Published:Updated:

படித்தது பி.யூ.சி... போட்டுக்கொள்வது பி.எஸ்சி! - உயர்கல்வி அமைச்சரின் கோல்மால்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
படித்தது பி.யூ.சி... போட்டுக்கொள்வது பி.எஸ்சி! - உயர்கல்வி அமைச்சரின் கோல்மால்
படித்தது பி.யூ.சி... போட்டுக்கொள்வது பி.எஸ்சி! - உயர்கல்வி அமைச்சரின் கோல்மால்

படித்தது பி.யூ.சி... போட்டுக்கொள்வது பி.எஸ்சி! - உயர்கல்வி அமைச்சரின் கோல்மால்

பிரீமியம் ஸ்டோரி

‘தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அதிக முறை ஒரே தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ யார்?’ என்ற கேள்வியை இங்கு உயர்கல்வி படிக்கும் மாணவர்களிடம் கேட்டால், பதில் சொல்லமுடியாமல் அவர்கள் திணறித்தான் போவார்கள். சரி, அந்த பதிலை நாம் சொல்லி விடுகிறோம். அந்தப் பெருமைக்குரியவர், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சரான கே.பி.அன்பழகன்தான். இவரைப் பற்றி மிகப் பெரிய சர்ச்சை ஒன்று இப்போது வலம்வந்து கொண்டிருக்கிறது.

 ‘‘அமைச்சர் கே.பி.அன்பழகன், பி.யூ.சி வரை படித்தவர். ஆனால், அரசு விழாக்களின் கல்வெட்டுகள், கட்சி பேனர்கள், அழைப்பிதழ்கள், பத்திரிகை விளம்பரங்கள் என எல்லாவற்றிலும், இவர் தன் பெயருக்குப் பின்னால் பி.எஸ்சி என்று போட்டுக்கொள்கிறார். சமூகத்தில் முன்மாதிரியாக இருக்க வேண்டிய கல்வி அமைச்சரே, தன் கல்வித்தகுதி விவகாரத்தில் இப்படி முறைகேடு செய்யலாமா?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார், சட்டக்கல்லூரி மாணவர் மணி. தர்மபுரி மாவட்டம், கேத்தனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட நரியனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த மணி, ‘அமைச்சரின் இந்த முறைகேட்டுக்கு மாவட்ட நிர்வாகமும், அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர்’ என்று குற்றம்சாட்டுகிறார்.

படித்தது பி.யூ.சி... போட்டுக்கொள்வது பி.எஸ்சி! - உயர்கல்வி அமைச்சரின் கோல்மால்

“நரியனஅள்ளி கிராமத்தில், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 6.18 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய பல்நோக்கு மையக் கட்டடத்தை, 18.3.2017 அன்று அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்துவைத்தார். அதற்கான கல்வெட்டில் அன்பழகன் பெயருக்குப் பின்னால் பி.எஸ்சி என்று இருந்தது. ஆனால், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கே.பி.அன்பழகன் தாக்கல் செய்த ஆவணத்தில், காரிமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1974-75-ம் கல்வி ஆண்டில் அவர் பத்தாம் வகுப்பு படித்ததாகவும், சென்னை பல்கலைக்கழகத்தின்கீழ் இருந்த கோவை ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயா கலைக் கல்லூரியில் 1976-ம் ஆண்டு மார்ச் மாதம் பி.யூ.சி படிப்பை நிறைவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழக  சட்டப்பேரவை இணையதளத்திலும் அவரின் கல்வித்தகுதி பி.யூ.சி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சரின் கல்வித்தகுதி பற்றி உள்ளூர் அ.தி.மு.க-வினரிடம் விசாரித்தேன். ‘அமைச்சர் எங்கும் பட்டப்படிப்பு படிக்கவில்லை. அவர், 2003-ம் ஆண்டு செய்தி விளம்பரம் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, பி.எஸ்சி-க்கு மேலே கோடு போட்டுக்கொண்டார். இப்போது, உயர்கல்வித் துறை அமைச்சரானவுடன், அந்தக் கோட்டை எடுத்துவிட்டார். பி.எஸ்சி என்று போடுவதற்கு முக்கியக் காரணம், அதிகாரிகள்தான். அமைச்சரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்கிறார்கள்.        பி.எஸ்சி என்று போட்டுக் கொண்டால், உயர்கல்வி அமைச்சர் என்ற பதவிக்குக் கௌரவமாக இருக்கும் என்று அமைச்சரும் நினைக்கிறார்’ என்று அவர்கள் சொன்னார்கள். தொடர்ச்சியாக நான்கு முறை எம்.எல்.ஏ-வாக இருப்பவர் என்பதால், பாலக்கோடு தொகுதியில் இருக்கும் பெரும்பாலான அரசுக் கட்டடங்களில் அன்பழகன் பெயர்தான் உள்ளது. அங்குள்ள கல்வெட்டுகளில் பி.எஸ்சி என்றுதான் உள்ளது.

படித்தது பி.யூ.சி... போட்டுக்கொள்வது பி.எஸ்சி! - உயர்கல்வி அமைச்சரின் கோல்மால்

தற்போது இவர் அமைச்சராக இருப்பதால், மாவட்டத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் அமைச்சருடன்,

படித்தது பி.யூ.சி... போட்டுக்கொள்வது பி.எஸ்சி! - உயர்கல்வி அமைச்சரின் கோல்மால்

மாவட்ட ஆட்சியர் விவேகானந்தனும் பங்கேற்கிறார். அமைச்சரின் கல்வித்தகுதியைத் தவறாகக் குறிப்பிடும்போது, அதை ஆட்சியர் சுட்டிக்காட்ட வேண்டாமா?” என்றார் மணி.

பாலக்கோடு தொகுதிக்குள், அரசுக் கட்டடங்களின் கல்வெட்டுகளில் அன்பழகனின் பெயருக்குப் பின்னால் பி.எஸ்சி என்று உள்ளதை நிறைய இடங்களில் பார்க்க முடிந்தது. சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான  அமைச்சரவை பட்டியலை கவர்னர் வித்யாசாகர் ராவ் வெளியிட்டபோது, அன்பழகனின் பெயருக்குப் பின்னால் பி.எஸ்.சி எனப் போட்டிருந்தார்கள்.

 இது பற்றி விளக்கம் கேட்பதற்காக அமைச்சர் கே.பி.அன்பழகனை அவரது செல்போனில் தொடர்பு கொண்டோம். “அப்படியா? நீங்க சொல்ற மாதிரி இருக்காதே. நீங்க எங்கே பார்த்தீங்க?” என்று கேட்டார். “சமீபத்தில், நரியனஅள்ளி கிராமத்தில் பல்நோக்கு மையக் கட்டடத்தைத் திறந்தீர்கள். அதில்தான், உங்கள் பெயருக்குப் பின்னால் பி.எஸ்சி என்று இருந்தது. அதுமட்டுமல்லாமல், எல்லா இடங்களிலும் உங்கள் பெயருக்குப் பின்னால், பி.எஸ்சி என்று போடப்பட்டுள்ளது” என்றோம். உடனே, “நீங்க அங்கே போய் பாத்துட்டு வந்தீங்களா?” என்று அமைச்சர் கேட்டார். “ஆம்” என்றோம். அதற்கு, “தலைமைச்செயலகம் வரும்போது சொல்லுங்க. நேர்ல பேசிக்கலாம்” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்துவிட்டார்.

- அ.பா.சரவணகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு