மண்வெட்டியால் மனைவி, மகன்கள் படுகொலை!- முன்னாள் எம்.எல்.ஏ மகனின் வெறிச்செயல்

ஜெயக்குமார் என்பவர் தன் மனைவி அனிதாவைத் தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்த நிலையில் நேற்று இரவு குடிபோதையில் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களை மண் வெட்டியால் வெட்டிக் கொலை செய்தார். `இதற்கு துணையாக ஜெயக்குமாரின் இரண்டு தம்பிகளும் இருந்துள்ளனர்' எனக் குற்றம் சாட்டுகிறார்கள் அனிதாவின் உறவினர்கள். ஜெயக்குமார் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ மகன் என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் அருகே உள்ள அன்னப்பன்பேட்டையைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் வலங்கைமான் தொகுதி முன்னாள் தி.மு.க, எம்.எல்.ஏ செல்லப்பா என்பவரின் மகன். செல்லப்பாவின் மனைவி யசோதா செல்லப்பாவும் அதே தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்துள்ளார். இவர்களுக்கு ஜெயக்குமார், சசிக்குமார், செந்தில் என மூன்று மகன்கள் உள்ளனர். மூன்று பேருக்குமே திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் ஜெயக்குமார் எந்த வேலைக்கும் செல்லாமல் குடிப்பதையே முழு நேர வேலையாகச் செய்துள்ளார். இதனால் அடிக்கடி மனைவி அனிதாவை அடித்துத் துன்புறுத்தியுள்ளார். மேலும் வரதட்சணை கேட்டும் அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இதனையடுத்து நேற்று இரவு கடும் குடிபோதையில் இருந்த ஜெயக்குமார் மண்வெட்டியால் தன் மகன்கள் முன் அனிதாவைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். பின்னர் அவரின் மகன்களான மித்துனேஷ் மற்றும் வருணேஷ் ஆகியோரையும் தலையில் பலமாக அடித்துள்ளார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினருடன் ஜெயக்குமாரும் சேர்ந்துகொண்டு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். போகும் வழியிலேயே இரண்டு மகன்கள் இறந்ததுகூட தெரியாமல் போதையில் பிதற்றிக் கொண்டிருக்கிறார் ஜெயக்குமார். மருத்துவக் கல்லூரிக்குச் சென்றதும் தன் தம்பிகளோடு சேர்ந்து விபத்தில் அடிபட்டு `என் மகன்கள் இறந்துட்டாங்க மனைவி உயிருக்குப் போராடிகிட்டு இருக்காள். உடனே அட்மிஷன் போடுங்க' எனக் கூறியிருக்கிறார் ஜெயக்குமார்.

காயங்களைப் பார்த்த டாக்டருக்கு இது விபத்து மாதிரி தெரியவில்லை போலீஸுக்குத் தகவல் கொடுங்க எனக் கூறிவிட்டு சிகிச்சையை ஆரம்பித்திருக்கிறார். இதை அறிந்துகொண்ட ஜெயக்குமார் மற்றும் அவருடன் இருந்தவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த நிலையில் அனிதாவும் உயிரிழந்தார். அனிதா மற்றும் பிள்ளைகள் இறந்த சம்பவம் கேள்விப்பட்டு அவரின் உறவினர்கள் மருத்துவக் கல்லூரி முன்பு திரண்டனர். அப்போது ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட அனைவரும் கதறி அழுதனர்.

அனிதாவின் உறவினர் ஒருவரிடம் பேசினோம், `ஜெயக்குமார் எப்போதும் குடித்துக்கொண்டே இருப்பான். அனிதா அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக இருந்தாங்க. எம்.எல்.ஏ குடும்பம் என்பதால் எங்க பொண்ணை நல்லா வாழ வைப்பாங்க எனக் கொடுத்தோம். நல்லாதான் இருந்தாங்க. இரண்டு ஆண் குழந்தைகள். பெரியவன் எட்டாம் வகுப்பும் சிறியவன் மூன்றாம் வகுப்பும் தனியார் பள்ளி ஒன்றில் படித்தார்கள். சொத்துகள் நிறைய இருந்தும் அனிதாவிடம் அடிக்கடி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவார் ஜெயக்குமார். ஒரு வருடத்துக்கு முன்பு இதேபோல் பிரச்னை ஏற்பட்டு அன்னப்பன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். போலீஸார் கொஞ்ச  நாள் உங்க வீட்டுல வெச்சிப் பார்த்துக்கங்க எனக் கூறி அனிதாவைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.


மீண்டும் இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரச்னையாகி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். பெரிய இடம் என்பதால் எங்கள் கூக்குரல் யாருக்கும் கேட்கவில்லை. பின்னர் அனைவரும் சமாதனப்படுத்தியதால் ஜூன் மாதம் மீண்டும் அனிதாவை ஜெயக்குமார் வீட்டுக்கு அனுப்பி வைத்தோம். நேற்றும் இதேபோல் கடுமையாகக் குடித்துவிட்டு பிரச்னை செய்திருக்கிறான் ஜெயக்குமார். அவனின் இரண்டு தம்பிகளும் இருந்துள்ளனர். இளம் பிஞ்சுகளான அந்தப் பையன்களின் முகத்தைக் கூடப் பார்க்காமல் மண் வெட்டியால் தாக்கியிருக்கிறார்கள். அந்தப் பையன்களின் அலறல் சத்தம் அன்னப்பன் பேட்டையைத் தாண்டியும் கேட்டிருக்கிறது. ஜெயக்குமாருக்கு வாரிசுகள் இல்லாமல் போனால் அந்தச் சொத்துகளையும் அவரின் தம்பிகள் எடுத்துக்கொள்ளலாம் என்பதுதான் திட்டம். அதற்கு ஏற்றவாறு ஜெயக்குமார் குடிக்கு அடிமையாக இருந்துள்ளார். காலையில் சீக்கிரமே ஸ்கூலுக்குப் போகணும் எனச் சொல்லியிருக்கிறான் மித்துனேஷ் அப்ப கூட விடாமல் தகப்பனே இப்படி அரக்கனாக மாறி தன் மகன்களின் உயிரைக் குடித்துள்ளான்.

ஜெயக்குமாரின் சின்னம்மா இளமதி சுப்ரமணியம் அதே தொகுதியில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருந்தவர். இவர்கள் எல்லாம் சேர்ந்து அவனைக் கப்பாற்ற முயற்சி செய்கிறார்கள். இறந்த மூன்று உயிர்களுக்கான நியாயமும் நீதியும் கிடைக்க வேண்டும். ஜெயக்குமார் மட்டுமல்லாமல் இதில் சம்பந்தபட்ட அனைவருக்கும் பெரும் தண்டனை கிடைக்க வேண்டும்’ என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!