Published:Updated:

பயிரும் கருகுது... உயிரும் கருகுது! - பாலைவனம் ஆகும் தமிழ்நாடு

பயிரும் கருகுது... உயிரும் கருகுது! - பாலைவனம் ஆகும் தமிழ்நாடு
பிரீமியம் ஸ்டோரி
News
பயிரும் கருகுது... உயிரும் கருகுது! - பாலைவனம் ஆகும் தமிழ்நாடு

ஓவியம்: சந்தோஷ் நாராயணன்

பயிரும் கருகுது... உயிரும் கருகுது! - பாலைவனம் ஆகும் தமிழ்நாடு

ழும் மூன்று குழந்தைகளை சமாதானம் செய்வதற்காக தனது கண்ணீரைக் கட்டுப்படுத்துகிறார் சாவித்திரி. ஆனாலும் விழியின் கரை தாண்டி வழிகிறது கண்ணீர். வறண்ட காவிரியைப் பார்த்து வாழ்வை மாய்த்துக்கொண்ட விவசாயி ராஜேஷ் கண்ணாவின் குடும்பம் அது. தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே திருப்பந்துருத்தி கிராமம். சிதைந்த ஓட்டுக்கூரை வீட்டில், தொலைந்துபோன தன் எதிர்காலத்தைத் தேடியபடி இருக்கிறார் சாவித்திரி. தற்கொலை செய்துகொண்ட கணவரின் நினைவுகள் ஒருபுறம் அழுத்த, கணவர் விட்டுச் சென்ற ஒன்றே முக்கால் லட்சம் ரூபாய் கடன் வட்டியோடு வந்து இன்னொரு பக்கம் பயமுறுத்துகிறது.

இது ஒரு குடும்பத்தின் வலி மட்டுமல்ல... காவிரி டெல்டா மட்டுமின்றி தமிழகத்தின் அநேக மாவட்டங்களில் விவசாயிகளின் நிலைமை இதுதான். ‘உலகுக்கே உணவு தருகிற உன்னதமான பணியைச் செய்கிறோம்’ என்ற பெருமிதத்தில் இருக்கும் விவசாயியை அந்த நிலமே பிளந்து உள்வாங்கிக்கொள்வதைப் போன்ற துயரம் வேறு உண்டா?கடந்த 140 ஆண்டுகளில் இல்லாதபடி மிக மோசமான அளவுக்கு மழை பொய்க்க, காவிரி உட்பட தமிழகத்தின் அனைத்து நதிகளிலும் தண்ணீர் வராமல் போக, ஒட்டுமொத்தமாக விவசாயம் கெட்டு, பலரின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கி உள்ளது. தண்ணீர் இல்லாமல் பயிர் கருக, விவசாயிகளின் உயிரும் கருகிக்கொண்டிருக்கிறது. வெறும் எண்ணிக்கையாகக் கூட்டிக் கழித்து கடந்துபோகும் விஷயம் இல்லை இது! விபரீதம் என்னவென்றால், பலரின் மரணத்துக்குப் பிறகே இது ஒரு பிரச்னையாகத் தெரியும் அளவுக்கு தமிழக அரசு வேறு பல விஷயங்களில் பிஸியாக இருக்கிறது.

பயிரும் கருகுது... உயிரும் கருகுது! - பாலைவனம் ஆகும் தமிழ்நாடு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘விலங்குங்க செத்தாக்கூட கேள்வி கேட்க நாதி இருக்கு. ஆனா, விவசாயிகளுக்கு எந்த நாதியும் இல்லாம போயிடுச்சே” என ஆற்றாமையும் வேதனையுமாகப் பேசுகிறார் திருப்பந்துருத்தி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுகுமாறன். 

தமிழகத்தின் தென் மற்றும் மேற்கு மாவட்டங்கள் பலவற்றுக்கு தென்மேற்குப் பருவமழையே ஆதாரம். வட மாவட்டங்கள், திருச்சி மற்றும் டெல்டா பகுதிக்கு வடகிழக்குப் பருவமழை வாழ்வு தரும். இந்த முறை இரண்டுமே பொய்த்தன. உச்ச நீதிமன்றம் கடுமைகாட்டியும் காவிரியில் தண்ணீர் வரவில்லை. மற்ற நதிகளிலும் கண்ணீர் மட்டுமே வந்தது. இதனால் வாய்க்கால்கள் வறண்டு போக, வயல்கள் வெடித்துக் கிடக்கின்றன. அதிக வட்டிக்கு கடன் வாங்கி சாகுபடி செய்த விவசாயிகள் மனம் உடைந்து கிடக்கிறார்கள்.

