Published:Updated:

யானைகளை வைத்து சிறப்பு பூஜையா?

முகாமுக்கு எதிராக வன ஆர்வலர்கள்

##~##

டந்த அ.தி.மு.க. ஆட்சியில் கோயில் யானைகளுக்கு முதுமலையில் நடத்தப்பட்ட புத்துணர்வு முகாமை யாராலும் மறந்திருக்க முடியாது. முகாமுக்குச் செல்ல லாரிகளில் ஏற மறுத்த யானைகளை அங்குசத்தால் குத்தியபோது 'அச்சச்சோ...’ எனவும், முகாமில் ராஜ கவனிப்பு வழங்கப்பட்டதும் 'அடடே!’ என்றும் மக்கள் ஆழ்ந்து கவனித்தார்கள். அடுத்து வந்த தி.மு.க. ஆட்சியில் முடக்கப்பட்ட இந்தத் திட்டம், இப்போது மீண்டும் தூசு தட்டப்படுகிறது. ஆரம்ப நிலையிலேயே, மீண்டும் கடும் எதிர்ப்பு! 

கோயில் யானைகளுக்கு மீண்டும் புத்துணர்வு முகாம் நடத்துவதற்காக நீலகிரி மாவட்டம் மசினக்குடி மற்றும் தெப்பக்காடு பகுதிகளில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் மற்றும் அதிகாரிகள் கடந்த 19-ம் தேதி ஆய்வை மேற்கொண்டனர். கலெக்டர் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் முகாமை எந்த இடத்தில், எவ்வாறு நடத்தலாம் என்று ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
யானைகளை வைத்து சிறப்பு பூஜையா?

இதுகுறித்து, 'தி நேச்சர் டிரஸ்ட்’ நிறுவனரான திருநாரணன், ''கோயில் யானைகளைப் பாவப்பட்ட உயிரினம் என்றுதான் சொல்லவேண்டும். காட்டில் சுதந்திரமாகத் திரிய வேண்டிய அந்த உயிர்களை சாமி சிலையைத் தூக்கவும், மணியடிக்கவும் வைத்து டார்ச்சர் பண்றாங்க. அந்த ஜீவன்களுக்கு சத்தான ஆகாரம், மருத்துவக் கவனிப்பு எல்லாம் வழங்க அரசாங்கம் நடத்துற புத்துணர்வு முகாம்களை

யானைகளை வைத்து சிறப்பு பூஜையா?

மனசார வரவேற்கிறோம். ஆனால், அந்த முகாமை நடத்துவதற்கு தேர்வு செய்த இடம்தான் தவறு. யானைகள் இனப்பெருக்க முயற்சியை மேற்கொள்வதே இந்த வனப் பகுதிகளில்தான். அதோடு முதுமலை புலிகள் காப்பகமும் இங்கு இருக்கிறது. இப்படிப்பட்ட பகுதியில், கோயில் யானைகளுக்கு முகாம் நடத்துவது, நோய்த் தொற்றுக்குத்தான் வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள கோயில் யானைகளுக்கு கணிசமாக ஆஸ்துமா நோய் பாதிப்பு இருக்கிறது. யானைகளுக்குப் பழம், தேங்காய் கொடுக்கக் கூடாது என்று எழுதிப் போட்டிருந்தாலும்கூட, சர்க்கரைப் பொங்கல், முறுக்கு, மிக்சர் என்று கையில் கிடைத்ததை எல்லாம் மக்கள் கொடுக்கிறாங்க. அதனால், கோயில் யானைகளின் வயிற்றில் குடல் புழுக்கள் எக்கச்சக்கமா உருவாகிவிடும். பெரும்பாலான யானைகளுக்கு முதுகு, கால்களில் புண்கள் இருக்கின்றன. இப்படி நோய் பாதிப்புக்கு உள்ளான யானைகளைப் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியான முதுமலைக்குக் கொண்டுவந்தால், அவற்றின் மூச்சுக் காற்று, சாணம், சிறுநீர் மற்றும் எச்சில் மூலமாக நோய்க் கிருமிகள் பரவும். காட்டு யானைகள் உள்ளிட்ட அத்தனை வன விலங்குகளும் பாதிக்கப்படும். யானைகளை அங்கே ஓடும் மாயாற்றில் குளிக்கவைப்பது புத்துணர்வு முகாமில் முக்கியமான ஒரு நடவடிக்கை. அந்த யானைகள் குளிக்கும் நீரை, காட்டில் இருக்கும் மற்ற விலங்குகள் குடிப்பதாலும் பாதிப்புகள் ஏற்படும். முதுமலைப் பகுதியில் யானை, புலி, அரிய வகை சருகுமான் என்று ஆயிரக்கணக்கான விலங்குகள் இருக்கின்றன. நூறு யானைகளோட நலனுக்காக, இத்தனை விலங்குகளையும் அபாயத்துக்கு உள்ளாக்க வேண்டுமா? வனப் பின்னணி இல்லாத முக்கொம்பு போன்ற இடத்தில் முகாமை நடத்துவதுதான் சிறந்தது'' என்றார்.  

