Published:Updated:

திவாகரன் மகன் ஜெயானந்திடம் கள்ளத்துப்பாக்கி?

திவாகரன் மகன் ஜெயானந்திடம் கள்ளத்துப்பாக்கி?
பிரீமியம் ஸ்டோரி
News
திவாகரன் மகன் ஜெயானந்திடம் கள்ளத்துப்பாக்கி?

திவாகரன் மகன் ஜெயானந்திடம் கள்ளத்துப்பாக்கி?

ஜெயலலிதா இறுதி அஞ்சலி நிகழ்வில், சசிகலா குடும்பத்தினர் சூழ்ந்து நின்று ஆதிக்கம் செலுத்திய சர்ச்சையே இன்னும் அடங்கவில்லை. அதற்குள், ‘மன்னார்குடி சொந்தங்களின் கைகளில் கள்ளத்துப்பாக்கி விளையாடுகிறது’ என்று தீப்பொறியாய் பரவுகிறது இன்னொரு அதிரடி.

இந்த விவகாரம் குறித்துப் பேசும் முக்கியப் புள்ளிகள், ‘‘டெல்டா பகுதிகளில், கள்ளத் துப்பாக்கி வியாபாரம் செய்துவந்ததாக, ஜேம்ஸ் என்பவரைக் கைதுசெய்தனர் போலீஸார். விசாரணையில், இதுவரை அவர் யார் யாருக்கெல்லாம் கள்ளத்துப்பாக்கிகளை விற்றுள்ளார் எனப் பட்டியல் போட்   டிருக்கிறார்கள். அந்தப் பட்டியலில், சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெயானந்த் பெயரும் இருக்கவே, போலீஸாருக்கு ஏக ஷாக். செல்போன் பேச்சுக்கள், இரு தரப்புக்கிடையே பரிமாறிக்கொள்ளப்பட்ட வாட்ஸ் அப் புகைப்படங்களை வைத்துப்பார்த்த போலீஸார் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலிடத்து சமாசாரம் என்பதால், நடவடிக்கை எடுக்கமுடியவில்லை’’ என்றனர்.

திவாகரன் மகன் ஜெயானந்திடம் கள்ளத்துப்பாக்கி?

ஜேம்ஸை விசாரணை செய்துவரும் தஞ்சை க்ரைம் பிராஞ்ச் போலீஸார், ‘கள்ளத் துப்பாக்கி கைமாறிய கதை’யை நம்மிடம் விவரித்தனர். ‘‘ஜேம்ஸிடம் இருந்து கள்ளத் துப்பாக்கியை ஜெயானந்துக்கு வாங்கித்தந்தவர் தேவா. இவர், தென்சென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணிச் செயலாளர். இவர் தன்னை ‘லெனின்’ என்று ஜேம்ஸிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு துப்பாக்கி பற்றிய விவரங்களைக் கேட்டுள்ளார். ஜேம்ஸ் காட்டிய துப்பாக்கியைப் படம்பிடித்து ஜெயானந்துக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார். சென்னையில் இருந்த ஜெயானந்த் ‘ஓ.கே’ சொன்னதும் சில லட்சங்களில் பேரம் பேசி முடிக்கப்பட்டு, துப்பாக்கியை வாங்கிச் சென்றிருக்கிறார். இந்தக் கொடுக்கல் வாங்கலுக்காக சென்னையில் இருந்து  தஞ்சை சென்றுவந்த வகையில் மட்டும் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்திருக்கிறார்கள். தஞ்சாவூர் இடைத்தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த தேவாவை நேரில் பார்த்தபிறகுதான், லெனின் என்ற பெயரில், துப்பாக்கியை வாங்கிச் சென்றதே தேவா என்பது ஜேம்ஸுக்குத் தெரியவந்திருக்கிறது” என்றார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
திவாகரன் மகன் ஜெயானந்திடம் கள்ளத்துப்பாக்கி?

