Published:Updated:

"செத்துப்போ என தீக்குச்சியைக் கொளுத்திப் போட்டார்!"

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"செத்துப்போ என தீக்குச்சியைக் கொளுத்திப் போட்டார்!"
"செத்துப்போ என தீக்குச்சியைக் கொளுத்திப் போட்டார்!"

காரோடு மனைவியை கொன்றாரா கணவன்?

பிரீமியம் ஸ்டோரி
"செத்துப்போ என தீக்குச்சியைக் கொளுத்திப் போட்டார்!"

சென்னை நந்தனம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு முதலாவது பிரதான சாலை அருகே நின்றுகொண்டு இருந்த கார், திடீரென தீப்பிடித்து எரிந்தது. கார்கள் இப்படித் திடீரென தீப்பிடித்து எரிவது சகஜம் ஆகிவருவது அனைவரும் அறிந்ததுதான். எனவே, பெரிய பரபரப்பு இல்லாமல் அப்போது அது பார்க்கப்பட்டது. ஆனால் உள்ளே ஒரு பெண் எரிந்துகொண்டு இருப்பதுதான் பதற்றத்தை அதிகம் ஆக்கியது. அந்தப் பெண்ணை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார்கள் அக்கம்பக்கத்தினர். படுகாயத்துடன் படுக்கவைக்கப்பட்டு இருந்த அவரை போலீஸார் வந்து விசாரணை நடத்தியபோது... அவர் சொன்னது போலீஸை உறையவைத்தது.

‘‘என் பெயர் பிரேமா. என்னை எனது கணவர் நாகராஜே உயிரோடு எரித்துக் கொலை செய்ய முயற்சித்தார்” என்று அந்தப் பெண் சொன்னார். அப்போதுதான் தெரிந்தது நடந்தது கார் எரிப்பு அல்ல, ஆள் எரிப்பு என்று!

சென்னை தியாகராய நகரில் கால்டாக்சி டிரைவராக இருக்கிறார் நாகராஜ். அவர் மனைவிதான் இந்த பிரேமா. இவர்களுக்கு யஷ்வந்த், நிஷந்த்ராஜ் என்று இரண்டு மகன்கள். இவர்கள் நான்கு பேரும் காரில் போய் இருக்கிறார்கள்.  ‘‘கார்ல போனபோது, நாகராஜுக்கும் பிரேமாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ‘பிள்ளைகளையும், என்னையும் சம்பாதித்து காப்பாற்ற வழியில்ல.... உனக்கு எதுக்குடா கல்யாணம்’ என்று பிரேமா திட்டி இருக்கிறார். ‘உன்னோடு வாழ்றதைவிடச் செத்துப்போகலாம்’ என்றபடியே காருக்குள் பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த  பெட்ரோலை எடுத்துத் தன் மீது ஊற்றியிருக்கிறார். மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த கணவர் நாகராஜ், ‘செத்துப்போ’ எனக் கூறியபடி தீக்குச்சியை உரசி மனைவி மேல் போட்டுவிட்டு, காரில் இருந்து இறங்கி ஓடிவிட்டார்” என்று பிரேமா தனது வாக்குமூலத்தில் சொன்னதாக ஒரு போலீஸ் அதிகாரி சொன்னார். ‘‘என்னை எரித்துக் கொலை செய்ய முயற்சித்தது நாகராஜ்தான்” என்று மூன்று முறை சொன்னாராம் பிரேமா.

நாகராஜை கைதுசெய்துள்ளது போலீஸ். காரில் அவர்கள் இருவரோடு இருந்த குழந்தைகள் இருவரும் தீக்காயங்களுடன் தப்பி விட்டார்கள். ‘‘நான்தான் குழந்தைகளை மீட்டேன்” என்று நாகராஜ் சொல்கிறார். ‘‘பிரேமாதான் அந்தக் குழந்தைகளை வெளியில் தள்ளிவிட்டார்” என்று போலீஸார் சொல்கிறார்கள். போலீஸாரிடம் நாகராஜ் அளித்த வாக்குமூலத்தில், ‘‘பிரேமா என்னிடம் பேசிக்கொண்டு இருந்தபோதே தற்கொலை செய்துகொண்டார். அவரே பெட்ரோலை வாங்கி மறைத்து வைத்திருந்தார்” என்று சொல்லி இருக்கிறார்.

