Published:Updated:

“எல்லாக் கட்சிக்காரர்களும் எங்களிடம் பணம் வாங்கினார்கள்!”

“எல்லாக் கட்சிக்காரர்களும் எங்களிடம் பணம் வாங்கினார்கள்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“எல்லாக் கட்சிக்காரர்களும் எங்களிடம் பணம் வாங்கினார்கள்!”

சேகர் ரெட்டி ஒப்புதல் வாக்குமூலம்

2016 டிசம்பர் 8-ம் தேதி, தமிழக மணல் மாஃபியாக்களின் முதுகெலும்பை வருமான வரித்துறை உடைத்து நொறுக்கியது. சேகர் ரெட்டி, அவரது நண்பர் சீனிவாசலு, ஆடிட்டர் பிரேம்குமார், புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் வீடுகளில் நடைபெற்ற ரெய்டில் 127 கோடி ரூபாய் பணமும், 170 கிலோ வரை தங்கமும் சிக்கின. கைப்பற்றப்பட்ட பணத்தில் 34 கோடி ரூபாய் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக இருந்தன. புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கியதால், சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையினர் இந்த விவகாரத்துக்குள் வந்தனர். சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை, புதிய ரூபாய் நோட்டுகளை பதுக்கியது, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது என்ற பிரிவுகளில், இவர்கள்மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்தது. டிசம்பர் 21-ம் தேதி சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். ஆனால், அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்தது. இந்த நேரத்தில் பெரும் போராட்டத்துக்குப்பிறகு சேகர் ரெட்டி, மார்ச் 17-ம் தேதி ஜாமீன் வாங்கினார். சி.பி.ஐ. அலுவலகத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்துப்போட வேண்டும் என்ற நிபந்தனையோடு அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதையடுத்து சேகர் ரெட்டி கடந்த 20-ம் தேதி, கையெழுத்துப்போட சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவரைச் சுற்றி வளைத்த அமலாக்கத்துறை அதிகாரிகள், தங்கள் கஸ்டடிக்குக் கொண்டு சென்றார்கள். 11 மணி நேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து அவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுக்கொண்டு, இரவு 11.30 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சேகர் ரெட்டியைக் கைது செய்தனர். 6 பக்கங்களில் இருக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தின் நகல் நம் வசம் கிடைத்தது. ஒரு பத்திரிகைக்கு அளிக்கும் பேட்டியைப் போல் சேகர் ரெட்டியிடம் வாங்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் இருந்தது. அது அப்படியே இங்கே...

“எல்லாக் கட்சிக்காரர்களும் எங்களிடம் பணம் வாங்கினார்கள்!”

‘‘முறைகேடான பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் 50(2) மற்றும் (3) பிரிவுகளைப் புரிந்துகொண்டு வாக்குமூலத்தை அளிக்கிறேன். எனது வாக்குமூலம் எனக்கோ அல்லது மற்றவர்களுக்கு எதிராகவோ நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதையும் புரிந்துகொண்டு இதை அளிக்கிறேன்...’’

‘‘2014 முதல் 2016 வரை எவ்வளவு தங்கம் வாங்கினீர்கள்? எதற்காக வாங்கினீர்கள்?’’

‘‘2014 ஜனவரி முதல் எஸ்.ஆர்.எஸ். மைனிங் நிறுவனத்திலிருந்து வரும் வருமானத்தில் மீதம் இருக்கும் தொகையில் தங்கம் வாங்க நினைத்தோம். அதற்காக ஒவ்வொரு மாதமும் தங்கம் வாங்கி முதலீடு செய்ய எங்கள் நிறுவனப் பங்குதாரர்களான ராமச்சந்திரன், ரத்தினம் மற்றும் நானும் முடிவு செய்தோம். அதை சீனிவாசலுவிடம் சொன்னோம். அவர் பிரேம் மூலம் வாங்கி சேமித்து வைத்தார். எதிர்காலத்துக்காக தங்கத்தை நாங்கள் சேமித்து வைத்தோம். 2016-ம் ஆண்டு வரை இப்படிச் சேமிக்கப்பட்ட தங்கத்தின் அளவு 160 முதல் 190 கிலோ வரை இருக்கலாம். அதன் துல்லியமான விபரம் சீனிவாசலுக்குத்தான் தெரியும்.’’

‘‘தங்கத்தை முறையாகக் கணக்கில் காட்டினீர்களா?’’

