Published:Updated:

சுகாதார அமைச்சர் ஊரில் தாயும் சேயும் பலி!

சுகாதார அமைச்சர் ஊரில் தாயும் சேயும் பலி!
பிரீமியம் ஸ்டோரி
News
சுகாதார அமைச்சர் ஊரில் தாயும் சேயும் பலி!

‘அம்மா’ ஆட்சியில் அம்மாக்கள் மரணம்...

மிழகத்தில், கர்ப்பிணிகள் பிரசவத்தின்போது மரணம் அடையும் சோகம் அதிகம் நிகழ்வது எங்கே தெரியுமா? சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மாவட்டமான புதுக்கோட்டையில்தான். ‘அம்மா ஆட்சி’ என மூச்சுக்கு முந்நூறு தரம் சொல்பவர்களின் ஆட்சியில் அம்மாக்களின் மரணம் அதிகரிப்பது வேதனை.

புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனை, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைக்கப்பட்டது. இங்கு, ஒவ்வொரு மாதமும் சுமார் 500 பிரசவங்கள் பார்க்கப்படுகின்றன. இங்கு, போதிய மருத்துவர்கள் இல்லாததால், கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழக்கும் துயரச் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

சுகாதார அமைச்சர் ஊரில் தாயும் சேயும் பலி!

இது சமீபத்திய சம்பவம். புதுக்கோட்டை, ஆலங்குடியை அடுத்த அரசடிப்பட்டியைச் சேர்ந்த கருப்பையாவின் மனைவி தேவிக்கு மே 22-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவரை, ஆலங்குடி அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு தேவியைப் பரிசோதித்த மருத்துவர்கள், உதிரப்போக்கு அதிகமாக இருப்பதால் ராணியார் மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் அனுப்பிவைத்துள்ளனர்.

அதன் பிறகு நடந்தவற்றை நம்மிடம் கண்ணீருடன் விவரித்தார், தேவியின் மாமியார் லோகம்பாள். “நாங்களும் நம்பிக்கையோடு தேவியை, ராணியார் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றோம். உள்ளே நுழைந்தபோதே, ‘ஆஸ்பத்திரியில டாக்டர் இல்லை. நீங்க இந்த கேஸை தஞ்சாவூருக்குக் கொண்டு போங்க’ என்று ஊழியர் ஒருவர் சொன்னார். ‘என் மருமகள் வலியால் துடிக்குது. கொஞ்சம் மனசு வெச்சு வைத்தியம் பார்க்கச் சொல்லுங்க சார்’ எனக் கெஞ்சினோம். ‘டாக்டரே இல்ல. எப்படி வைத்தியம் பார்க்க முடியும்?’னு தஞ்சாவூருக்குக் கொண்டுபோகச் சொல்லிட்டாங்க. தஞ்சாவூருக்குப் போகிற வழியில், ரத்தப்போக்கு அதிகமாகி தேவியும், குழந்தையும் இறந்துட்டாங்க” என்று கதறினார் லோகம்பாள்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த சாந்தி, கீரனூர் ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஆராயி, மழவராயன்பட்டியைச் சேர்ந்த போதும்பொண்ணு என்று கடந்த வாரத்தில் மட்டும் மூன்று கர்ப்பிணிப் பெண்கள் இங்கு மரணம் அடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சர் ஊரில் தாயும் சேயும் பலி!

ராணியார் மருத்துவமனையில் தன் மனைவியைப் பிரசவத்துக்காகச் சேர்த்தபோது, அங்கு சந்தித்த மோசமான அனுபவங்களை நம்மிடம் சொன்னார் கனகராஜ்.

“பிரசவத்துக்கான உயர் சிகிச்சை அளிப்பதற்கு அனைத்து வசதிகளும் இங்கு உள்ளன. கருவிகள் மட்டும் இருந்து என்ன புண்ணியம்? பிரசவமும் சிகிச்சையும் பார்க்க டாக்டர்கள் இல்லையே. எதுவும் முடியாமல் கையை விரித்து, கடைசி நேரத்தில் தஞ்சை, திருச்சி போன்ற இடங்களுக்கும், சில தனியார் மருத்துவமனைகளுக்கும் பரிந்துரை செய்கிறார்கள். இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. ஆள் பற்றாக்குறை இருப்பதால், பணியில் இருக்கும் சிலரே அதிக வேலை பார்க்க வேண்டிய நிர்பந்தம். அதனால் இங்கு பணிபுரியும் நர்ஸ்கள், கர்ப்பிணிப் பெண்களிடம் மிக மோசமாக நடந்துகொள்கிறார்கள்; அசிங்கமாகத் திட்டுகிறார்கள். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட என் மனைவியிடம் இரக்கமின்றி நடந்துகொண்டார்கள். அதுபற்றி நான் கேட்டபோது, பிரச்னையாகி என்மீது வழக்குப் போட்டுள்ளார்கள்.மருத்துவமனை யின் தவறுகளை மூடி மறைக்கவே பார்க்கிறார்கள்” என்றார்.

ஊழியர்கள் சிலரிடம் பேசினோம். “இந்த மருத்துவமனையில் 50 சதவிகிதப் பணியிடங்கள் காலியாக உள்ளன. 10 டாக்டர்கள் இருக்க வேண்டிய இடத்தில் இரண்டு பேர்தான் உள்ளனர்.அவர்களும் மனிதர்கள்தானே. ராத்திரி பகலாக உழைக்கிறோம். தொடர்ச்சியான பணிச்சுமையால், பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். என்னதான் கவனமாக சிகிச்சை அளித்தாலும், ஆட்கள் பற்றாக்குறையால் உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியவில்லை” என்றனர்.

சுகாதார அமைச்சர் ஊரில் தாயும் சேயும் பலி!

இந்த விவகாரம் குறித்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாசராஜுவிடம் கேட்டோம். “கர்ப்பிணிகள் இறப்பு குறித்து விசாரணை நடக்கிறது. இங்கு, மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பது உண்மைதான். அதனால், உயிரிழப்புகளைத் தவிர்க்க இயலவில்லை என்கிறார்கள். உடனடியாக இதனைச் சரிசெய்ய வெளிமாவட்டங்களில் இருந்து மருத்துவர்களைத் தற்காலிகப் பணிக்கு அழைத்துள்ளோம். ராணியார் மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைக்கப்பட்டுள்ளதால், புதிய பணியிடங்களை உருவாக்கி உள்ளோம். இன்னும் சில தினங்களில் மருத்துவர்களுக்கான கவுன்சிலிங் நடக்க இருப்பதால், காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும். மற்றபடி, ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து புகார் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

சுகாதாரத்துறை அமைச்சருக்கு வழக்கு, விசாரணை என ஆயிரம் வேலைகள் இருக்கும்போது, இதை எல்லாம் கவனிக்க நேரம் எங்கே இருக்கப்போகிறது?

- சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: ம.அரவிந்த்