யானைப் பாகன்கள் சிலரிடம் பேசியபோது, ''குளிர் காலத்தில் முதுமலைக்கு யானைகளைக் கொண்டுசெல்வதால் யானைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் திருச்சிக்கு அருகில் இருக்கும் வாத்தலை, திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் களக்காடு போன்ற இடங்களில் நடத்தலாம்'' என்றனர்.

தமிழகப் பசுமை இயக்கத்தின் இணைச் செயலாளர் ஜெயச்சந்திரன், ''ஆஸ்துமா, டி.பி. உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்ட யானைகளுக்காக முதுமலையில் புத்துணர்வு முகாம் நடத்துவது, வனப் பாதுகாப்புக்கு விடப்படும் மிகப் பெரிய சவால். இந்த யானைகளிடம் இருந்து காட்டு விலங்குகளுக்கு மட்டுமின்றி, ஆதிவாசி மக்களுக்கும், தெப்பக்காட்டில் நிரந்தரமாக அமைந்திருக்கும் முகாமில் உள்ள யானைகளுக்கும் நோய்த் தொற்று ஏற்படும். எனவே, முதுமலைதான் என்று அரசாங்கம் முடிவு செய்துவிட்டால், நிச்சயம் உயர் நீதிமன்றம் சென்று தடை உத்தரவு வாங்குவோம்'' என்றார் உறுதியாக. 

யானைகளை வைத்து சிறப்பு பூஜையா?

கோயில்களில் இருக்​கும் யானைகளுடன், மடங்​களுக்குச் சொந்தமான யா​னைகளும் முகாமில் கலந்துகொள்ள வேண்டும் என்று உத்தரவு வந்துள்ளதாம். காஞ்சி மடத்தைச் சேர்ந்த யானைகளை முகாமுக்கு அனுப்பாமல் தவிர்க்க, மடத்தில் உள்ள மூன்று யானைகளையும் கால்நடை மருத்துவரிடம் காட்டி, 'அவை காட்டுக்கு வரத் தகுதி இல்லாதவை’ என சான்று வாங்கி இருக்கிறதாம் ஜெயேந்திரர் தரப்பு. திருப்பனந்தாள் மடத்து யானை முகாமுக்கு வர வேண்டும் என்று உத்தரவு சென்றதாகவும், 'எங்களால் செலவு செய்து அனுப்ப இயலாது. வேண்டுமானால், அந்த செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளட்டும்’ என்று கூறி இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

இந்து அறநிலையத் துறை அமைச்சரான பரஞ்சோதியிடம் பேசியபோது, ''ஆய்வுப் பணிகள் குறித்து வெளிப்படையாக எதுவும் சொல்வதற்கு இல்லை. முதுமலையில் முகாம் நடத்துவதை ஆட்சேபித்து வரும் கருத்துகள் அம்மாவின் கனிவான கவனத்துக்குக் கொண்டுசெல்லப்படும்'' என்றார்.

புத்துணர்வு முகாமில் கலந்துகொள்ளும் யானைகளை வைத்து, 'வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை பெற சிறப்பு பூஜை’ நடத்த இருப்பதாகவும் ஒரு தகவல் தடதடக்கிறது!  

- எஸ்.ஷக்தி, 'ப்ரீத்தி’ கார்த்திக்

படங்கள்: தி.விஜய்