Published:Updated:

`சாலையில் அரைநிர்வாணம், போட்டோ எடுத்தனர்!'- ரவுடியைத் தப்பவைத்த 13 கூட்டாளிகளை அதிரவைத்த போலீஸ்

காவல்நிலையத்தில் நுழைந்து கைதியை மீட்டுச் சென்ற கும்பலை ராஜஸ்தான் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Rajasthan police
Rajasthan police

ஹரியானாவைக் கலக்கி வந்த கேங்ஸ்டரான விக்ரம் குஜ்ஜார் தன் கூட்டாளிகளுடன் கொலை, கொள்ளை எனப் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது மட்டும் 5 கிரிமினல் வழக்குகள் உள்ளன. இந்தக் கூட்டத்தின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரிக்க இது ஹரியானா போலீஸுக்குத் தலைவலியைக் கொடுத்தது. விக்ரம் குறித்த தகவல் தெரிவித்தால் 5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என ஹரியானா காவல்துறை அறிவிப்பு வெளியிட்டது.

ரவுடி விக்ரம்
ரவுடி விக்ரம்

இந்நிலையில் மற்றொரு வழக்கில் ராஜஸ்தான் காவல்துறையினரால் செப்டம்பர் 5-ம் தேதி விக்ரம் கைது செய்யப்பட்டார். இவர் கைதான விவரம் ஹரியானா காவல்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டது. விக்ரம் மீதான குற்ற வழக்குகள் குறித்தும் இருமாநிலக் காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அல்வார் பகுதிக்குட்பட்ட காவல்நிலையத்தில் அவர் சிறைவைக்கப்பட்டார். நள்ளிரவில் 15 பேர் கொண்ட கும்பல் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. அந்தக்கும்பலை எதிர்கொள்ள முடியாமல் ராஜஸ்தான் காவல்துறையினர் திணறினர். ஏ.கே.47 உள்ளிட்ட நவீன ரக துப்பாக்கிகளை அந்தக்கும்பல் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. காவல்நிலையத்திற்குள் புகுந்த கும்பல் லாக்-அப்பில் அடைக்கப்பட்டிருந்த விக்ரமை மீட்டுச் சென்றது.

ராஜஸ்தான் காவல்துறை வரலாற்றில் சிறைக்கம்பிகளை உடைத்துக்கொண்டு கைதி வெளியேறியது அதுதான் முதல்முறை. உயர் அதிகாரிகள் காவல்நிலையத்தில் இருந்த போதே இந்தச் சம்பவம் நடந்தது அம்மாநில காவல்துறைக்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியது. மர்மக் கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 24 குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்தக் கும்பல் இவ்வாறு தாக்குதல் நடத்துவது முதல்முறையல்ல. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு விக்ரமை ஹரியானா நீதிமன்றத்திலிருந்து விடுவித்துச் செல்ல அந்தக் கும்பல் இதே பாணியைக் கையாண்டது. இதுகுறித்து ஹரியானா காவல்துறை அலர்ட் செய்யத் தவறிவிட்டது.

`சாலையில் அரைநிர்வாணம், போட்டோ எடுத்தனர்!'- ரவுடியைத்  தப்பவைத்த 13 கூட்டாளிகளை அதிரவைத்த போலீஸ்

இதையடுத்து இந்தக் கும்பலைப் பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. ஒரு மாத தேடுதல் வேட்டைக்குப் பின்னர் அந்தக் கும்பலை ஹரியானா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறையை உடைத்து விக்ரமை தப்பிக்க வைத்ததாக அவரது கூட்டாளிகள் 13 பேர் கைதாகியுள்ளனர். பரபரப்பான மார்க்கெட் பகுதிகளில் அந்த 13 நபர்களையும் அரை நிர்வாணக் கோலத்தில் காவலர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். சுமார் 2 கி.மீ தூரம் அழைத்துச்சென்ற பின் அவர்களை வேனில் ஏற்றி காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதற்காக சுமார் 100க்கும் அதிகமான காவலர்கள் மார்க்கெட் பகுதியில் அணிவகுத்தனர். சாலையில் சென்றவர்களை பொதுமக்கள் தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.

இந்தச் செயலுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய காவல்துறை உயர் அதிகாரிகள், ``இந்தச் சம்பவம் மூலம் பொதுமக்களுக்கு எந்தச் செய்தியையும் கூறும் எண்ணம் எங்களுக்கு இல்லை. இது ஸ்பாட் வெரிஃபிகேசன். குற்ற வழக்குகளின் போது நடக்கும் வழக்கமான நடைமுறைதான்” என முடித்துக்கொண்டனர்.