‘‘இவை இயல்பான மரணங்கள் அல்ல. அதிகாரிகள், ஆட்சியாளர்கள் செய்த கொலைகள்” என கொந்தளிக்கிறார்கள் விவசாயிகள். ‘‘அதிகாரிகள் தங்களின் கடமையைச் செய்ய மறுக்கிறார்கள். வறட்சி நிலவரத்தை அவர்கள் முறைப்படி அறிக்கையாக தமிழக அரசுக்கு அளித்திருக்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் காப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்” எனும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், 6 ஆண்டுகளுக்கு முன்பு  இங்கு வறட்சி ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நினைவுகூர்கிறார்கள்.

‘‘அப்போது தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்த எம்.எஸ்.சண்முகம், வறட்சியின் ஆரம்ப நிலையிலேயே தமிழக அரசுக்கு அவசர அறிக்கை அளித்தார். அனைத்து விவசாயிகளையும் பயிர்க் காப்பீடு செய்யவைக்க, வருவாய்த் துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகளை களம் இறக்கி இரவு பகலாகப் பணியாற்றவைத்தார்.

பயிரும் கருகுது... உயிரும் கருகுது! - பாலைவனம் ஆகும் தமிழ்நாடு
பயிரும் கருகுது... உயிரும் கருகுது! - பாலைவனம் ஆகும் தமிழ்நாடு

‘பிரீமியம் கட்ட விவசாயிகளிடம் பணம் இல்லையென்றால், நீங்கள் செலுத்திவிட்டு பிறகு அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள்’ என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பலனாக அந்த ஆண்டு விவசாயிகளுக்கு தமிழக அரசின் வறட்சி நிவாரணமும் கிடைத்தது; பயிர்க் காப்பீடு மூலம் இழப்பீடும் கிடைத்தது. ஆனால், இப்போது அதிகாரிகளுக்கும் ஆர்வம் இல்லை; அரசுக்கும் அக்கறை இல்லை’’ என்கிறார்கள்.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் சங்கங்கள் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழகம் முழுக்கப் போராட்டங்களை நடத்தி வருகின்றன. திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பாக நடந்த போராட்டத்தில் மகாலிங்கம் என்ற விவசாயி நெஞ்சுவலியால் மயங்கிச் சாய்ந்து இறந்தார்.

இதுபற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் செல்வராஜ், “மழையும் காவிரியும் பொய்த்து, இந்த வருடம் இந்தப் பகுதியில் நிலத்தடி நீரும் கீழே போய்விட்டது. கடன் வாங்கித்தான் பல விவசாயிகள் சாகுபடிசெய்தனர். பயிர்கள் கருகியதால் அந்த வயல்களில் ஆடு, மாடுகளை மேயவிடுகிறார்கள். இந்தக் கொடுமையைத் தாங்கிக்கொள்ள முடியாமல்தான், விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆனால், தமிழக அரசு இதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை.

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தினோம். அப்போதுதான், கோவிலூரைச் சேர்ந்த விவசாயி மகாலிங்கம், ‘தான் சாகுபடி செய்த பயிரெல்லாம் இப்படிப் பாழாய்ப்போய்விட்டதே’ என்ற மனஅழுத்தத்தில் இருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்தார். அந்தக் குடும்பத்துக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.

பயிரும் கருகுது... உயிரும் கருகுது! - பாலைவனம் ஆகும் தமிழ்நாடு

தற்போது விவசாயிகளின் போராட்டத்தால் ஏற்பட்ட நிர்ப்பந்தம் காரணமாக, விவசாயிகள் சங்கத் தலைவர்களை அழைத்து அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. 

பயிரும் கருகுது... உயிரும் கருகுது! - பாலைவனம் ஆகும் தமிழ்நாடு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம், “விவசாயிகள் சங்கங்கள் சார்பில் அமைச்சர்களைச் சந்தித்துப் பேசினோம். அதையடுத்து, முதல்வரின் அறிக்கை வந்துள்ளது. ‘பயிர் இழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும்’ என்று அறிவித்துள்ள முதல்வர், விவசாயிகளின் தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணங்கள் பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. இதுவரை இறந்துள்ள விவசாயிகளின் குடும்பங்களுக்கான நிவாரணம் பற்றி எதுவும் சொல்லவில்லை. பயிரிழப்புகளை மட்டும் கணக்கெடுத்தால் போதாது, உயிரிழப்புகள் குறித்தும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்” என வேதனையோடு தெரிவித்தார்.