"செத்துப்போ என தீக்குச்சியைக் கொளுத்திப் போட்டார்!"

மனைவியை எரித்துக்கொல்லும் அளவுக்கு கணவன், மனைவிக்கு இடையே என்னதான் பிரச்னை என்று அவர்களது குடும்பத்தினரிடம் கேட்டோம். “பிரேமாவுக்கும் அவரது உறவினரான ஆட்டோ டிரைவர் சுரேஷுக்கும் 2002-ல் திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இரண்டு ஆண்டுக்குள் அவர்கள் பிரிந்துவிட்டனர். பின்னர், பெண் குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்த பிரேமா, எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலைபார்த்தார். அப்போது பிரேமாவும் கால்டாக்சி டிரைவர் நாகராஜும் காதலித்தனர். இருவருக்கும் 2009-ல் திருமணம் நடந்தது. சந்தோஷமாக குடும்பம் நடத்தினர். இவர்களுக்கு யஷ்வந்த், நிஷந்த்ராஜ் ஆகிய இரண்டு குழந்தைகள் பிறந்தன. நாகராஜ் ரூ.3 லட்சம் வரை கடன் வாங்கி இருக்கிறார். இதுதான் கணவன், மனைவிக்கு இடையே பிரச்னையை ஏற்படுத்தியது. கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், பிரேமா தாய் வீட்டுக்கு வந்தார். நாகராஜ் மீது பிரேமா தேனாம்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் ஏற்கெனவே புகார் கொடுத்தார். போலீஸார் இருவரையும் சமரசப்படுத்தினர். வீட்டுக்கு வந்த பிறகும் கடன் பிரச்னை தலைதூக்கக் குழந்தைகளை அழைத்துக்கொண்டு மீண்டும் தாய் வீட்டுக்கு வந்துவிட்டார் பிரேமா. சில நாட்கள் கழித்து நாகராஜுக்கு போன் செய்து தன்னை அழைத்துச் செல்லும்படி கூறினார். காரில் மனைவி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு நாகராஜ் 7-ம் தேதி காலை 11 மணிக்குப் புறப்பட்டார். அதன் பின்னர்தான் இந்தக் கொடூரம் நடந்துள்ளது” என்கிறார் பிரேமாவின் நெருங்கிய உறவினர் ஒருவர். 

"செத்துப்போ என தீக்குச்சியைக் கொளுத்திப் போட்டார்!"

தேனாம்பேட்டையில் உள்ள பிரேமாவின் அம்மா அமராவதியிடம் பேசினோம். “நாகராஜுவின் அம்மா, அவருக்கு இன்னொரு திருமணம் செய்யத் திட்டமிட்டு இருந்தார். அம்மாவின் பேச்சைக் கேட்டு பிரேமாவை நாகராஜ் கொலை செய்து விட்டார்” என்று கதறுகிறார். சைதாப்பேட்டை போலீஸார், “பிரேமா கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் நாகராஜை கைதுசெய்துள்ளோம்.” என்கிறார்கள்.

இந்தச் சம்பவம் நடந்தபோது, பிரேமாவின் குழந்தைகள் இரண்டு பேரும் உடன் இருந்தார்கள். ஒரு பையனின் வயது 7. இன்னொரு பையனின் வயது 4. இவர்களிடம் போலீஸ் விசாரித்துள்ளது. ‘அப்பாதான் அம்மாவுக்குத் தீவைத்தார்’ என்று ஒரு தடவை சொல்லி இருக்கிறார்கள். ‘அம்மா அவங்களாவே தீ வைத்துக்கொண்டார்கள்’ என்று இன்னொரு தடவை சொல்லி இருக்கிறார்கள். இப்படி மாறிமாறிச் சொல்வதால் போலீஸுக்குக் குழப்பம் கூடுகிறது.

கணவன், மனைவி பிரச்னை பூதாகரம் ஆகி காருக்குள்வைத்து கொலை செய்யும் அளவுக்குக் கொடூரங்கள் கூடிக்கொண்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

- எஸ்.மகேஷ், படங்கள்: ப.சரவணகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு