Published:Updated:

"உங்களால ஸ்பெஷல் டீமோட பேரும் கெடுது!"- எஸ்.பியை அலெர்ட் செய்த விகடன் எக்ஸ்க்ளூசிவ் செய்தி #FollowUp

"உங்களால ஸ்பெஷல் டீமோட பேரும் கெடுது!"- எஸ்.பியை அலெர்ட் செய்த விகடன் எக்ஸ்க்ளூசிவ் செய்தி  #FollowUp
"உங்களால ஸ்பெஷல் டீமோட பேரும் கெடுது!"- எஸ்.பியை அலெர்ட் செய்த விகடன் எக்ஸ்க்ளூசிவ் செய்தி #FollowUp

"உங்களால ஸ்பெஷல் டீமோட பேரும் கெடுது!"- எஸ்.பியை அலெர்ட் செய்த விகடன் எக்ஸ்க்ளூசிவ் செய்தி #FollowUp

கோயில் நகரமான காஞ்சிபுரத்தை கொலைநடுங்கச் செய்தவர் தாதா ஸ்ரீதர். அவர் உயிரோடு இருக்கும்வரை அடங்கி இருந்த தியாகு, ஸ்ரீதரின் மறைவுக்குப் பின்னர் விஸ்வரூபம் எடுத்தார். கடந்த சில மாதங்களாக, ஸ்ரீதர் பாணியில் தலைமறைவாக இருந்து கொண்டு வியாபாரிகளை மிரட்டிவந்தார். தியாகுவின் போன் வந்தாலே பட்டு ஜவுளி வியாபாரிகள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் என எல்லோரும் அலறத் தொடங்கினார்கள். ஒரு சிலர் மட்டுமே புகார் கொடுக்க, கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றார் தியாகு. சில போலீஸாரின் துணையோடு ஜாமீனில் வெளிவந்த தியாகு, மீண்டும் தலைமறைவாக இருந்துகொண்டு தொழிலதிபர்களையும், வியாபாரிகளையும் மிரட்டத் தொடங்கினார். தியாகுவின் மிரட்டலுக்கு பயந்து சிலர் தலைமறைவான நிகழ்வுகளும் உண்டு. வேறு சிலர் தங்களின் செல்போன் எண்களை மாற்றினார்கள். கடந்த சில தினங்களுக்கு முன், மாமூல் கொடுக்காத ஜவுளிக்கடை அதிபர் ஒருவரின் கடையில் வேலை செய்பவர்களை, தியாகு தன் ஆள்களை அனுப்பிக் கத்தியால் வெட்டிய சம்பவம் காஞ்சிபுரத்தையே பதறச் செய்தது. இவ்வளவு கொடூரங்கள் அரங்கேறிய பின்னரும் காவல்துறையினரால் தியாகுவைப் பிடிக்க முடியவில்லை.

காஞ்சிபுரம் வட்டாரத்தில் உள்ளவர்களோ, ``எஸ்.பி-யின் ஸ்பெஷல் டீமில் உள்ள பெரும்பாலானோரும், காஞ்சிபுரம் சரகக் காவல்துறையினரும் தியாகுவுக்கு நெருக்கமாக இருப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம். ரவுடிகளுக்குப் பிரச்னை ஏற்படும்போது உடலில் காயம் ஏற்படுத்திக்கொள்ள அறிவுறுத்துவது, ஜாமீன் எடுக்க உதவுவது, தியாகு போன்றவர்களை அவர்களின் வீட்டிற்கே சென்று பார்ப்பது என ரவுடிகளுக்கும் காஞ்சிபுரம் போலீஸாருக்கும் இடையே ஒரு பாசப் பிணைப்பு இருந்து வருகிறது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி, ரவுடிகளைப் பிடிப்பதில் தீவிரமாக இருக்கிறார். ஆனால், அவருக்குக் கீழ் பணியாற்றும் பெரும்பாலான காவல்துறையினர் தியாகு போன்ற ரவுடிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதால் குற்றவாளிகளைப் பிடிக்க முடிவதில்லை” என ஆதங்கப்பட்டனர்.

