செவிலியர்களின் அலட்சியத்தால் உடலுக்குள் சென்ற ஊசியால் கும்பகோணத்தைச் சேர்ந்த சசிகலாவும் அவரது வயிற்றில் வளரும் குழந்தையும் உயிருக்குப் போராடுகின்றனர்.
கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரத்தைச் சேர்ந்தவர் சசிகலா. இவர் கணவர் வடிவேல் கூலித் தொழிலாளி. இவர்களுக்கு ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. தற்போது சசிகலா கர்ப்பமாக இருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சசிகலா உடல் நலக்குறைவு ஏற்பட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்றார். அங்கு பணியில் இருந்த மருத்துவர் சசிகலாவுக்கு ஊசி போடுவதற்கு பரிந்துரை செய்தனர். அங்குள்ள நர்ஸ்கள் அலட்சியமாக ஊசி போட்டுள்ளனர்.
அப்போது ஊசியின் பாதிமுனை உடைந்து சசிகலாவின் கையின் உள்ளே சென்றுவிட்டது. இது தெரியாமல் சசிகலா வீட்டுக்குச் சென்றுவிட்டார். நாளடைவில் அவர் கையில் கடும் வலி ஏற்பட்ட மீண்டும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குச் சென்று காண்பித்துள்ளார். அப்போது அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது உடைந்த ஊசி உள்ளே இருப்பது தெரியவந்தது. இதைக் கேட்டு சசிகலாவும் அவரின் கணவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
டாக்டர்கள் எந்த சலனமும் அடையாமல் அவர்களைத் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் சசிகலாவுக்கு டாக்டர்கள் ரூபத்தில் விதி விளையாடியிருக்கிறது. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் அறுவைசிகிச்சை செய்ததோடு ஊசியும் அகற்றப்பட்டுவிட்டதாக கூறி இனிமேல் எந்தப் பிரச்னையும் இல்லை என்று கூறியுள்ளனர்.
இந்த நிலையில், தற்போது மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கும் சசிகலாவுக்கு நெஞ்சுப் பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சென்று காட்டியுள்ளனர். அப்போது நெஞ்சுப் பகுதியை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது உடைந்த ஊசி நெஞ்சுப் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதைக் கேட்ட சசிகலா அதிர்ச்சி அடைந்தார்.
கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக வேலைக்குச் செல்ல முடியாமல் தன் மனைவியை அழைத்துக்கொண்டு அவரின் உயிரைக் காப்பாற்ற அழைந்து கொண்டிருக்கிறார் அவரது கணவர் வடிவேல். இதுதொடர்பாக ஆட்சியர் அண்ணாத்துரையிடமும் மனு கொடுத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து வடிவேலிடம் பேசினோம். 'மீண்டும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் காண்பித்தோம். சசிகலா வயிற்றில் இருக்கும் குழந்தையை அபார்ஷன் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து, 'ஊசி நகர்ந்துகொண்டே இருக்கிறது. ஆபரேஷன் நேரத்திலும் நகரும். இதனால் பொறுமையாகதான் செயல்பட முடியும்' என அலட்சியமாகச் சொல்கிறார்கள்.
எந்த வழியும் இல்லாத ஏழைகள்தான் அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள். அங்கு நடக்கும் அலட்சியத்தால் இப்ப என் மனைவி உயிருக்குப் போராடி வருகிறார். அவருக்கு எதாவது ஒன்று என்றால் யார் என் குழந்தைகளைக் காப்பாற்றுவது. எனவே, இந்த விஷயத்தில் மெத்தனமாக இல்லாமல் தமிழக அரசு தலையிட்டு என் மனைவியையும் அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் உயிரோடு காப்பாற்றிக் கொடுங்கள்' என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.