Published:Updated:

சென்னையில் துப்பாக்கியால் சுட்ட கொள்ளையன்! - பீதியில் உறைந்த வங்கி வாடிக்கையாளர்கள் 

எஸ்.மகேஷ்
சென்னையில்  துப்பாக்கியால் சுட்ட கொள்ளையன்! - பீதியில் உறைந்த வங்கி வாடிக்கையாளர்கள் 
சென்னையில் துப்பாக்கியால் சுட்ட கொள்ளையன்! - பீதியில் உறைந்த வங்கி வாடிக்கையாளர்கள் 

கொள்ளையன் தப்பிச்செல்ல முயன்றபோது துப்பாக்கியால்  சுட்டதால், பொதுமக்களும் வங்கி ஊழியர்களும் பீதியில் உறைந்தனர். 

 சென்னை அடையாறு இந்திரா நகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், இன்று பிற்பகல் துப்பாக்கியோடு பீகாரைச் சேர்ந்த சுனிப் யாதவ் என்ற கொள்ளையன் நுழைந்தான். பிறகு அவன், வங்கி கேஷியரின் அருகில் சென்றான். பணத்தைக் கேட்டு துப்பாக்கியைக் காட்டி மிரட்டினான். பயத்தில் உறைந்த கேஷியர், 6 லட்சம் ரூபாயை எடுத்துக் கொடுத்துள்ளார். பிறகு, அதை சட்டைக்குள் நுழைத்த சுனிப் யாதவ், தன்னுடைய இரண்டு கைகளிலும் துப்பாக்கியைப் பிடித்தவாறு வாடிக்கையாளர்களையும் வங்கி ஊழியர்களையும் மிரட்டியபடி வெளியில் சென்றான்.

வங்கி வாசலில் நிறுத்தப்பட்டிருந்த டூவீலரில் ஏறினான். கொள்ளையனைப் பின்தொடர்ந்து சென்றவர்கள் அவனைப் பிடிக்க முயன்றனர். டூவீலரில் ஏறிய சுனிப் யாதவ், பைக்கை ஸ்டார்ட் செய்தான். அப்போது, எதிர்பாராதவிதமாகத் துப்பாக்கியிலிருந்த குண்டு தரையில் பாய்ந்தது. இதனால், அவனைப் பிடிக்கச் சென்றவர்கள் மீண்டும் வங்கிக்குள் ஓடினர். மேலும், அந்தப் பகுதியில் நின்றவர்கள் அலறியடித்து ஓடத்தொடங்கினர். அதன்பிறகு, டூவீலரை ஸ்டார்ட் செய்ய சுனிப் யாதவ் முயன்றபோது, திடீரென அவனை இரண்டு போக்குவரத்து போலீஸார் மறைந்திருந்து தாக்கினர். இதில் நிலைதடுமாறி அவன் கீழே விழுந்தான்.

அடுத்த நிமிடத்தில், போலீஸார் துப்பாக்கிகளைப் பறித்தனர். இன்னொருவர், சுனிப் யாதவ்வின் கைகளை மடக்கிப்பிடித்தார். அதற்குள் பொதுமக்கள் அங்கு திரண்டு, கொள்ளையனை சரமாரியாகத் தாக்கினர். இதில், அவனது மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது. கொள்ளையனை மீட்டு, ஆட்டோவில் அடையாறு போலீஸ் நிலையத்துக்குக் கொண்டுசென்றனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "வங்கியில் கொள்ளையடித்த சுனிப் யாதவ், சென்னை கேளம்பாக்கத்தில் குடியிருந்துவருகிறான். இரண்டு நாட்டுத் துப்பாக்கிகளைக் கொண்டுவந்து, கொள்ளையில் ஈடுபட்டுள்ளான். அவன் மட்டும்தான் வந்தானா இல்லை அவனுடன் வேறு யாரும் வந்தார்களா என்று விசாரித்துவருகிறோம். கேளம்பாக்கத்துக்கு போலீஸ் டீம் சென்றுள்ளது. கொள்ளையன் வந்த சமயத்திலிருந்து அவன் புறப்பட்டுச்செல்லும் வரை நடந்த சம்பவங்களை சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்துவருகிறோம்" என்றனர். 

கொள்ளையனைப் பிடித்த மூன்று போக்குவரத்து போலீஸார், இரண்டு பொதுமக்கள் ஆகியோரை சென்னை போக்குவரத்து இணை கமிஷனர் சுதாகர், பாராட்டியதோடு வெகுமதியும் அளித்தார். 

 கொள்ளையனைத் துணிச்சலாகப் பிடித்த போக்குவரத்து போலீஸாரை பொது மக்களும் போலீஸ் உயரதிகாரிகளும் பாராட்டினர்.