Published:Updated:

பரஞ்சோதியின் 'அரசியல்' தந்திரம்!

அம்பலப்படுத்துகிறார் டாக்டர் ராணி

##~##

'அமைச்சராக இருப்பவர் மீதே வழக்கா?’ என்று தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது பரஞ்சோதி விவகாரம். 

விஷயம் இதுதான்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'கடந்த 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட இப்போதைய அமைச்சர் பரஞ்சோதி, தேர்தல் செலவுகளுக்காக என்னிடம் இருந்து 60 சவரன் நகைகளை வாங்கினார். அந்த நகைகளுக்குப் பதிலாக ஒரு வீட்டு மனையைப் பதிவுசெய்து தருவதாகச் சொன்னார். ஆனால், வீட்டு மனையை தராமல், நகைக்கான பணத்தையும் திருப்பித் தராமல் மோசடி செய்துவிட்டார். அவர் மீது புகார் கொடுத்தால், காவல் நிலையத்தில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்’ என்று பரஞ்சோதியின் இரண்டாவது மனைவி என்று சொல்லிக்கொள்ளும் டாக்டர் ராணி, திருச்சி ஜே.எம்.4 கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மாஜிஸ்திரேட் புஷ்ப​ராணி, 'திருச்சி அரசு மருத்துவமனை போலீஸார் இந்த புகாரைப் பதிவு செய்து விசாரணை நடத்தி, டிசம்பர் 9-ம் தேதிக்குள் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவு போட்டிருக்கிறார்.

பரஞ்சோதியின் 'அரசியல்' தந்திரம்!

திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் பரஞ்சோதி என்று அறிவிப்பு வந்ததுமே, 'என்னை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு ஏமாற்றியவர் பரஞ்சோதி. அவரை தமிழக முதல்வர் ஜெயலலிதா மாற்றிவிட்டு வேறு ஒருவரை வேட்பாளராக்க வேண்டும்’ என்று  கிளம்பினார் ராணி. ஆனால், அவர் கிளப்பிய புகாரைக் கொஞ்சமும் சட்டை செய்யவில்லை ஜெயலலிதா. எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க-வின் கே.என்.நேருவை வீழ்த்தி வெற்றி கண்ட பின்னர் பரஞ்​சோதிக்கு கிடுகிடு ஏறுமுகம். திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பதவி, அமைச்சர் பதவி என்று அரசியலில் உச்சத்துக்குச் சென்றார்.  

இடைத்தேர்தல் பிரசாரம் நடந்தபோதே, பரஞ்சோதி மீது நகை அபகரிப்புப் புகாரை திருச்சி போலீஸாருக்கு அனுப்பிவைத்தார். நடவடிக்கை இல்லை என்றதும், 'புகார் மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் மறுக்கிறார்கள்’ என்று மதுரை உயர் நீதிமன்றம் போனார். அதனைத் தள்ளுபடி செய்த மதுரை உயர் நீதிமன்றம், திருச்சி கோர்ட்டை நாடுமாறு அறிவுறுத்தியது. அதன்பேரில் திருச்சி ஜே.எம்.4 கோர்ட்டில் தாக்கல் செய்த மனு மீதுதான் இப்படி ஓர் அதிரடி உத்தரவு வந்திருக்கிறது. நீதிமன்ற

பரஞ்சோதியின் 'அரசியல்' தந்திரம்!

உத்தரவின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸாரும் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

டாக்டர் ராணியிடம் பேசினோம். ''கோர்ட் உத்தரவை மீடியாக்களுக்கு அளித்து வெளிவரச் செய்ததே பரஞ்சோதிதான். கோர்ட் உத்தரவு நவம்பர் 11-ம் தேதி வந்தது. போலீஸார் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதைப் பார்த்துவிட்டு மீடியாக்களிடம் செல்லலாம் என்ற முடிவில் நானும் வழக்கறிஞரும் இருந்தோம். ஆனால், திடீரென 22-ம் தேதி பரஞ்சோதி தரப்பைச் சேர்ந்த வக்கீல் ஒருவரே மீடியாக்களுக்கு போன் செய்து தகவலை சொல்லி இருக்கிறார்.

பரஞ்சோதிக்கு எதிரான ஒரு செய்தியை எதற்காக அவரே பரப்ப வேண்டும் என்று உங்களுக்கு கேள்வி எழலாம். அதுதான், பரஞ்சோதியின் அரசியல் தந்திரம். பரஞ்சோதியை வேட்பாளராக அறிவித்ததும், நான் கிளப்பிய புகாருக்கு ஏன் முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கவில்லை தெரியுமா? அவை தி.மு.க. சார்பு மீடியாக்களில் பெரிதாக ஃப்ளாஷ் ஆனதுதான். 'இவர்கள் சொல்லி நான் என்ன நடவடிக்கை எடுப்பது?’ என்று ஜெயலலிதா உறுதியாக இருந்தார். அவர் ஜெயித்ததும் மாவட்டச் செயலாளர் பொறுப்பு, அமைச்சர் பதவி எல்லாம் வழங்கி அழகு பார்த்தார். இந்து சமய அறநிலையத் துறையோடு சட்டம் மற்றும் சிறைத் துறையையும் ஒதுக்கினார். ஆனால், இப்போது பரஞ்சோதியிடம் இருந்து சட்டம் மற்றும் சிறைத் துறையை மாற்றும் முடிவுக்கு முதல்வர் வந்திருப்பதாக, நம்பகரமான வட்டாரத்தில் இருந்து அவருக்கு தகவல் வந்திருக்கிறது. அதனைக் கேட்டதும் கலங்கிப்போன பரஞ்சோதி போட்ட திட்டம்தான் இது. 11-ம் தேதி கோர்ட் உத்தரவு வந்து மீடியாக்கள் சரிவரக் கவனிக்காமல்விட்ட விவகாரத்தை, முதல்​வர் பெங்களூரூ நீதிமன்றத்தில் ஆஜராகும் 22-ம் தேதி வெளிவருமாறு பார்த்துக்கொண்டார். அவர் எதிர்பார்த்தது போலவே தி.மு.க. ஆதரவு மீடியாக்களில் இந்த செய்தி பரபரப்பாக வெளியானது. இந்த சமயத்தில் பரஞ்சோதியிடம் இருந்து சட்டம் மற்றும் சிறைத் துறையைப் பறித்தால், மீடியாக்கள் சொன்னதன் பேரிலேயே அவரது அதிகாரம் குறைக்கப்பட்டது என்ற பேச்சு எழும். அதன் காரணமாகவே முதல்வர் நடவடிக்கை எடுக்க மாட்டார் என்பது பரஞ்சோதியின் திட்டம்'' என்று சொல்கிறார் ராணி.  

அமைச்சர் பரஞ்சோதியின் கருத்தை அறிய அவரது செல்போனில் தொடர்புகொண்டோம். போனை எடுத்த அவரது உதவியாளர், ''அமைச்சர் இப்போது அம்மாவுடன் பெங்களூரு நீதிமன்றத்தில் இருக்கிறார். பிறகு பேசுங்களேன்'' என்றார். அதன் பின்னர் இரண்டு நாட்களாகத் தொடர்ந்து பலமுறை தொடர்புகொண்டும், ''அமைச்சர் மீட்டிங்கில் இருக்கிறார்... அவரே தொடர்புகொள்வார்'' என்றே பதில் கிடைத்தது. பரஞ்சோதியின் கருத்தை வெளியிட நாம் இப்போதும் தயாராகவே இருக்கிறோம்.

சட்டம் அதன் கடமையைச் செய்கிறதா என்று பார்ப்போம்!

- ஆர்.லோகநாதன்

படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்