வெளியிடப்பட்ட நேரம்: 12:21 (24/04/2018)

கடைசி தொடர்பு:13:53 (24/04/2018)

டெல்லி அருகே... ஓடும் காரில் இன்னொரு நிர்பயா..!

கிரேட்டர் நொய்டாவில், ஓடும் காரில் பள்ளி மாணவியிடம் அவரின் வகுப்புத் தோழன் மற்றும் அவரின் நண்பர்கள் என மூன்று பேர் அத்துமீறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் இரண்டு பேரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். 

வன்கொடுமை

நொய்டாவில் உள்ள தனியார் பள்ளியில், பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார் ரம்யா (பெயர் மாற்றம்). கடந்த வாரம், புதன்கிழமை பள்ளி முடிந்து வெளியில் வந்த ரம்யா, வழக்கமாகச் செல்லும் பள்ளி வேனைத் தவறவிட்டார். இதனால், வீட்டுக்குச் செல்ல வழியில்லாமல் தவித்தார். பிறகு நடந்து அவர், வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். 

அப்போது, அவ்வழியாகக் காரில் ரம்யாவின் வகுப்புத் தோழன் வந்தார். காரை நிறுத்திய அவர், ரம்யாவை அழைத்துக்கொண்டு சென்றார். காரில் ரம்யாவின் வகுப்புத் தோழனின் நண்பர்கள் இரண்டு பேர் இருந்துள்ளனர். மொத்தம் நான்கு பேர் அந்தக் காரில் பயணித்துள்ளனர். 

கார் வேகமாகச் சென்றுகொண்டிருந்தபோது ரம்யாவிடம் அவர்கள் அத்துமீறியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் காரை நிறுத்தும்படி ரம்யா கதறியுள்ளார். ஆனால், அவரது அபயக்குரல் யாருக்கும் கேட்கவில்லை. காரில் இருந்தவர்கள் ரம்யாவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மூன்று மணி நேரத்துக்குப் பிறகு ரம்யாவை காரிலிருந்து கீழே தள்ளிவிட்டுவிட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். 

சாலையின் ஓரத்தில் மயங்கிக் கிடந்த ரம்யாவை அவ்வழியாகச் சென்றவர்கள் மீட்டுள்ளனர். தொடர்ந்து போலீஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார், ரம்யாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். அதன்பிறகு அவரிடம் விசாரித்துள்ளனர். விசாரணையில், ரம்யா, காரில் நடந்த முழு விவரத்தையும் சொல்லியிருக்கிறார். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `காரில் ரம்யாவை அழைத்துக்கொண்டு சென்ற அவரது வகுப்புத் தோழன், போதைப் பொருளைச் சாப்பிட கட்டாயப்படுத்தியுள்ளனர். அப்போது, அவர்களிடம் ரம்யா போராடி தோற்றுப்போய் உள்ளார். அதன் பிறகுதான் ரம்யாவுக்கு அந்தக் கொடுமை நடந்துள்ளது. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ரம்யாவின் பள்ளித்தோழன், அவருடைய நண்பர்கள் என மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். இதில் இரண்டு பேர் இன்று எங்களிடம் சிக்கியுள்ளனர். ஒருவர் மட்டும் தலைமறைவாக இருக்கிறார்' என்றனர்.   

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு நிர்பயா என்ற மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தின் தாக்கம் ஓயாத நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.