Published:Updated:

ஹைதராபாத்: பாலியல் வன்கொடுமை; பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை! - 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை ( Representational Image )

பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், அந்த வீட்டைச் சேர்ந்த திருமணமான வாலிபரை பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி, செய்த குற்றத்தினை மறைக்க முயற்சித்தல் ஆகிய வழக்குகளின் கீழ் கைது செய்துள்ளோம்.

நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் குறையவில்லை. இன்னொருபுறம் நம்மைச் சுற்றி நிகழும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நம் மனதை பதற வைத்துக்கொண்டிருக்கின்றன.

உத்திரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் சம்பவத்தால் ஏற்பட்ட மனக்காயங்களும், சர்ச்சை அலைகளுமே இன்னும் நீங்காமல் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகிலுள்ள கம்மம் மாவட்டத்தில் 13 வயது சிறுமி கடுமையான பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, அச்சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூர சம்பவம் நிகழ்ந்து ஒரு சில வாரங்களுக்கு பிறகே போலீஸாருக்கு தெரியவந்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலிருந்து 195 கி.மீ. தொலைவிலுள்ள கம்மம் மாவட்டத்தில் வீட்டில் பணிப்பெண்னாக வேலைப்பார்த்து வந்த 13 வயது சிறுமியை, அந்த வீட்டைச் சேர்ந்த திருமணமான 26 வயதுடைய நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி கடுமையாக எதிர்க்கவே, அச்சம்பவத்தை மறைக்கும் நோக்கத்தில், சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்ய முயற்சித்துள்ளார். அதனால் ஏற்பட்ட கடுமையான தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப்பிரிவில், சிகிச்சைப்பெற்று வந்த அச்சிறுமி மருத்துவமனையில் இன்று உயிரிழந்துள்ளார்.

பாலியல் வன்முறை:
பாலியல் வன்முறை:

இச்சம்பவம் தொடர்பாக ஷமீர்பேட் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது, தீவிர சிகிச்சையில் இருந்த அச்சிறுமி போலீஸாரிடம், தான் அந்த வீட்டில் வசித்து வரும் முதியவரின் பராமரிப்பாளராக பணிபுரிந்து வந்ததாகவும், தன்னை பாலியல் வன்கொடுமை செய்தது அந்த வீட்டைச் சேர்ந்த பெரியவர் மகன் என்றும் தன்னை கொடூரமான முறையில் வன்கொடுமை செய்த பின்னர் பெட்ரோல் ஊற்றிக் கொலை செய்ய முயற்சித்தார் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த கம்மம் மாவட்ட போலீஸ் கமிஷ்னர் தப்சீர் இக்பால், “பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், அந்த வீட்டைச் சேர்ந்த திருமணமான வாலிபரை பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி, செய்த குற்றத்தினை மறைக்க முயற்சித்தல் ஆகிய வழக்குகளின் கீழ் கைது செய்துள்ளோம். மேலும், இச்சம்வம் நிகழ்ந்த நாளன்று கர்பிணியான அவரது மனைவி தனது பெற்றோர்களை சந்திக்கச் சென்றுள்ளார்” என்று தெரிவித்தார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
representational image

அதுமட்டுமின்றி, நடந்த சம்பவத்தினை தாமதமாக போலீஸாரிடம் தெரியப்படுத்தியதன் காரணம் குறித்து அக்குடும்பத்தினரிடமும், மருத்துவமனை நிர்வாகத்தினரிடமும் விசாரணை மேற்கொள்ள கம்மம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களின் மீது மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு