Published:Updated:

புதைகுழியில் தள்ளும் பொய்ப் பிரசாரங்கள்!

புதைகுழியில் தள்ளும் பொய்ப் பிரசாரங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
புதைகுழியில் தள்ளும் பொய்ப் பிரசாரங்கள்!

சிறையில் இருந்து நளினி...

‘ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்’ என்ற தலைப்பில் நளினி எழுதி, பத்திரிகையாளர் பா.ஏகலைவன் தொகுத்த நூலின் 7-ம் பகுதி இது.

புதைகுழியில் தள்ளும் பொய்ப் பிரசாரங்கள்!

டந்த 2005 ஆண்டளவில் இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி குழுமம் நடத்திய கருத்துக் கணிப்பில் சுமார் 70 சதவிகிதம் பேரும், குமுதம் வார இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் சுமார் 80 சதவிகிதம் பேரும் என் விடுதலைக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனாலும் அரசு முன்பு எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கிவிட்டது. நீதிமன்றப் போராட்டங்கள் எல்லாமும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டன. என் விடுதலைக்கு ஆதரவாகச் செய்திகளைப் போட்டு வந்த பத்திரிகைகள் எல்லாம் தன் போக்கை மாற்றிக்கொண்டன.

மகாத்மா காந்தியின் வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருந்தவர் 16 வருடங்களில் விடுவிக்கப்பட்டார். அன்னை இந்திரா காந்தியின் கொலைவழக்கில் ஆயுள் கைதியாக இருந்தவர் 18 வருடங்களில் விடுவிக்கப்பட்டார். ஆனால் எனக்கு? இந்தத் தடையும் முட்டுக்கட்டையும் யாரால் வந்ததென்றால் எங்களாலேயேதான் வந்தது என்பதை ஒப்புக்கொள்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. எழுவர் விடுதலை என பிரசாரம், எழுவர் விடுதலைக்கான ஆதரவு, எழுவர் விடுதலைக்கான நிதிதிரட்டல் என செய்துகொண்டே அதில் ஒருவரைப் பற்றிமட்டும் அவதூறு பேசினால், ஒளிபரப்பினால் என்ன அர்த்தம்? அதற்குப் பெயர் எழுவர் விடுதலையா என்ற கேள்வியை உங்கள் முன்பாகவே வைக்கின்றேன். உணர்ச்சிவசப்படாமல் நடுநிலையோடு நீங்கள் யோசிக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். இந்த நிலையில் பிரியங்கா அவர்களுடன் திடீர் சந்திப்பு நடக்கிறது. அந்த சந்திப்புகூட நான் ஏற்படுத்திக் கொண்டதல்ல. அவராக வந்தார். யாரென்றே தெரியாமல் நான் அந்த அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். எனக்கெதிராக இப்படி எல்லாம் பிரசாரம் செய்யாமல் விட்டிருந்தால் ஒருவேளை என் விடுதலை 2008-க்கு முன்பே சாத்தியமாகி இருக்கலாம். அப்படி நடந்திருந்தால் இன்று மற்ற ஆறு பேரின் விடுதலைக்குமாக நான் உண்மையான குரலோடு பிரசாரம் செய்திருப்பேன். என் ஒருத்திக்கு எதிராக உருவாக்கப்படும் பிரசாரங்கள் மற்ற அறுவருக்கும் எதிராக வந்து நிற்கிறது என்ற உண்மையை ஒரு தரப்பு உணர மறுக்கிறது. இந்தப் போக்கு, ஒற்றுமையின்மை எல்லாம் எதிரிகளுக்குத்தான் வாய்ப்பாக முடியும் என்பதையும் அறிய மறுக்கிறார்கள். அதனால்தான், என் விரல்களைக் கொண்டு என் கண்களைக் குத்திக்கொள்ள வைத்துவிட்டார்கள் என்று சொல்கிறேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
புதைகுழியில் தள்ளும் பொய்ப் பிரசாரங்கள்!

