Published:Updated:

`பாசமான மருமகள்; போலீஸ் சந்தேகப் பார்வையில் மகன்'- சென்னைச் சிறுமி கொலையால் தவிக்கும் அத்தை

சென்னை ஆதம்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த 13 வயதுச் சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் உடலில் 12 இடங்களில் கத்திக் குத்து காயங்கள் உள்ளன.

சிறுமி ஷோபனா
சிறுமி ஷோபனா

சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பூபதி. இவரின் மனைவி உஷா. இந்தத் தம்பதிக்கு மெர்லின், ஷோபனா (13) என இரண்டு மகள்கள். சில ஆண்டுகளுக்கு முன் பூபதியும் உஷாவும் இறந்துவிட்டனர். இதனால் மெர்லினும் ஷோபனாவும் ஆதரவின்றி தவித்தனர். அப்போது இருவரையும் அரவணைத்தார் பூபதியின் அக்கா வேதவல்லி.

சிறுமி ஷோபனா
சிறுமி ஷோபனா

மெர்லினுக்குத் திருமணமாகியதால் அவர் கணவர் வீட்டில் குடியிருந்துவருகிறார். வேதவல்லி வீட்டில் ஷோபனா தங்கியிருந்தார். 5-ம் வகுப்பு வரை படித்த ஷோபனா அதற்கு மேல் படிக்கவில்லை. இதனால் வீட்டிலேயே இருந்து வேதவல்லிக்கு உதவியாக இருந்தார். இந்தநிலையில் வழக்கம் போல வேதவல்லி, ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வேலைக்குச் சென்றுவிட்டார்.

வீட்டில் ஷோபனா மட்டும் தனியாக இருந்தார். தங்கையைப் பார்க்க மெர்லின் வீட்டுக்கு வந்தார். அப்போது கதவு வெளிப்பக்கமாக பூட்டியிருந்தது. கதவைத் திறந்து உள்ளே சென்ற மெர்லின் அதிர்ச்சியடைந்தார். ஷோபனாவின் உடலில் 12 இடங்களில் கத்திக் குத்து காயங்கள் இருந்தன. அவரின் ஆடை கலைந்திருந்ததைப் பார்த்த மெர்லின் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கும் ஆதம்பாக்கம் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிறுமி ஷோபனா
சிறுமி ஷோபனா

ஷோபனாவைத் தூக்கிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஷோபனாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீஸார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். அதோடு அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது வேதவல்லியின் மகன் பாபு வீட்டின் அருகில் நின்றபடி போனில் பேசிக்கொண்டிருந்த காட்சி பதிவாகியிருந்தது. இதனால் பாபுவிடம் விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,``கொலை செய்யப்பட்ட ஷோபனாவின் கழுத்து, கை, இடுப்பு, தொடை என 12 இடங்களில் வெட்டு காயங்கள் உள்ளன. வெட்டு காயங்கள் ஆழமாக இல்லை. குறிப்பாக ஷோபனாவின் தொடைப்பகுதியில் சில வெட்டுக் காயங்கள் உள்ளன. இது, எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஷோபனாவின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம்.

சிசிடிவியில் பாபு
சிசிடிவியில் பாபு

ஷோபனாவின் அத்தை வேதவல்லிக்கு பாபு (26), மாதவன் (22) என இரண்டு மகன்கள். பாபுவுக்குத் திருமணமாகிவிட்டதால் அவர் தனியாகக் குடியிருந்துவருகிறார். குடிபழக்கத்துக்கு அடிமையான பாபு, அடிக்கடி அம்மாவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். ஷோபனா கொலை செய்யப்பட்டுக் கிடந்த நேரத்தில் பாபு அங்கு வந்ததற்கான சிசிடிவி ஆதாரம் கிடைத்துள்ளது. தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். அவரிடம் விசாரித்தால்தான் ஷோபனாவைக் கொலை செய்தது யார் என்று தெரியவரும்" என்றனர்.

வேதவல்லியிடம் போலீஸார் விசாரித்தபோது அவர்,``நாங்கள் குடியிருக்கும் வீடு பூபதிக்குச் சொந்தமானது. அந்த வீட்டை தன் பெயருக்கு எழுதித் தரும்படி பாபு, என்னிடம் தகராறில் ஈடுபட்டுவந்தார். ஆனால், நான் ஷோபனாவின் எதிர்காலம் கருதி அந்த வீட்டை பாபுவுக்கு எழுதிக் கொடுக்க சம்மதிக்கவில்லை" என்று கூறியுள்ளார். இந்தத் தகவலை வேதவல்லியின் வீட்டின் அருகில் குடியிருப்பவர்களும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம்

வேதவல்லி குடியிருக்கும் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ``ஷோபனா மீது வேதவல்லி அதிக பாசம் வைத்திருந்தார். அவர் இறந்த தகவலைக் கேட்ட வேதவல்லி கதறி அழுதார். ஷோபனா கொலை வழக்கில் பாபுவின் மீது போலீஸாரின் சந்தேகப் பார்வை விழுந்துள்ளது. இதனால் இருதலைக் கொல்லி எறும்பாக வேதவல்லி இருக்கிறார்" என்றனர்.

ஷோபனாவின் சடலம் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. பிரேத பரிசோதனையில் ஷோபனாவின் இறப்பில் உள்ள மர்மங்கள் தெரிந்துவிடும் என போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சென்னையில் வீட்டில் தனியாக இருந்த 13 வயதுச் சிறுமி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.