன்னமும் விடைகிடைக்காத நிலையில், அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் அணிவகுக்க ஆரம்பித்துள்ளன.

பேராசிரியர் காமராஜை தொடர்ந்து இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார் செந்தில். அவர் ஈஷா அமைப்பின் முன்னாள் ஊழியர். அவரை கோவையில் சந்தித்தபோது...

‘‘விரும்பத்தகாதவை நடந்தன!’’

“நான் ஈஷாவில் கடந்த 2005-ல் யோகா வகுப்புக்குப் போனேன். பின்னர், ஈஷாவோட மக்கள் தொடர்புக் குழுவில் பொள்ளாச்சி ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினேன். பொள்ளாச்சியில் மரம் நடுவிழா என்ற பெயரில், அந்தச் சின்னஞ்சிறு ஊரில் மட்டும் 15 லட்ச ரூபாய் வசூலித்துக் கொடுத்தேன். ஆனால், மரம் நடவே இல்லை. அதேபோல் ‘மகா சத்சங்கம்’ எனச்சொல்லி தமிழகத்தில் 18 ஊர்களில் நிகழ்ச்சிகள் நடந்தன. மகா சத்சங்கம் பெயரில் ஒரு சில மாதங்களில் 4 கோடி ரூபாய் வரை வசூலித்தனர். எதற்காக வசூலித்தோமோ, அதற்கு அதனைப் பயன்படுத்தவில்லை. இதுபோன்ற விரும்பத்தகாத பல நிகழ்வுகளால், மன வருத்தமாகி 2012-ல் ஈஷாவைவிட்டு வெளியேறினேன். அங்கு வருபவர்களைத் திட்டமிட்டே பிரம்மச்சர்யப் பாதைக்குத் திருப்புகிறார்கள். யாரிடம் வேலை வாங்கலாம். யாரைப் பிரம்மச்சர்யப் பாதைக்கு இழுக்கலாம் என்பது திட்டமிடப்படும். ஒரு முறை வகுப்பு முடிந்த உடன் என்னிடம்,  ஒரு சிறுவன் பெயரைச்சொல்லி, ‘அவனைப் இழுத்திடலாமா?’ என சுவாமி ஒருவர் கேட்டார். ‘குடும்பத்துக்கு ஒரே பையன் சாமி. அவன், வேண்டாம்’ என்றேன். ‘நானும் ஒத்தப்பையன்தான்’ என அவர் சொன்னார். இதெல்லாம் எனக்கு மிக உறுத்தலாக இருந்தது. ஈஷாவில் இருக்கும் சுவாமிகள், ஆசிரியர்கள், முழு நேரத் தன்னார்வலர்கள் எனப் பெரும்பாலானோர் மன அழுத்தத்துக்கு ஆளாகி, சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள்” என்று சொன்னார் செந்தில்.

‘‘செந்தில் மகன் மீதே புகார்கள் உண்டு!”

செந்தில் தெரிவித்த புகார்கள் தொடர்பாக ஈஷா தரப்பில் சுவாமி ஏகா என்பவரிடம் விளக்கம் கேட்டோம். அவர் கடிதம் மூலம் விளக்கியிருந்தார். “பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் செந்தில். அவரது மகன் நிக்கேந்திர மணிகண்டன் ஈஷா ஹோம் ஸ்கூலில் சில வருடங்களுக்கு முன்பு 10-ம் வகுப்புப் படித்தார். அவர் சக மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாலும் அவரது நடத்தை சரியில்லாத காரணத்தினாலும் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார். இதை ஏற்றுக்கொள்ள முடியாமல், ஈஷா மீது பழிவாங்கும் நோக்கத்துடன் செந்தில் குற்றம் சுமத்துவதுடன் அவதூறும் பரப்பி வருகிறார். அவர் பேசுவது முதல் முறை அல்ல... அவர் பேசியிருப்பது வேடிக்கையாகவும் வருத்தம் அளிப்பதாகவும் உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

‘‘சித்ரவதை செய்தார்கள்!”

ஈஷாவில் உள்ள பள்ளி, சித்ரவதைக்கூடமாக செயல்படுவதாக மதுரையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவலர் மகேந்திரன் கூறுகிறார். அவரிடம் நாம் பேசினோம். “எனது மூத்த மகனை ரூ.5.20 லட்சம் செலுத்தி 2012-ம் ஆண்டு ஈஷா பள்ளியில் சேர்த்தேன். 2014-ல் எனது இளைய மகனை ஏழு லட்ச ரூபாய் செலுத்தி அதே பள்ளியில் சேர்த்தேன். ஒரு நாள் ஈஷாவில் இருந்து எனக்கு போன் வந்தது. ‘உங்கள் இளைய மகனின் நடவடிக்கை சரியில்லை. அவனுக்கு அதிக கோபம் வருகிறது. படிப்பு ஏறவில்லை. உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்’ என்று சொன்னார்கள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. குழந்தைகள் மனநல மருத்துவர்கிட்ட கவுன்சலிங் கொடுத்தோம். கவுன்சலிங் முடிந்த உடனே, ‘உங்க குழந்தைகளை ஈஷா ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு போயிடுங்க’ என்று மட்டும் மருத்துவர் சொன்னார். காரணத்தைச் சொல்ல மறுத்துவிட்டார். அதற்குப் பிறகு, மதுரையில்  வேறொரு ஸ்கூலில் சேர்த்துவிட்டேன்” என்றவரிடம்,

‘‘பள்ளியில், உங்கள் குழந்தைகள் என்ன மாதிரியான சித்ரவதைகளை அனுபவித்தனர்’’ எனக் கேட்டோம். ‘‘அதை என் மகனிடமே கேளுங்கள்’’ என்றார்.

மகேந்திரன் மகன், “சின்னத் தப்புச் செஞ்சாக்கூட ‘சேவா’ என்கிற பெயரில் தண்டனை கொடுப்பாங்க. தண்டனைக்குள்ளான பசங்க, மத்த பசங்கனு பிரிச்சி வெச்சிருப்பாங்க. தண்டனைக்கு உள்ளான பசங்களுக்கு உப்பில்லாத சாப்பாடும், மத்தவங்களுக்கு நல்ல சாப்பாடும் போடுவாங்க. சேவா

பிரம்மச்சர்யம்! கட்டாயப்படுத்துகிறதா ஈஷா?

தண்டனைங்கறது கழிவறையைச் சுத்தம் செய்வது, மாட்டுச்சாணம் அள்ளவைப்பது, மையத்தில் உள்ளவர்களின் துணிகளைத் துவைத்துத் தருவது, வெளிநாட்டவர் தங்கியுள்ள அறைகளைச் சுத்தம் செய்யவைப்பது எனப் போகும். இதுபோக தினமும் 100 தோப்புக்கரணங்களில் இருந்து 500 தோப்புக்கரணங்கள் வரை போடணும். இந்த மாதிரி நிறைய சித்ரவதைகள் ஸ்கூல்ல கொடுத்திருக்காங்க. வீட்டுக்கு லெட்டர்ல இதையெல்லாம் எழுத முடியாது. லெட்டரைக்கூட இவங்க பாத்துட்டுதான் அனுப்புவாங்க” என்றார் அச்சத்தோடு.

‘‘மூளைச்சலவை செய்கிறார்கள்!”

கடந்த திங்கள் கிழமை காலையில்  ஈஷா நிர்வாகம் மீது மற்றொரு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளார். அவரிடம் பேசினோம். “சிங்கப்பூரில் பணிபுரிந்த எனது மகன் ரமேஷ், ஈஷா யோகா வகுப்புக்கு சென்றார். ஆனால் அங்கேயே தங்கிவிட்டார். எனது மகனை மூளைச்சலவை செய்தோ, ஊக்க மருந்து கொடுத்தோ ஈஷா நிர்வாகத்தினர் வைத்திருக்கின்றனர். மகனைத் தனியாகப் பார்த்துப் பேசக்கூட ஈ‌ஷா மையத்தினர் விடுவதில்லை. எனது மகனை மீட்டு, மனரீதியான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது தாய், தந்தையின் மறைவுக்குக்கூட  என் மகன் வரவில்லை. எனது கணவர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் அவரைச் சந்திக்கக் கூட விடாமல் ஈஷா நிர்வாகத்தினர் அடைத்து வைத்திருக்கின்றனர்’’ என்றார் கண்ணீருடன்.

‘‘கட்டாயப்படுத்துகிறோமா?”

இப்படித் தொடர் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து இது சம்பந்தமான கேள்விகளைத் தொகுத்து ஈஷா மையத்துக்கு அனுப்பினோம். ஈஷா யோகா மையத்தின் மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இருந்து மின்னஞ்சல் மூலம் நம் கேள்விகளுக்கு ஈஷா நிர்வாகம் பதில் அளித்திருந்தது.

“ஈஷாவுக்கு எதிரான தவறான தகவல்களையும் புகார்களையும் ஊடகங்களுக்குக் கொடுத்துவரும் நபர்கள் மற்றும் குழுக்கள் ஈஷாவின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் ஒரே நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார்கள்.

பிரம்மச்சர்யம்! கட்டாயப்படுத்துகிறதா ஈஷா?

ஈஷா அறக்கட்டளைக்கு மக்கள் கொடுக்கும் நன்கொடைகளுக்கு முறையான ரசீது வழங்கப்பட்டு முறையாகக் கணக்கு வைக்கப்பட்டு அரசின் பல்வேறு துறைகள் மூலம் தணிக்கை செய்யப்படுகிறது. இதில் எந்தவித முறைகேடோ, கையாடலோ நடைபெறவில்லை.

ஈஷா அறக்கட்டளையின் தலைமை இடமாகச் செயல்படும் ஈஷா யோகா மையம் ஊடகத்துக்கும், அரசுத் துறைகளுக்கும், சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.

ஈஷா யோகா மையத்தில் இல்வாழ்க்கை மற்றும் துறவற வாழ்க்கையில் உள்ள 1,600 பேருக்கு மேல் சிறந்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் வாழ்கின்றனர்.

ஈஷா யோகா மையத்தில் உள்ள குருகுல வேத பாடசாலையும் ஈஷா ஹோம் ஸ்கூலும் அரசின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டே செயல்படுகிறது. இந்த இரு கல்விக்கூடங்களைப் பற்றி அவதூறாகப் பேசும் பெற்றோர்கள், மாணவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையின் விளைவாக ஊடகங்களின் அவதூறு பிரசாரத்தைப் பயன்படுத்தித் தாங்களும் தங்கள் பங்குக்கு அவதூறைப் பரப்பும் முயற்சியே அன்றி வேறொன்றும் இல்லை. இந்தக் கல்விக்கூடங்களில் இருந்து கல்வி முறையாக முடித்துச் சென்ற பல்லாயிரக்கணக்கான மாணவர்களோ, அவர்களின் குடும்பங்களோ இதன் மீது மிகுந்த நன்மதிப்பைக் கொண்டுள்ளனர்.

சத்தான சாத்வீக உணவும், தினசரி யோகாவும் இங்கு வாழும் மக்கள் மட்டுமல்லாமல் உலகில் உள்ள 2 கோடிக்கும் மேற்பட்ட ஈஷா தன்னார்வத் தொண்டர்களின் நல்வாழ்வுக்கு வழி வகுத்துள்ளது. இத்தகைய ஆரோக்கியமான உடலும் மனமும் இங்கு வாழும் மக்களையும், உலகின் பல கோடி மக்களையும் மிகுந்த உத்வேகத்துடனும், மன உறுதியுடனும் அயராது அலுவல்களை மேற்கொள்ளும் விதம் எந்தத் தொழிலும் செய்யாமலும், அரசின் காவல் பணியினை ராஜினாமா செய்தவருக்கு நிச்சயம் அதிக வேலையாகத்தான் இருக்கும்.

ஈஷா யோகா மையத்துக்கு முழு நேர தன்னார்வத் தொண்டராகப் பணியாற்ற ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விண்ணப்பம் கொடுக்கின்றனர். அதில், ஒரு சிலரே முழுநேரப் பணியாற்றத் தேர்வாகின்றனர். அப்படித் தேர்வாகும் நபர்கள் இல்வாழ்க்கை அல்லது துறவற வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பது அவரவர் சுய விருப்பமே.

ஈஷா மேற்கொண்டுள்ள சமூக நலப்பணிகளான பசுமைக் கரங்கள் திட்டம், கிராமப்புற இலவச மருத்துவத் திட்டம், கிராமப்புற கல்வித் திட்டம், ஈஷா வித்யா, அரசுப் பள்ளி தத்தெடுப்புத் திட்டங்களில் தொண்டாற்றவோ அல்லது யோகா பயிலவோ வரும் வெளிநாட்டினர் முறையாக அதற்குரிய விசாக்களைப் பெற்று, காவல் துறை அலுவலகத்தில் பதிவுசெய்து பராமரிக்கப்பட்டு வருகிறது” என்று  ஈஷா நிர்வாகம் தெரிவித்திருந்தது.

ஈஷாவில் மெர்க்குரி பயன்பாடு, அனுமதி பெறாமல் பள்ளி இயங்குவதாக எழுந்த புகார், 14 வயது மாணவர்களுக்கு தீட்சை கொடுப்பதாக எழுந்த புகார் உள்ளிட்ட நம் கேள்விகளுக்கு நேரடியாக விளக்கம் அளிக்கப்படவில்லை.

- ச.ஜெ.ரவி, படங்கள்: தி.விஜய்