இன்னொரு விஷயம். 2011-ல் மூவரின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். உடனே அந்த மூவருக்கான தூக்குத்தண்டனை தேதி குறிக்கப்பட்டது.  தமிழக மக்கள் கொந்தளித்தார்கள். ஆங்காங்கே போராட்டம் வெடித்தது. சட்டக்
கல்லூரி, அறிவியல் மற்றும் கலைக் கல்லூரி மாணவர்கள் எல்லாம் போராடினார்கள். இன்று நாங்கள் குலதெய்வமாக வரிந்துகொண்டிருக்கும் மகள் செங்கொடி தீக்குளித்தாள். மகள் செங்கொடியை இழந்த வேதனையில் இருந்தே மீளமுடியாமல் இருந்த எங்களுக்கு இப்படியான தம்பிகளின் உயிர்த்தியாக முனைப்பு உலுக்கி எடுத்தது.

புதைகுழியில் தள்ளும் பொய்ப் பிரசாரங்கள்!

இந்தக் களேபரத்துக்கு மத்தியில் ஒரு பச்சைத் துரோகமும் நடந்தது. என் கணவரையும் சாந்தனையும் வாழ்வின் கடைசிக்காலத்துக்கும் மட்டுமல்ல, இறந்த பிறகும் அவர்களை பழிச்சொல்லுக்கு ஆளாக்கும் ஒரு துரோகம் அது. அந்தப் பரபரப்பு சூழ்நிலையில் ஜனாதிபதிக்கு அவசர அவசரமாக மீண்டும் ஒரு கருணை மனு அனுப்ப வேண்டும் என வேலை செய்தார்கள். அப்படியான மனு கணவர் இருக்கும் சிறைக்குள் சென்று மூன்று தினங்கள் ஆகியிருந்தது. கடைசிநாள் அன்று மாலையில்தான், ‘நாளை காலையில் இந்த மனு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தாக வேண்டும். உடனடியாக கையெழுத்தைப் போடுங்கள்’ என்று கூறி சாந்தனிடமும் என் கணவரிடமும் வழங்கப்பட்டிருந்தது. படித்துப் பார்க்கக்கூட அவகாசம் கொடுக்கக்கூடாது என்பதில் திட்டமிட்டே தெளிவாகக் காய் நகர்த்தினார்கள். இவ்வளவு அவசரப்படுத்துவது ஏன் என யோசித்த என் கணவருக்கு ஏதோ சந்தேகம் வந்திருக்கிறது. படித்துப் பார்க்காமல் கையொப்பம் போடமுடியாது, முழுதும் வாசித்துவிட்டு போடுகிறேன் என்று கூறி 25 பக்கங்கள் அடங்கிய அந்த மனுவை வாங்கி வந்து இரவெல்லாம் படித்துப் பார்த்திருக்கிறார். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்ட அந்த மனுவில், என் கணவரும் சாந்தனும் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்வதாகவும், தாங்கள் தவறாக வழி நடத்தப்பட்டவர்கள் என்றும், ஈழப்போராட்டம் ஒரு பயங்கரவாதப் போராட்டம் என்பது உட்பட இன்னும் என்னென்னவோ எழுதப்பட்டிருக்கிறது. என் கணவருக்குப் படிக்கப் படிக்க ஒரே அதிர்ச்சி.

நம்மவர்கள்தானே கொடுக்கிறார்கள் என நம்பி படித்துப் பார்க்காமல் கையொப்பம் இட்டிருந்தால் எவ்வளவு பெரிய இழுக்காக மாறியிருக்கும். இந்த இனம் அந்த இருவரையும் காரித்துப்பியிருக்குமே? நினைக்க நினைக்க நெஞ்சு பதறியிருக்கிறது. இரவெல்லாம் படித்துப் பார்த்து, எங்கெல்லாம் துரோக வார்த்தைகள் இருந்ததோ, அதையெல்லாம் அழித்து மீண்டும் அங்கே கையால் எழுதி, திருத்தப்பட்ட படிவமாக அதிகாலையில் கொடுத்திருக்கிறார். இந்த தகவலை சாந்தனிடமும் தெரிவித்தார்.

சாந்தனோ, தூக்குக் கிடைத்தாலும் பரவாயில்லை. படிக்காமல் மனுவை கொடுக்க முடியாது என்று வேறு ஒரு நம்பிக்கையானவரை வைத்து திருத்தம்செய்து, மூன்று நாட்கள் கழித்துதான் அந்த மனுவை வெளியே கொடுத்தனுப்பினார். கொஞ்சம் விட்டிருந்தாலும் அதுவே அந்த இருவருக்குமான தூக்குக்கயிற்றை உறுதி செய்திருக்கும். இறந்தாலும் பரவாயில்லை. இன விடுதலைப் போராட்டத்தைப் பயங்கரவாத போராட்டம் எனக் கொச்சைப்படுத்திய துரோகிகள் என காலமும் தூற்றியிருக்குமே? நல்லவேளை, கடவுள் அருளால் தப்பினார்கள்.