எதிர்காலம் சூனியமாகிறது என்ற பயத்தில் விவசாயிகள் மரணிப்பது என்பது ஒரு சமூக அவலம். டி.வி-யில் பிரதமர் தோன்றி ஒரு உத்தரவு போட்டோ, மறைந்த ஏதோ ஒரு தலைவரின் பெயரால் மொபைல் ஆப் உருவாக்கியோ நெல்லை விளையச்செய்ய முடியாது. அதற்கு விவசாயி என்ற ஓர் இனம் தேவைப்படும். பிரச்னைக்கு உடனடித் தீர்வுகள் காணப்படாவிட்டால், உணவுக்காகக் கப்பலை எதிர்பார்த்துக் காத்திருந்த, இரண்டு தலைமுறைக்கு முந்தைய அவலம் மீண்டும் நிகழக்கூடும். புதிய 2,000 ரூபாய் நோட்டைச் சாப்பிட்டுப் பசி தீர்க்க முடியாது.

- கு.ராமகிருஷ்ணன், மு.இராகவன்
படங்கள்: கே.குணசீலன், ம.அரவிந்த், தே.தீட்சித்

“இறந்தவர்கள் கணக்கு தெரியாது!” - வேளாண்மை அமைச்சர் அதிரடி

கா
விரி பாயும் தஞ்சையின் பாபநாசம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர், வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு. வறட்சி மற்றும் விவசாயிகள் தற்கொலை குறித்து தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என அவரிடம் கருத்து கேட்க முயற்சித்தோம். ஒன்றரை நாட்கள் அவருடைய சீனியர் பி.ஏ அருணாசலம் நம்மை அலைக்கழித்தார். பிறகு ஒருவழியாக அமைச்சரின் நேரடி செல்போன் எண்ணைப் பிடித்துப் பேசினோம். “இப்போதுதான் முதல்வர் உத்தரவு போட்டிருக்கிறார். தனியாக நான் பேசுவதற்கு ஒன்றும் இல்லை” என்றார்.

பயிரும் கருகுது... உயிரும் கருகுது! - பாலைவனம் ஆகும் தமிழ்நாடு

“வேளாண்மை துறை அமைச்சர் என்ற முறையில் துறைரீதியாக நீங்கள் எடுத்த நடவடிக் கைகள் பற்றிச் சொல்லுங்கள்” என்று கேட்டோம்.

“சரி, 4-ம் தேதி காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்துக்கு வாருங்கள்” என்றார். அதன்படி அமைச்சரைச் சந்திக்கச் சென்றோம். ஆனால், அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலாவைச் சந்திக்க அமைச்சர் தலைமைக் கழகம் போய்விட்டதாக அவரது அறையில் இருந்த உதவியாளர்கள் தெரிவித்தனர். போனிலும் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவரது அறையில் காத்திருந்தபடி ஒரு மணி நேரம் விடாமல் முயற்சித்தபோது அவரிடம் போனில் பேச முடிந்தது. “முதல்வர் உத்தரவுப்படி நானும், மற்ற அமைச்சர்களும் மாவட்டம்தோறும் நேரில் சென்று ஆய்வுசெய்ய உள்ளோம்” என்றவரிடம், ‘வறட்சி காரணமாக எத்தனை விவசாயிகள் உயிரிழந்திருக்கின்றனர்” என்று கேட்டோம். சில நொடிகள் யோசித்தவர், “இல்லை. அது எல்லாம் தெரியவில்லை. மேலேதான் கேட்க வேண்டும்” (எந்த மேலே என்று தெரிய வில்லை) என்றார் அதிரடியாக. “வேளாண்மை துறைச் செயலாளரிடம் இந்தத் தகவல் இருக்குமே” என்றோம். நமது கேள்விக்கு பதில் அளிக்காமல் “உங்களிடம் பின்னர் பேசுகிறேன்” என்று தொடர்பைத் துண்டித்துவிட்டார்.

பாவம் விவசாயிகள்!

- கே.பாலசுப்பிரமணி

பயிரும் கருகுது... உயிரும் கருகுது! - பாலைவனம் ஆகும் தமிழ்நாடு

மரணம் தடுக்கும் வழி!

‘‘விவசாயத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமும், மாற்றுப் பயிர்களை விளைவிப்பதன் மூலமும்தான் இதைத் தவிர்க்க முடியும்” என்கிறார் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் நீர் மேலாண்மை இணைப் பேராசிரியர் சிவசுப்ர மணியன்.

“டெல்டா பகுதிகளில் ஒவ்வொரு ஏக்கரிலும் 10, 20 சென்ட் இடத்தை மழைநீரைச் சேமித்து வைக்கும் இடமாக ஒதுக்கி வைக்க வேண்டும். இதனால் கிணறு இல்லாத விவசாயிகளும் தண்ணீரைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். ‘காய்ச்சல் பாய்ச்சல்’ என்ற முறையைப் பயன்படுத்தி தண்ணீர் பயன்பாட்டைக் குறைத்தால் வறட்சியில் இருந்து தப்பிக்கலாம். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ‘நீர்த் தொழில்நுட்ப மையம்’ என்ற தனி அமைப்பு உள்ளது. இந்த மையம் தமிழகம் முழுக்க சென்று, விவசாயிகளுக்கு நீர்த் தொழில்நுட்பம் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என்றார் அவர்.

- ஆ.நந்தகுமார்
படம்: சொ.பாலசுப்ரமணியன்

அலட்சிய மத்திய அரசு!

விவசாயிகள் தற்கொலையும் அதிர்ச்சி மரணங்களும் எங்கெங்கே அதிகம் நிகழ்கின்றன என மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு ஒரு கணக்கெடுப்பு செய்யத் தொடங்கியது. தற்கொலைகளுக்குக் காரணங்கள் என்ன... எப்படித் தடுக்கலாம் என 15 மாநில அரசுகளிடமிருந்து தகவல் கேட்டார்கள். மத்திய வேளாண்மைத் துறையின் Institute for Social and Economic Change என்ற அமைப்பு தென் மாநிலங்களில் தகவல்  திரட்டியது. இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகும் 5 மாநிலங்கள் எந்தத் தகவலையும் தரவில்லை. தமிழகம் உட்பட சில மாநிலங்கள் தந்த தகவல்கள் சரியில்லை என சொல்லிவிட்டார்கள். வரும் ஏப்ரலில்தான் இந்த சர்வே முடியும் என்கிறார்கள். வீடியோ கான்ஃபரன்ஸில் மாநில தலைமைச் செயலாளர்களுடன் பிரதமர் பேசுகிற இந்த டிஜிட்டல் யுகத்தில், விவசாயிகள் தற்கொலை என்ற சீரியஸான பிரச்னை பற்றிய கணக்கெடுப்பு மட்டும் இப்படித்தான் நடக்கிறது!

பயிரும் கருகுது... உயிரும் கருகுது! - பாலைவனம் ஆகும் தமிழ்நாடு

வறட்சியை எப்படி அறிவிப்பது?

ஒரு சின்ன அறிவிப்புதான்! அதைச் செய்தால் மத்திய அரசிடமிருந்து நிவாரணம் வாங்கி விவசாயிகளுக்குக் கொடுத்திருக்கலாம். அத்தனை விவசாயிகளின் மரணத்தையும் தடுத்திருக்கலாம். தமிழக அரசு அதைச் செய்யாததுதான் கொடுமை!

தேசியப் பேரிடர் நிவாரண நிதி, மாநிலப் பேரிடர் நிவாரண நிதி என இரண்டுவிதமான நிதிகள் உள்ளன. தேசிய நிதி முழுக்க முழுக்க மத்திய அரசு தருவது. மாநில நிதியிலும் 75 சதவிகிதம் மத்திய அரசு தருவதே. இந்த இரண்டிலிருந்தும் விவசாயிகளுக்கு நிதி வாங்கித் தர மாநில அரசால் முடியும். கேரளா 14 மாவட்டங்களையும் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து, மத்திய அரசிடம் இழப்பீடு வாங்கிவிட்டது. கர்நாடகா 42 தாலுக்காக்களை வறட்சி பாதித்த பகுதிகளாகக் குறிப்பிட்டு, 800 கோடி ரூபாய் நிவாரண நிதியை வாங்கிவிட்டது.

மத்திய வேளாண்மைத் துறையின் ‘வறட்சி மேலாண்மைக் கையேடு’, வறட்சி என்றால் என்ன என வரையறுக்கிறது. மழை குறைவது, பயிரிடும் பரப்பு குறைவது, அணைகளிலும் இதர நீர் ஆதாரங்களிலும் நீர்மட்டம் குறைவது, விளைச்சல் பாதிப்பு போன்றவற்றை அடிப்படையாக வைத்து வறட்சியை அறிவிக்கலாம். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மட்டுமே 62 சதவிகிதம் குறைவு. இது ஒன்றேபோதும், மத்திய அரசிடம் நிதி கேட்க! வருவாய்த் துறை சார்பில் ‘தமிழகம் வறட்சி மாநிலம்’ என்பதை அறிவித்துவிட்டு மத்திய அரசுக்கு ஓர் அறிக்கை அனுப்ப வேண்டும், இது தமிழக முதல்வருக்குத் தெரியாதா? அல்லது   முடியாதா?