Published:Updated:

திருவள்ளூர், திருச்சி, கோவை,குமரி நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை: திருவள்ளூர், திருச்சி, ஸ்ரீவில்லிபுத்தூர், கோவை, கன்னியாகுமரி உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களுக்கு இன்று ஒரே நாளில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு இன்று காலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், ‘திருச்சியில் உள்ள  மகளிர் கோர்ட், செஷன்ஸ் கோர்ட் ஆகியவற்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கப் போகிறது, முடிந்தால் தடுத்து கொள்ளுங்கள்’ என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதுபற்றி உடனடியாக திருச்சி நீதிமன்ற நிர்வாக அலுவலர் மகேஷ்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் வெடிகுண்டு செயல் இழப்பு பிரிவினரும், போலீசாரும் விரைந்து வந்து, கோர்ட்களில் இருந்தவர்களை வெளியேற்றி விட்டு சோதனை நடத்தினர். சோதனையில்  வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

##~~##
இதேபோன்று திருவள்ளூர் கோர்ட்டுக்கும் குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. திருவள்ளூர் கலெக்டர் ஆபீசில் வைத்துள்ள புகார் பெட்டி, நேற்று மாலை திறக்கப்பட்டது. அதில் இருந்த மனுக்களை கலெக்டர் வீரராகவ ராவ் படிக்க ஆரம்பித்தார்.
ஒரு கடிதத்தில், ‘இன்ஸ்பெக்டர் ஒருவர் என் மீது பொய் வழக்கு போட்டு என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டார். இந்த வழக்கு திருவள்ளூர் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. எனக்கு நியாயம் கிடைக்காவிடில் திருவள்ளூரில் உள்ள அனைத்து கோர்ட்களையும் டிபன் பாக்ஸ் குண்டு வைத்து தகர்ப்பேன்’ என்று எழுதப்பட்டிருந்து.
இதைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் இன்று காலை திருவள்ளூரில் உள்ள கோர்ட்களில் தீவிர சோதனை நடத்தினர்.  கோர்ட்டுக்கு வந்த அனைத்து வாகனங்களையும் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. சோதனையில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. புகாரின்பேரில் திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, மிரட்டல் கடிதம் எழுதியவரை தேடி வருகின்றனர்.
இதேபோல் கோவை, பொள்ளாச்சி, கன்னியாகுமரி, ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, ஆண்டிப்பட்டி, உத்தமபாளையம் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கோர்ட்களுக்கும் இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த இடங்களில் நடந்த சோதனைகளிலும் குண்டு எதுவும் சிக்கவில்லை.
ஒரே நாளில் பல கோர்ட்களுக்கு குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எல்லா இடங்களுக்கும் மிரட்டல் விடுத்தது ஒரே நபர் தானா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.