‘‘2014-2015 மற்றும் 2015-16-ம் நிதியாண்டுகளில் தங்கத்தைக் கணக்கில் காட்ட நாங்கள் மறந்துவிட்டோம். ஆனால்,  2016-17-ம் நிதியாண்டில் தங்கத்தைக்  கணக்கில் கொண்டு வந்து வரி கட்டத் திட்டமிட்டு இருந்தோம். அதற்கு அட்வான்ஸ் வரியும் செலுத்தி இருந்தோம். ஆனால், அதற்குள் வருமானவரித் துறை சோதனை நடந்துவிட்டது.’’ 

‘‘நீங்கள் குவித்து வைத்துள்ள தங்கமெல்லாம், கணக்கில் காட்டப்படாத பணத்தில் வாங்கப்பட்டதுதானே?’’

‘‘எங்களுக்குச் சொந்தமான லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் வந்த வருவாய், தனியார் யார்டில் இருந்து மணல் வாங்கி விற்பனை செய்ததில் கிடைத்த வருவாய் ஆகியவற்றில் வாங்கிய தங்கம் இவை. இவற்றைக் கணக்கில் காட்ட மறந்துவிட்டோம். வரும் நிதியாண்டில் கணக்கில் காட்டத் திட்டமிட்டு இருந்தோம்.’’

‘‘இதில் ராமச்சந்திரன், ரத்தினம் பங்கு பற்றிக் கூறுங்கள்?’’

‘‘ரெய்டில் பிடிபட்ட பணம், தங்கம் எல்லாம் என்னுடைய தனிப்பட்ட சொத்துகள் அல்ல. அவை எஸ்.ஆர்.எஸ். மைனிங்ஸ் பெயரில் உள்ளன. அதில் ராமச்சந்திரனும், ரத்தினமும் பங்குதாரர்கள். அதனால்தான், தற்போது இதற்கான வரியை எஸ்.ஆர்.எஸ். மைனிங் நிறுவனத்தின் பெயரில் கட்டுகிறேன் என்று கடிதம் கொடுத்துள்ளேன்.’’

‘‘எஸ்.ஆர்.எஸ். மைனிங்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான உடமைகள் என்னென்ன?’’

‘‘எஸ்.ஆர்.எஸ். மைனிங்குக்குச் சொந்தமான வாகனங்கள், வாடகை வாகனங்கள் பற்றிய விபரங்கள், வங்கியில் வாங்கப்பட்டுள்ள கடன்கள் பற்றிய விபரங்கள் எல்லாம் ஆடிட்டருக்குத்தான் தெளிவாகத் தெரியும். அவரிடம் கேட்டுச் சொல்கிறேன். அந்த விபரங்களை எழுத்துப்பூர்வமாகவும் சமர்ப்பிக்கிறேன். மணல் குவாரிகள் தமிழகத்தில் எஸ்.ஆர்.எஸ். மைனிங் மூலம் நடைபெறவில்லை. யார்டு மூலமும் நடைபெறவில்லை. தமிழகத்தில் மணல் குவாரிகள் பொதுப்பணித்துறை மற்றும் தனிநபர்கள் மூலம் நடைபெறுகின்றன. மணல் குவாரி வைத்திருப்பவர்கள், மணல் யார்டு வைத்திருப்பவர்கள் மற்றும் மணல் அள்ளி விற்கும் தனிநபர்களுக்கு வாகனங்களை மட்டும் நாங்கள் வாடகைக்கு அனுப்புகிறோம். அதன் மூலம் எங்களுக்கு வருவாய் வருகிறது.’’

‘‘உங்கள் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு எவ்வளவு ஊதியம், வாடகை வாகனங்களுக்கு எவ்வளவு தொகை கொடுக்கிறீர்கள்?’’

‘‘இதுபற்றிய விபரம் ராமச்சந்திரன் மற்றும் ரத்தினத்துக்குத்தான் தெரியும். எனக்கு எதுவும் தெரியாது.’’

‘‘மணல் குவாரிகளில் பணிகள் நடைபெற்றபோது போலீஸ் வழக்கு எதுவும் பதிவு செய்யப்பட்டதா?’’

‘‘பொதுப்பணித்துறை மூலம் அந்தப் பணிகள் நடைபெறுவதால் அதுபற்றிய விபரங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. மேலும் தனிப்பட்ட முறையிலும் என் நினைவில் உள்ளவரை அதுபோன்ற போலீஸ் கேஸ் எதுவும் பதிவு செய்யப்பட்டது கிடையாது.’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“எல்லாக் கட்சிக்காரர்களும் எங்களிடம் பணம் வாங்கினார்கள்!”

‘‘உங்களுக்கு இந்தத் தொழிலில் ஒரு நாளைக்கு எவ்வளவு தொகை கிடைக்கிறது?’’

‘‘தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்தத் தொழில் மூலம் எங்களுக்கு ஒரு நாளில் 1 கோடியே 20 லட்ச ரூபாய் முதல் 1 கோடியே 50 லட்ச ரூபாய் வரை வசூலாகும். இதில் டீசல், வாடகை, டிரைவர் படி, ஆயில் செலவு, டயர் தேய்மானம் எல்லாம் போக எங்களுக்கு 50 லட்ச ரூபாய் வரை மிச்சமாகும். தமிழகம் முழுவதும் இருந்து அப்படி வசூலாகும் தொகையை பாபு, ராஜேந்தர் என்ற இருவரும் வசூல் செய்து சென்னைக்குக் கொண்டுவருவார்கள்.’’

‘‘ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோர் மாதம் ஒன்றுக்கு 45 கோடி ரூபாய் வசூலாகும் என்று தெரிவித்துள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு முதல் அவர்கள் அப்படி வசூலாகும் தொகையை அனுப்பி வைப்பதாகவும், அதை நீங்களே நிர்வாகிப்பதாகவும் சொல்லி இருக்கின்றனர். அதுபற்றிய விபரங்களைச் சொல்லவும்?’’

‘‘எனக்குத் தெரிந்தவரையில் 2016 ஏப்ரல் மாதம் முதல்தான் 40 முதல் 45 கோடி ரூபாய் வசூலானது. இதை அனைத்து பங்குதாரர்களும்தான் நிர்வகிப்பார்கள். குறிப்பாக நான், ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துபேசி முடிவு செய்வோம். நான் மட்டும் தனியாக முடிவு செய்யமாட்டேன்.’’

‘‘உங்களிடம் கைப்பற்றப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளில் 93 கோடியும், புதிய ரூபாய் நோட்டுகளில் 34 கோடியும் கணக்கில் காட்டப்பட்ட பணமா?’’

‘‘இந்தப் பணம் எல்லாமே 2016 ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு வந்தவை. அவற்றைக் கணக்கில் காட்ட இன்னும் அவகாசம் இருக்கிறது.’’

இப்படி ஆரம்பித்த சேகர் ரெட்டியின் ஒப்புதல் வாக்குமூலத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினருக்கும் மாதா மாதம் நிதி கொடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு நிதி கொடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதேபோல, சேகர் ரெட்டிக்குப் பணம் மாற்றிக் கொடுத்ததாகக் கைதான பரஸ்மால் லோதா வாக்குமூலத்திலும் பல அதிர்ச்சி தகவல்கள் இருக்கின்றன.

- ஜோ.ஸ்டாலின்

டெல்லி உத்தரவு!

சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் சேகர் ரெட்டிக்கு எப்போது ஜாமீன் கிடைத்தாலும், உடனடியாக அவரை அமலாக்கத்துறை கைது செய்ய வேண்டும் என்ற உத்தரவு டெல்லியிலிருந்து வந்துவிட்டது. இந்நிலையில்தான், கடந்த 17-ம் தேதி சேகர் ரெட்டி ஜாமீன் பெற்றார். அதையடுத்து அவரை அமலாக்கத்துறை கைது செய்யும் என்று பயந்த பல வி.ஐ.பி-க்கள், அமலாக்கத்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்களைத் தொடர்புகொண்டு தொடர்ந்து பிரஷர் கொடுத்துள்ளனர். ‘கைது நடவடிக்கை இருக்குமா’ என்றும் விசாரித்துக்கொண்டே இருந்தனர். சேகர் ரெட்டியை திங்கள் கிழமை கைது செய்யும் வரை, ‘இந்த ரகசியம் வெளியில் போய்விட்டால், அவர் உஷராகிவிடுவார்... முன் ஜாமீன் கேட்டு மனு செய்வார்’ என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் எச்சரிக்கையாக இருந்தனர். அவர்கள், ‘சேகர் ரெட்டியை கைது செய்யமாட்டோம்’ என்றே கடைசிவரை சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதன்பிறகு கைது செய்து, 11 மணி நேரம் விசாரித்தனர். அதேநேரத்தில்,’ சேகர் ரெட்டியின் இந்த இரண்டாவது கைது என்பது ஓ.பன்னீர்செல்வத்துக்கு செக் வைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை’ என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.