இதற்கிடையில், போலீஸிடம் மாட்டிக்கொண்ட ஜேம்ஸ், தன்னைக் காப்பாற்றுமாறு தேவாவிடம் கெஞ்சியதை அடுத்து, மேலிட உத்தரவின் பேரில், அமைச்சர் ஓ.எஸ்.மணியனே இந்த விவகாரத்தில் தலையிட்டு போலீஸாரோடு பேச்சுவார்த்தை நடத்தி விஷயத்தை ஆறப்போட்டிருக்கிறார் என்கிறார்கள் லோக்கல் அ.தி.மு.க-வினர்.

ஜெயானந்தின் நட்பு வட்டம் குறித்துப் பேசும் சிலர், ‘‘ஜெயானந்தை அவருடைய கூட்டாளிகள் எல்லோரும் ‘தளபதி’ என்றுதான் அழைப்பார்கள். ஃபேஸ்புக்கில் பிரமாண்ட அரிவாளை ஏந்தியபடி போஸ் கொடுப்பார். ஊர் அடங்குன ராத்திரி நேரத்துல சென்னை ரோடுகள்ல மரண வேகத்தில் கார், பைக் ரேஸ் நடத்துவார்கள். ரொம்பவும் போர் அடித்தால், ‘அ.தி.மு.க. தளபதி பேசுகிறேன்’ என்று அமைச்சர்களுக்கு போன் போட்டு கலாய்ப்பார். நடிகர்களோடு ஊரைச் சுற்றிவரும் பொழுதுபோக்கு களும் உண்டு’’ என்றனர்.

பதறவைக்கும் இந்தத் தகவல்களின் உண்மை நிலைகுறித்து அறிவதற்காக ஜெயானந்தைத் தொடர்புகொண்டோம். ‘‘அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு, ‘நான்தான் ஜெயானந்த்... நான்தான் விவேக்’ என்று எங்கள் குடும்பத்தினர் பெயர்களைச் சொல்லி வம்புசெய்கிறார்கள். 2011-ல் கல்லூரி ஒன்றில் இதுபோல் ஆள் மாறாட்டம் செய்தவர்களை போலீஸில் பிடித்துக் கொடுத்தோம். சமீபத்தில்கூட, என் பெயரையும், அப்பா பெயரையும் தவறாகப் பயன்படுத்தி ‘எம்.எல்.ஏ சீட்’ வாங்கித் தருவதாக மன்னார்குடி வந்திறங்கிய கும்பல் ஒன்றையும் போலீஸில் பிடித்துக்கொடுத்தோம். பைக் ரேஸில் ஆர்வம் உண்டுதான். ஆனால், நம்ம ஊர் ரோடு கண்டிஷனுக்கு ரேஸெல்லாம் போகமுடியுமா? அரிவாள் பற்றி கேட்டீர்கள். அது எங்கள் குலதெய்வம் மதுரை வீரனுக்கு வருடாவருடம் சாத்திவருகிறோம்; அப்போது எடுத்தப் போட்டோதான் அது.  லைசென்ஸுடன் கூடிய ‘0.32 பெரேட்டா பிஸ்டல்’ என்னிடம் இருக்கும்போது, நான் ஏன் கள்ளத்துப்பாக்கி வாங்கப் போகிறேன்? இன்றைய டெக்னாலஜி உலகில், உங்களுடைய செல்போன் எண்ணிலேயே நானும் ஒரு டபுள் சிம்கார்டு போட்டு வைத்துக்கொள்ளலாம். பின்னர் உங்களது செல்போன் எண்ணிலிருந்து அழைத்தது மாதிரியாகவோ அல்லது ஒருசில மெசேஜ் வந்தது மாதிரியாகவோ கால் லாக் செய்துகொள்ளும் வசதியெல்லாம் இருக்கிறது. அதனால்,  இதுபோன்ற குற்றச்சாட்டுக்களைச் சொல்பவர்கள் எந்த அடிப்படையில் சொல்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை’’ என்றார் ஜெயானந்த்.

- த.கதிரவன்