Published:Updated:

பாலியல் சீண்டல்... பரிதாப மாணவிகள்! - புகார் பட்டியலில் பேராசிரியர்கள்

பாலியல் சீண்டல்... பரிதாப மாணவிகள்! - புகார் பட்டியலில் பேராசிரியர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
பாலியல் சீண்டல்... பரிதாப மாணவிகள்! - புகார் பட்டியலில் பேராசிரியர்கள்

பாலியல் சீண்டல்... பரிதாப மாணவிகள்! - புகார் பட்டியலில் பேராசிரியர்கள்

ண்புகளைப் போதிக்க வேண்டிய பேராசிரியர்களே பாலியல் புகாரில், சிக்குவது கல்வித் துறையையே களங்கப்படுத்தும் காரியம்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ஆங்கில உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுபவர் ராம்சங்கர். வகுப்பறையில் மாணவிகளிடம் தகாத வார்த்தைகளில் பேசியதாகவும், பாலியல் ரீதியாக தொல்லைகள் கொடுத்ததாகவும் ராம்சங்கர் மீது புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து, கைதுசெய்யப் பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, கல்லூரிக் கல்வித்துறை இயக்குநர் அலுவலகம் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

ராம்சங்கர் குறித்து அந்தக் கல்லூரியின் ஆங்கிலத் துறையில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் பேசினோம். ‘‘ராம்சங்கர் சார், எங்களிடம் இரட்டை அர்த்தத்துடனேயே பேசுவார். சாதாரணமாக  வகுப்பறையில்  கொட்டாவி விட்டால்கூட, ‘நேற்று இரவு யாரு கூட இருந்த, என்ன பண்ணின?’னு அசிங்கமாகக் கேட்பார். ‘உங்களுக் காகத்தான் தனியாக ரூம் எடுத்து வைத்துள்ளேன். எனக்கு மீன் குழம்பு செய்து தா’ என்றெல்லாம் சொல்வார்.

பாலியல் சீண்டல்... பரிதாப மாணவிகள்! - புகார் பட்டியலில் பேராசிரியர்கள்

‘டவுட் கேட்பதற்கு யாரும் என் ரூமுக்கு ஏன் வருவது இல்லை?’ என்பார். ‘நீயும் சரியில்லை... உன் ‘பேக்’கும் சரியில்லை’ என்று அருவருப்பான வார்த்தைகளில் பேசுவார். திடீர் திடீரென எங்கள் கழுத்தில் தொங்கும் ஐ.டி கார்டை எடுத்துப் பார்ப்பார். எங்களுக்குப் பகீரென்று இருக்கும்.

தட்டிக்கேட்டால் இன்டர்னல் மார்க்கில் ஃபெயில் செய்துவிடுவதாக மிரட்டுவார். அதற்காக, இதையெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டிய அவலம். முதல்வரிடம் புகார் கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. நாங்கள் முதல்வரிடம் கொடுத்த புகார் மனுவை எடுத்துவந்து எங்களிடம் காண்பித்து ,‘பார்த்தீங்களா... நீங்க எழுதிக் கொடுத்த புகார் கடிதம். என்னை மீறி இங்கு யாரும் எதுவும் செய்ய முடியாது’ என்று கூறியதை அடுத்துதான் நாங்கள் காவல் துறைக்குச் சென்றோம்’’ என்றார்கள்.

