சென்னையில் கைது செய்யப்பட்ட ராக்கெட்ராஜா நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி சந்திரா உத்தரவிட்டார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அண்ணாநகரில் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர் செந்தில்குமார், வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். நிலப் பிரச்னை தொடர்பாக நடைபெற்ற இந்தக் கொலை வழக்கில், டாக்டர் பாலமுருகன், வழக்கறிஞர் பால கணேசன், ராக்கெட் ராஜா உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர்.
இதில், தலைமறைவாக இருந்தவர்களைப் பிடிக்க தனிப்படை போலீஸார் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்தநிலையில், ராக்கெட் ராஜாவை சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில், கடந்த 7-ம் தேதி விருகம்பாக்கம் போலீஸார் கைது செய்தனர். அங்கு அவர் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில், பேராசிரியர் செந்தில்குமார் கொலை வழக்கில் அவரை ஆஜர்படுத்துவதற்காக நெல்லை காவல்துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவையிலிருந்து அழைத்து வந்தனர். நெல்லையில் வன்கொடுமைத் தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சந்திரா முன்பு ஆஜர்படுத்தபட்ட அவரை, 3 நாள்கள் போலீஸ் காவலுக்கு அனுமதிக்க வேண்டும் என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.
அதற்கு ராக்கெட் ராஜா தரப்பில் ஆஜரான சென்னை ஐகோர்ட் வழக்கறிஞரான பால்கனகராஜ், இந்த வழக்கில் எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத அவரை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. அவருக்கும் இந்தக் கொலை சம்பவத்தும் தொடர்பு இல்லை என வாதிட்டார். இருப்பினும், 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். அவருடன் தினமும் வழக்கறிஞர் சந்திக்கலாம் எனவும் நீதிபதி அனுமதியளித்தார். ராக்கெட் ராஜாவை நீதிமன்றத்தில் வரும் 16-ம் தேதி மாலை ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.