தியாகு போன்ற ரவுடிகளைப் பிடித்துவிட வேண்டும் என எஸ்.பி. கடுமையாகப் பேசிவருகிறார். இதனால் ஸ்பெஷல் டீமில் உள்ளவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டதால், கோர்ட்டில் கடந்த வாரம் சரணடைந்தார் தியாகு. இந்த நிலையில் காஞ்சிபுரம் எஸ்.பி. ஸ்பெஷல் டீமில் உள்ள காவல் ஆய்வாளர் மணிமாறன், ஏட்டு சீனுவாசன் ஆகியோர் பேசிக் கொள்ளும் வீடியோ ஒன்றை தியாகுவிற்கு நெருக்கமான ஒருவர் நமது அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்.

இந்த ஆடியோ காவல்துறையினருக்கும், ரவுடிகளுக்கும் உள்ள நெருக்கத்தை அம்பலப்படுத்தி இருக்கிறது. அந்த ஆடியோவை சில

தினங்களுக்கு முன் விகடன் இணையதளத்தில் வெளியிட்டோம். காவல்துறையில் உள்ள சிலரின் முகத்திரையைக் கிழித்த இந்த ஆடியோ, காஞ்சிபுரம் மக்களைப் பதறவைத்தது. ‘அண்ணே… அண்ணே…’ என ரவுடி தியாகு காவல்துறையினரிடம் கொஞ்சிப் பேசுவதும், சொந்தக்காரரைப் போல தியாகுவைக் காவல்துறையினர் நலம் விசாரிப்பதும் அந்த ஆடியோவில் பதிவாகி இருந்தது. மேலும் ‘நீங்க சொல்லித்தான் கையையும் காலையும் உடைச்சிக்கிட்டேன்’ எனத் தியாகு சொல்வதும், `தீபாவளி முடிந்து வந்து டீமோட பார்க்கிறேன்’ என இன்ஸ்பெக்டர் மணிமாறன் சொல்வதும், காவல்துறைக்கும் தியாகுவிற்கும் உள்ள நெருக்கத்தை உறுதிப்படுத்தியது.

மேலும் இந்த ஆடியோ குறித்து சீனிவாசன் மற்றும் வாலாஜாபாத் காவல் ஆய்வாளர் மணிமாறன் ஆகியோரிடம் பேசினோம். அவர்களோ, ``நாங்கள் பேசி இருக்க வாய்ப்பு இல்லை. ஞாபகமும் இல்லை” என்று கூறியதைத் தொடர்ந்து, அவர்களுக்கும் ஆடியோவை வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தோம். ஆடியோவை அவர்கள் கேட்டபிறகு, மீண்டும் போன் செய்தோம். அவர்கள் போனை எடுக்கவே இல்லை. மேலும் விகடன் இணையதளத்தில் வெளியான அந்தச் செய்தி காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து எஸ்.பி சந்தோஷ் ஹதிமானி ஸ்பெஷல் டீமில் உள்ளவர்களிடம் `உங்களால என்னோட பேரும் சேர்ந்து கெடுது.

ஸ்பெஷல் டீமோட பேரும் கெடுது’ எனக் காட்டமாகப் பேசி இருக்கிறார். அடுத்தடுத்த ஆடியோக்களும் வெளியாகும் எனத் தியாகு தரப்பில் சொல்லப்பட்டிருப்பதால், ஸ்பெஷல் டீமில் உள்ளவர்களுக்கு அந்த ஆடியோ விவகாரம் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதைத் தொடர்ந்து ஸ்பெஷல் டீமில் உள்ள காவல்துறையினர் ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. `என்னதான் உதவினாலும் ரவுடி தன்னுடைய புத்தியைக் காட்டிடுவான். இனிமேல் இதுபோன்ற ரவுடிகளுடன் எந்த உறவும் வச்சுக்கக் கூடாது. அவங்களை பிடிச்சாதான் நம்ம மேல ஓரளவுக்கு நம்பிக்கை வரும்’ என்று சில முடிவை எடுத்திருப்பதாகக் காவல்துறை வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள். 

அதை உறுதிப்படுத்தும் வகையில் தியாகுவின் வலதுகரமான பிரபா என்பவரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். தியாகு சிறையில் இருக்கும் போது, அவரது வலதுகரமான பிரபா மூலம்தான் அனைத்து வேலைகளும் நடக்கும். தியாகுவிற்கு எல்லாத் தகவல்களையும் சொல்வது, மிரட்டிப் பணம் பறிப்பது எல்லாமே பிரபாதான். பிரபாவைக் கைது செய்ததைத் தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த பல ரவுடிகளையும் அடுத்தடுத்துக் கைது செய்யக் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

அடுத்த கட்டுரைக்கு