பிறகு இதே வழக்கறிஞர் இன்னொரு உள்ளடி வேலையையும் செய்தார். தூக்கில் இருந்த மூவரைப் பற்றி பிரபல வார ஏட்டுக்கு பேட்டி கொடுத்தார். அதில் என் கணவரையும் சாந்தனையும் பற்றிக் குறிப்பிடும்போது, ‘அவர்கள் வெளிநாட்டுக்காரர்கள். விடுதலைப்புலிகள் அமைப்பில் கடுமையான ஆயுதப்பயிற்சியை எடுத்தவர்கள்’ என்று ஒரு கண்ணில் வெண்ணெய்யும் மறுகண்ணில் சுண்ணாம்பையும் தடவினார். ‘விடுதலைப்புலி இயக்கத்தில் உறுப்பினராக இருந்தார் என்பதாலோ, பயிற்சி எடுத்தவர் என்பதாலோ கொலை வழக்கில் சம்பந்தப்பட்டார் என கூறுவதை ஏற்க முடியாது’ என்று சங்கர் என்பவரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததை அந்த வழக்கறிஞர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எப்படியோ மூவரின் தூக்குக்கு எதிரான தடையாணை கிடைத்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் கூடியதை ஒரு காரணமாகக் கூறி, அந்த வழக்கை டெல்லி உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றினார்கள்.

சிறையில் இருந்த தொடக்க காலம் நாங்கள் மிகவும் வறுமையில் திண்டாடிக் கொண்டிருந்தோம். அந்த நேரம் பல உணர்வாளர்கள் பொருள் உதவியை செய்திருக்கிறார்கள். ஆனால், அந்த உதவிகள்கூட எங்களுக்கு வந்து சேரவேயில்லை. இடையில் இருந்தவர்கள் தடுத்து விட்டிருந்தார்கள். அதுகூட என் அம்மா, தம்பி உட்பட 19 பேர் விடுதலையாகி வெளியே சென்ற பிறகு எட்டு ஆண்டுகள் கழித்துதான் தாமதமாக எனக்குத் தெரிய வந்தது.

புதைகுழியில் தள்ளும் பொய்ப் பிரசாரங்கள்!

அதே போன்று பெண்கள் சிறையில் இருக்கும் என் நிலையிலும் ஒரு சிக்கல். உறவினர்கள், மற்றும் குறிப்பிட்ட மூன்று தலைவர்களைத் தவிர வேறு யாருமே வந்து சந்தித்தது இல்லை. சில தலைவர்கள், பிரமுகர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களை மணிக்கணக்கில் காக்கவைத்து, கடைசியாக நான் பார்க்க விரும்பவில்லை என்றுகூறி திருப்பி அனுப்பியதும் நடந்திருக்கிறது. அடுத்த முறை அவர்கள் பார்க்க வரக்கூடாது என்றவிதத்தில் நடந்திருக்கிறது. இந்தக் கொடுமையை எல்லாம் என்னவென்று கூறுவது? சமீபத்தில்கூட என் கணவர் மீதும் சாந்தன் மீதும் கொலைப்பழி சுமத்தி ஒரு இணையத்தில் செய்தி வெளியானது. அபாண்ட பழியால் நாங்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானோம். தாக்கியவரும், பாதிக்கப்பட்ட இருவரும் நீண்டகால நண்பர்களாக இருந்தவர்கள். தாக்கிய நபர் தமிழகத்தைச் சேர்ந்தவர். பிறகு ஏன் வடநாட்டு நபர் என்று திரித்துக் கூறினார்கள் என தெரியவில்லை. எப்படியோ அந்தப் பழியை பெரும்வலியோடு கடந்தோம். காரணம் பதில் உரைப்பதாக இறங்கி யாரையும் காயப்படுத்தக்கூடாது என்ற நல்லெண்ணம்தான். இப்படி தவிர்த்துவிட்டு கடந்து வந்த காயங்களே அதிகம்... போகட்டும்.

- சிறைவாசி நளினி

மகளிர் தனிச் சிறைச்சாலை. வேலூர்.

(நிறைவு)