பாலியல் புகாருக்கு உள்ளான ராம்சங்கர், ‘‘நான் 2013-ல் இந்தக் கல்லூரியில் பணியாற்றியபோது, ஆங்கிலத் துறையில் என்னுடன் அண்ணாதுரையும், அவரது மனைவி முத்துலட்சுமியும் பணியாற்றினர். அப்போது, கல்லூரியில் விளையாட்டுப் பொறுப்பாளராக அண்ணாதுரை இருந்தார். நான் அரசு ஊழியர்களுக்கான போட்டியில் மாநில அளவில் பதக்கம் வென்ற கபடி வீரர். எனவே, முதல்வரிடம் என் சான்றிதழ்களைக் காண்பித்து விளையாட்டுப் பொறுப்பாளர் பதவியைக் கேட்டேன். இதனால் எனக்கும் அண்ணாதுரைக்கும் சண்டை வந்தது. அது, அடிதடி அளவில் போனது. உடனே, அண்ணாதுரை தன் மனைவி மூலமாக என் மீது தலைவாசல் காவல்நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டு இருக்கிறது. இதற்கிடையில் எங்கள் மூன்று பேரையும் வெவ்வேறு கல்லூரிகளுக்கு மாற்றிவிட்டார்கள். எனக்கு மீண்டும் இதே கல்லூரியில் 2015-ல் மாறுதல் கிடைத்தது. இங்கு சிறப்பாகத்தான் பணியாற்றிக்கொண்டி ருந்தேன். என்னுடைய துறையில் தொடர்ந்து கல்லூரிக்கே வராமல் இருந்த மாணவர்களான பார்த்திபன், ராஜா, விக்னேஷ், அரவிந்த் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்தேன். அதனால், தற்போது என் மீது புகார் தெரிவிக்கி றார்கள். இதே கல்லூரியில் பணிபுரியும் அண்ணா துரையின் நெருங்கிய நண்பரும் கம்ப்யூட்டர் துறைத் தலைவருமான செல்வராஜ்தான் மாணவர்களைத் தூண்டிவிடுகிறார். ஏனெனில், அண்ணாதுரையும் செல்வராஜும் நான் தண்டித்த நான்கு மாணவர்களும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவன். என் சமுதாயத்தைச் சேர்ந்த மேகனா என்ற மாணவி, எதிர் சமுதாயத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் திலீபனிடம் நெருங்கிப் பழகியதை நான் கண்டித்ததால், அந்தப் பெண் மூலமாகவே எனக்கு எதிராகப் புகார் கொடுக்க வைத்துள்ளனர்’’ என்றார்.

பாலியல் சீண்டல்... பரிதாப மாணவிகள்! - புகார் பட்டியலில் பேராசிரியர்கள்

இதுகுறித்து கல்லூரி முதல்வர் பெரியசாமியிடம் கேட்டபோது, ‘‘18-ம் தேதி மதியம் 20 மாணவ, மாணவிகள் வந்து என்னிடம் புகார் மனு கொடுத்தனர். அதில், ‘ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் ராம்சங்கர் எங்களிடம் ஆபாசமாகப் பேசி அநாகரிகமாக நடந்துகொள்கிறார்’ என்று குறிப்பிட்டிருந்தனர். அவர்கள் புகார் கொடுத்த ஒரு மணி நேரத்துக்குள் நான்கு ஆசிரியர்கள் அடங்கிய விசாரணை கமிஷன் நியமித்து விசாரிக்க ஆணையிட்டேன். அதற்குள் அந்த மாணவ, மாணவிகள் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் கொடுத்துள்ளனர். என்னிடமோ, கல்லூரி ஆசிரியர்களிடமோ போலீஸார் விசாரிக்கவில்லை. ராம்சங்கர் மீது வழக்குப் போட்டு சிறையில் அடைத்துவிட்டனர். கல்லூரிக் கல்வித் துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்தும் எங்களை விசாரிக்காமல், சஸ்பெண்டு ஆர்டர் அனுப்பிவிட்டார்கள். அதனால், இந்தச் சம்பவத்தில் எனக்கு எந்தவிதமான பங்கும் கிடையாது.

பி.ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு வகுப்புகளுக்கு ராம்சங்கர் பாடம் எடுக்கிறார். இதில், மூன்றாம் ஆண்டில் படிக்கும் 20 மாணவ, மாணவிகள் மட்டுமே புகார் சொல்கிறார்கள். அந்த வகுப்பில் 40-க்கும் மேற்பட்டவர்கள் படிக்கிறார்கள். அதே போல முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவிகள் யாரும் அவர் மீது புகார் சொல்லவில்லை. எங்களிடம் காவல் துறையோ, கல்லூரிக் கல்வித் துறை இயக்குநர் அலுவலகமோ விசாரித்திருந்தால் பலதரப்பு மாணவர்களிடம் விசாரித்து உண்மை என்ன என்பதை அறிக்கையாகத் தாக்கல் செய்திருப்போம்’’ என்றார்.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான ஆத்தூர் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சித்ராவிடம் கேட்டதற்கு, ‘‘ராம்சங்கர் ஏற்கெனவே இந்தக் கல்லூரியில் பணியாற்றியபோது அவர் சார்ந்த ஆங்கிலத் துறையின் பேராசிரியரான முத்துலட்சுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் இருக்கிறது. ‘சாதி ரீதியாகப் பழி வாங்குகிறார்கள்’ என்கிறார் ராம்சங்கர். ஆனால், புகார் கொடுத்ததே ஒரு தாழ்த்தப்பட்ட சமூக பெண்தான். முழுமையாக விசாரித்துப் பார்த்ததில் உண்மை என்று தெரிய வந்ததை அடுத்தே கைதுசெய்தோம். கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டு இருந்ததால் முதல்வரிடம் விசாரிக்கவில்லை. ஆனால், முதல்வருக்குத் தகவல் கொடுத்தோம். கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து தகவல் சென்றது. அதையடுத்து அவர்களும் துறை ரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்’’ என்றார்.

பாலியல் சீண்டல்... பரிதாப மாணவிகள்! - புகார் பட்டியலில் பேராசிரியர்கள்

தேபோன்ற புகார் ஒன்று, வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள தூய நெஞ்ச கல்லூாியின் பேராசிரியர் ஒருவருக்கு எதிராக எழுந்துள்ளது. இந்தக் கல்லூரியில், முதுகலை தமிழ்த் துறை தலைவராக இருப்பவர், முனைவா் பாா்த்திப ராஜா. நாடகவியலாளா், நடிகா், எழுத்தாளா், பேச்சாளா் என பல தளங்களில் இயங்கி வருபவர்.

இவர் மீதான பாலியல் புகார் குறித்து அந்தக் கல்லூரியின் மாணவிகள் சிலர் நம்மிடம் பேசினர். ‘பெயர்கள் வேண்டாம்’ என்ற வேண்டுகோளுடன் பேச ஆரம்பித்தனர். ‘‘பார்த்திப ராஜா, பேராசிரியர் மட்டுமில்லாமல் மேடை நாடகங்களை இயக்குவதில் ஆர்வம் உள்ளவர். நாடகத்துக்கு வரும் பெண்களிடம், சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டுவார். அவர்களிடம் போன் நம்பர்களையும் வாங்கிவைத்துக் கொள்வாா். பின்னர், ‘உன் உள் ஆடை என்ன நிறம்? உன் அழகை நான் ரசிக்க வேண்டும். உன்னை முத்தமிட வேண்டும்’ என்பது போன்ற ஆபாச மெசேஜ்களை அனுப்புவார். ‘எனக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை என்றால், உன்னைத்தான் திருமணம் செய்திருப்பேன்’ என்று ஆசை வார்த்தை கூறி மாணவிகளை மயக்குவார். இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர், கல்லூரி நிர்வாகத்திடமும் பொறுப்பில் இருக்கும் ஆசிரியர்களிடமும் புகார்கள் அளித்தும், எந்த   நடவடிக்கையும்    எடுக்கப்படவில்லை. முதுகலை தமிழ்த் துறையின் தலைவராக இருக்கும் இவா், தன்னிடம் ஆய்வு மேற்கொள்ளும் மாணவிகளிடமும் இவ்வாறே நடந்துகொள்கிறாா். அவர்கள், இவரை எதிர்த்துப் பேச முடியாமல், அனைத்தையும் சகித்துக்கொள்கிறார்கள்’’ எனக் குமுறித் தீர்த்தனர் மாணவிகள்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக பார்த்திப ராஜாவிடம் கேட்டோம். “நான், நாடகங்களை இயக்குவதிலும் சமூகம் சார்ந்த செயல்களிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறேன். கலையின் வாயிலாகக் கல்வி என்று நான் இயங்குவதை சிலர் எரிச்சலோடு பார்க்கிறார்கள். நாடகங்களில் ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் பழகுவதை வைத்து என் மீது இப்படியான புகார்களைச் சொல்கிறார்கள். காதல் காட்சிகளில் நடிப்புப் பயிற்சி கொடுப்பதைக் கூட, அவர்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கலாம். நான் இந்தக் கல்லூரியில் மரியாதைக்குரிய ஆசிரியராக இருக்கிறேன். வேறு விஷயங்களை முன்வைத்து என் பெயரைக் களங்கப்படுத்த சிலர் முயன்றிருக்கலாம். தவறான முறையில் நான் யாரிடமும் பழகவில்லை. அப்படியான நபரும் நான் இல்லை” என்றார்.

- ச.ஜெ.ரவி, வீ.கே.ரமேஷ்
படங்கள்: எம்.விஜயகுமார்