Published:Updated:

டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழப்பு.. கொலையா... மூடநம்பிக்கையா?

டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழப்பு.. கொலையா... மூடநம்பிக்கையா?
டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழப்பு.. கொலையா... மூடநம்பிக்கையா?

வ்வொரு நாள் காலையிலும் அந்த வீட்டைக் கடந்து செல்வோருக்காக, இந்தியில் சில சொற்றொடர்களும், வசனங்களும் எழுதப்பட்டிருக்கும். அதைக் கடந்து செல்வோருக்கு மன அமைதியும் உற்சாகமும் அமையும் வண்ணம் அவை தோன்றும். அப்படி இருந்த ஒரு வீட்டைக் கடக்கும்போது போலீஸாரும், பத்திரிகையாளர்களும் பரபரப்பாக நடமாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தால், அவர்களுக்கு என்ன மாதிரியான மனநிலை ஏற்படும்?

கடந்த சனிக்கிழமை காலைவரை, அந்த வீட்டுக்குச் சொந்தமானவர்களின் கடை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை கடை திறக்கப்படாததால், பக்கத்து வீட்டில் வசித்த நபர், போலீஸுக்குத் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்தப்பகுதிக்கு விரைந்த போலீஸார், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் வீட்டுக்குள் இறந்து கிடந்தது கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அது திட்டமிட்ட கொலையா அல்லது அவர்கள் வேறு ஏதாவது காரணத்துக்காக ஒட்டுமொத்தமாக தற்கொலை செய்துகொண்டனரா என்பதைப் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

டெல்லியில் உள்ள புராரி சான்ட் நகர் பகுதியில் உள்ள இரண்டு மாடி குடியிருப்பில்தான் இந்தச் சோகம் நடந்துள்ளது. அந்தப் பகுதியில் வாழ்ந்த அந்தக் குடும்பத்தினர், மளிகைக் கடை நடத்திவந்துள்ளனர். மேலும், பிளைவுட் விற்பனையிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.  இந்நிலையில், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரும் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேரின் கண்கள் மற்றும் வாய்ப் பகுதி துணியால் கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது. 18 வயதுக்குக் குறைவானவர்கள் இரண்டு பேர். 77 வயதான மூதாட்டி ஒருவரும் உயிரிழந்தவர்களில் அடங்குவர். ஆன்மிக நம்பிக்கை காரணமாக அவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அந்த வீட்டில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் போலீஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்து கிடந்தவர்களில் மூதாட்டி மட்டுமே தனி அறையில் சடலமாகக் கிடந்துள்ளார். அவருடைய பெயர் நாராயணி தேவி (வயது 77). அவருடைய மகள் பிரதீபா, இரண்டு மகன்கள் பவனேஷ், லலித் பாட்டியா, பவனேஷின் மனைவி சவிதா, அவர்களின் மூன்று பிள்ளைகள் மீனு, நிதி மற்றும் துருவ், லலித்தின் மனைவி டீனா மற்றும் அவர்களின் 15 வயது மகன் சிவம் ஆகியோர் இறந்து கிடந்தவர்கள் ஆவர்.

பிரதிபாவின் மகள் பிரியங்காவின் நிச்சயதார்த்தம் கடந்த மாதம் நடந்துள்ளது. வரும் நவம்பர் மாதம் திருமணம் நடத்த முடிவாகியிருந்தது. இந்நிலையில், அவரும் வீட்டில் இறந்து கிடந்துள்ளார். நாராயணி தேவியின் மற்றொரு மகனான தினேஷ் பாட்டியா, மற்றொரு மகள் சுஜாதா ஆகியோர் வெளியூர்களில் வசித்து வருகிறார்கள். இந்தச் சம்பவம் பற்றி அறிந்ததும் அவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இறந்தவர்களின் தொலைபேசி அழைப்புகள் பற்றிய பட்டியல்களைக் கொண்டும், இணையத் தேடுதல்களை ஆராய்ந்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், பிரியங்காவுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை மற்றும் அவருடைய குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் கூறியுள்ளனர். இந்நிலையில், அந்த வீட்டிலிருந்து கையால் எழுதப்பட்ட சில குறிப்புகள் அடங்கிய கடிதங்களைப் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். 'பயத்தில் இருந்து ஒருவர் எப்படி வெளிவருவது?', 'முக்தி அடைய என்ன செய்ய வேண்டும்?' என்பனவற்றைப் பற்றி அந்தக் குறிப்புகள் விளக்கும் வகையில் அமைந்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். 'கண்களையும் வாயையும் மூடிக்கொண்டால், பயத்திலிருந்து வெளிவந்து விடலாம்' என்று இன்னொரு குறிப்பு எழுதப்பட்டிருந்தது. 

இந்தச் சம்பவம் பற்றி விசாரணை நடத்திவரும் அதிகாரி ஒருவர் கூறுகையில், `` `இதுபோன்ற சடங்குகளை 11 பேர் பின்பற்றினால், எல்லா பிரச்னைகளும் முடிவுக்கு வரும்; முக்தி அடையும் வாய்ப்பும் உள்ளது' என்று அந்தக் குறிப்புகள் சிலவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில குறிப்புகளில் தேதியும் இடம்பெற்றிருந்தது. ஆனால், எல்லாக் குறிப்புகளுமே வாழ்க்கையின் முடிவைப் பற்றியும், அமைதிநிலையை அடையும் வழிகள் பற்றியும் மட்டுமே விளக்கும் வகையில் இருந்தன" என்றார். 

போலீஸாருக்குக் கிடைத்த குறிப்புகளில் இடம்பெற்றிருந்த தகவல்கள்: 

* வியாழக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையைத் தேர்வு செய்யுங்கள்!

கண்களை இறுகக் கட்டிக்கொள்ளுங்கள். கயிற்றுடன் புடவை அல்லது துப்பட்டாவை இணைத்துக்கொள்ளுங்கள்.

எல்லாச் சடங்குகளையும் சரியாகப் பின்பற்றுங்கள். இறப்பதற்கு ஏழு நாள்கள் முன்பிருந்தே சடங்குகள் செய்ய வேண்டும்.

* வயதானவரால் இதைச் செய்ய முடியவில்லை என்றால், அவரை அடுத்த அறையில் உறங்கச் சொல்லலாம்.

* மங்கலான விளக்குகளைப் பயன்படுத்துங்கள்.

* கைகளைக் கட்டிக்கொண்ட பின்னும், துணி மீதம் இருந்தால் அதைக் கண்களை மூடிக்கொள்ள பயன்படுத்துங்கள்.

* வாயைத் துணியால் இறுக்கமாகக் கட்டிக்கொள்ள வேண்டும்.

* இந்தச் செய்முறையில் எந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு முடிவுகளின் பலன் இருக்கும்.

* கடைசிச் சடங்கை நள்ளிரவு 12 மணி முதல் 1 மணிக்குள் நிறைவேற்ற வேண்டும். பூஜைகளை அதற்கு முன்பாக முடித்திருக்க வேண்டும்.

* எல்லோரும் ஒரே எண்ணத்தில் இருந்து, இந்தச் சடங்குகளைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், பலன்கள் சிறப்பானதாக அமையும்.

இந்த உயிரிழப்பு பற்றி கருத்து தெரிவித்த அவர்களின் உறவினர்களில் ஒருவரான சுஜாதா, 

``அவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை" என்று பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார். ``எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இறந்தது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை. எல்லோரும் படித்தவர்கள். மூடநம்பிக்கை கொண்டவர்கள் அல்ல. அவர்கள் இறப்பில் ஏதோ மர்மம் இருக்கிறது" என்று சந்தேகிக்கிறார் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு உறவினர்.

மேலும் ஒரு உறவினர், ``எங்கள் குடும்பம் மிகவும் வசதியான குடும்பம். பண நெருக்கடி போன்ற பிரச்னைகள் எதுவும் அவர்களுக்கு இருக்க வாய்ப்பில்லை. இதுவரை, அவர்கள் ஒரு லோன் கூட வாங்கியதில்லை. அப்படியிருக்கும்போது, அவர்கள் எதற்காகத் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்?. அப்படியே அவர்கள் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தாலும் எதற்காக கையையும், வாயையும் கட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள வேண்டும். மன உளைச்சலில் இருந்ததாகத் தெரியவில்லை" என்றார். 

சம்பவம் நடைபெற்ற புராரி பகுதிக்கு நேரில் சென்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பார்வையிட்டார். கடந்த மாதம் 18-ம் தேதி புராரி மார்க்கெட் பகுதியில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும், தற்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழப்புக்கும் தொடர்பு ஏதும் இருக்குமா என்ற கண்ணோட்டத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரை நடத்தப்பட்ட உடற்கூறு பரிசோதனையின்படி, அவர்கள் தூக்கிட்டு இறந்ததாகவே தெரியவந்துள்ளது. என்றாலும், அவர்களின் உயிரிழப்புக்கான உண்மையான  காரணம் என்ன என்பது குறித்து புராரி போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணைக்குப் பின்னரே, உயிரிழப்புக்கான காரணம் வெளிவரும். அதுவரை பொறுத்திருப்போம்.

அடுத்த கட்டுரைக்கு