
கோவை: கோவை ஃபைன் பியூச்சர் நிதி நிறுவன மோசடியில், அரசுப் பள்ளியின் ஆசிரியர்களே தரகர்களாக செயல்பட்டு பணம் வசூலித்து கொடுத்ததாக மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து 6 ஆசிரியர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
சுமார் 818 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவை ஃபைன் பியூச்சர் நிதி நிறுவன மோசடியை யாரும் மறந்திருக்க முடியாது. அதிக வட்டி தருவதாக சொல்லி பொது மக்கள் மற்றும் வி.ஐ.பி.களிடம் இருந்து பணம் வசூல் செய்து செய்து ஏமாற்றியதாக இந்த நிறுவனத்தை சேர்ந்தவர்களை போலீஸ் கைது செய்தது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்த 60 ஆசிரியைகள் உள்பட சுமார் 200 பேர் நேற்று மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. பாலாஜி சரவணனிடம் புகார் அளித்தனர்.

மடத்துக்குளம் ஒன்றியத்தில் உள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களிடம் சுமார் 16 கோடி ரூபாய் இந்த நிதி நிறுவனத்துக்காக வசூல் செய்யப்பட்டுள்ளது என்றும், நான்கு ஆசிரியர்கள் உள்பட ஆறு பேர் இதற்கு தரகர்களாக இருந்து செயல்பட்டனர் என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
##~~## |

இதைத் தொடர்ந்துதான் மேற்படி புகார் தரப்பட்டுள்ளது. கனியூர் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜமாணிக்கம், ஆசிரியர்கள் சரவணன், கனகராஜ் ஆகியோர் தலைமையில் ஆசிரியர்கள் திரண்டு வந்து பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.
இதற்கிடையே ஆசிரியர்களே ஏஜெண்டுகளாக இருந்து செயல்பட்டுள்ள இந்த தவறு குறித்து விரிவாக விசாரணை செய்ய வேண்டும் என திருப்பூர் மாவட்ட விவசாயிகள் விழிப்புணர்வு அமைப்பின் செயலாளர் முருகானந்தமும், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். ஃபைன் பியூச்சர் நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் இப்போது அரசு ஊழியர்களும் சிக்கியிருப்பதால் கோவை மாவட்டத்தில் பரபரப்பு நிலவுகிறது.
- ஜி.பழனிச்சாமி