வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (13/07/2018)

கடைசி தொடர்பு:15:11 (13/07/2018)

பொன்முடி உதவியாளர் கொலை வழக்கில் தொடர்புடைய கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் கைது!

தி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்முடியின் உதவியாளர் கொலை வழக்கில் தொடர்புடைய கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் இரண்டு பேர் ஒரத்தநாடு அருகே வீடு ஒன்றில் தங்கியிருந்தபோது சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டனர். அவர்களோடு சேர்ந்து தங்கியிருந்த மற்ற 5 பேரில் மூன்று பேர் தப்பி ஓடிவிட மேலும் இரண்டு பேரை கைது செய்துள்ளனர் போலீஸார். இவர்கள் சதித்திட்டம் தீட்டுவதற்காகத் தங்கியிருந்தார்கள் எனத் தகவல் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கூலிப்படை

ஒரத்தநாடு அருகே உள்ள வன்னிப்பட்டு தேவபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். சில ஆண்டுகளுக்கு முன் இவரின் மனைவியான காந்திமதியே ஆறுமுகத்தைக் கொலை செய்து வீட்டுக்குள்ளேயே புதைத்து வைத்திருந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த காந்திமதி அதன் பிறகு, அந்த வீட்டைக் காலி செய்துவிட்டு தன் மகன்களான சதீஷ், சுரேஷ் ஆகியோருடன் ஒரத்தநாட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தேவபுரத்தில் உள்ள காந்திமதியின் வீட்டில் கடந்த ஒராண்டாக மர்ம நபர்கள் சிலர் தங்கியிருந்தனர். அவர்கள் குறித்து சந்தேகமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து எஸ்.பி செந்தில்குமாரின் உத்தரவின் பேரில் காந்திமதியின் வீட்டை ரகசியமாகக் கண்காணித்தனர். அதில் சந்தேகத்துக்கிடமான மர்ம நபர்கள் தங்யிருப்பதை உறுதி செய்தனர். பின்னர், நேற்று இரவு மர்ம நபர்கள் தங்கியிருந்த வீட்டை போலீஸார் சுற்றி வளைத்தனர். அந்தச் சமயத்தில் அங்கு தங்கியிருந்த 7 பேரை போலீஸார்  பிடிக்க முயன்றனர். ஆனால், மூன்று பேர் தப்பியோடிவிட நான்கு பேரை மட்டும் போலீஸார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பட்டுக்கோட்டை நரியாம்பாளைத்தைச் சேர்ந்த சுரேஷ், கும்பகோணம் சாக்கோட்டையைச் சேர்ந்த வினோத், திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த அருண்குமார், அருள்சுந்தர் எனத் தெரியவந்தது. இவர்கள் ஒக்கநாடு கீழையூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டே தேவபுரத்தில் தங்கிவந்துள்ளனர். இதில் வினோத் மீது வலங்கைமான், அதிராம்பட்டினம் உள்ளிட்ட காவல் நிலையங்களிலும், அருள்குமார் மீது காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட காவல் நிலையங்களிலும், மேலும் அருள்சுந்தர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இவர்கள் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், இவர்கள் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்குச் சென்று பல்வேறு கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளன. அத்துடன் வினோத் மற்றும் அருண்குமார் தி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்முடி உதவியாளர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதால் போலீஸார் மேலும் தீவிரமாக விசாரிக்க தொடங்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேவபுரத்தைச் சேர்ந்த மக்கள் சினிமாவில் நடப்பது போலவே நம்ம ஊரிலும் நடந்திருக்கிறதே என அதிர்ச்சி விலகாமல் பேசி வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் பேசியபோது, ``கைது செய்யபட்டவர்கள் மீது பல வழக்குகள் உள்ளது. தப்பி சென்ற மூன்று பேர் யார் என விசாரித்து வருகிறோம். இவர்கள் எதற்காக ஒன்றாகத் தங்கி வந்துள்ளனர். ஏதேனும் சதி திட்டத்துடன் இங்கு வந்து தங்கியிருந்தார்களா என்பது விசாரணையில் தெரியவரும்" என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க