
‘‘எடை குறைக்கப் போனாள்... பிணமாக வந்தாள்!’’ - விபரீத சிகிச்சை
‘ஒல்லியாக இருப்பதே அழகு’ என்ற கருத்து உலகம் எங்கும் பரவி, உயிரைக் கொல்லும் கருத்தாகவும் மாறி இருக்கிறது. இந்தப் பட்டியலில் இன்னொரு வேதனை பலி, சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் சக்தி - மங்கையர்க்கரசி தம்பதியினரின் ஒரே மகள் பாக்யஸ்ரீ.

கண்ணீரோடு அந்த வேதனையைப் பகிர்ந்துகொண்டார் சக்தி. ‘‘அவளுக்கு 17 வயது. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துக் கொண்டிருந்தாள். ‘கொஞ்சம் எடை குறைந்தால் அழகாக இருப்பாள்’ என்று நானும் என் மனைவியும் ஆசைப்பட்டோம். அதற்காக ஹெர்போகேர் மருத்துவமனையின் உரிமையாளர் நவீன் பாலாஜியைச் சந்தித்தேன். அவர் என் மனைவிக்கு சித்தப்பா முறை. அவருடைய உண்மையான பெயர் ஸ்ரீகுமார். அவருடைய ஆலோசனையை அடுத்து ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே உள்ள அவருடைய ஹெர்போகேர் சென்டரில் என் மகளைச் சேர்த்தோம்.
தொடர்ந்து நான்கு நாட்கள் பேதி மருந்து கொடுத்து மயக்க நிலையை ஏற்படுத்திவிட்டு, 10 நாட்களுக்குச் சாப்பிடுவதற்கு எதுவும் கொடுக்காமல் அவர்களுடைய மருந்தை வாயைப் பிளந்து ஊற்றினார்கள். பார்ப்பதற்கே நரக வேதனையாக இருக்கும். 10 நாட்கள் கழித்து மகளைப் பரிதாபமாக வீட்டுக்குக் கூட்டி வந்தோம். வீட்டுக்கு வந்ததும் அவள் சுருண்டு கீழே விழுந்தாள். பதறிப் போய் நவீன் பாலாஜியிடம் விஷயத்தைச் சொன்னோம். ‘இப்போதுதான் மருந்து வேலை செய்கிறது. உடனே மருத்துவமனைக்குக் கூட்டி வாருங்கள்’ என்றார். மீண்டும் கூட்டிப்போய் சேர்த்தோம். முன்பு போலவே தொடர்ந்து பேதி மருந்து கொடுத் தார்கள். மகள் கண் விழிக்க முடியாமல் மயக்கத்திலேயே இருந்தாள். நவீன் பாலாஜியிடம் சொல்லி அழுததற்கு, ‘அவள் ஓய்வெடுக்கிறாள். தொந்தரவு செய்யாதீர்கள். உங்கள் மைத்துனனுக்குத் திருமணம் என்றீர்களே... கிளம்புங்கள். பாக்யஸ்ரீயை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று எங்களை வலுக்கட்டாயமாக, கடந்த 7-ம் தேதி அனுப்பி விட்டார்கள்.

திருமணத்துக்காக அரூர் சென்றுவிட்டோம். 8-ம் தேதி காலை மருத்துவமனையில் இருந்து என் முகவரி கேட்டார்கள். பிறகு ‘உங்க மகள் குணமாகிவிட்டாள். உங்களைப் பார்க்க ஆசைப்படுகிறாள்’ என்றார்கள். நாங்களும் அவசரமாக வீட்டுக்கு வந்தோம். நாங்கள் வந்த கொஞ்ச நேரத்தில் ஆம்புலன்ஸில் என் மகளைப் பிணமாகத்தான் கூட்டி வந்தார்கள். வீட்டு வாசலில் அவள் உடலை வைத்துவிட்டுப் போய்விட்டார்கள்’ என்று தலை தலையாக அடித்துக்கொண்டு அழுதார்.

பல ஊர்களில் கிளைகள் வைத்து, பலவித சிகிச்சைகளைத் தருவதாக விளம்பரம் செய்து கொள்ளும் நவீன் பாலாஜி, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் உள்ளிட்ட பல வி.ஐ.பி-களுடன் போட்டோ எடுத்து வைத்திருப்பது வழக்கம். அவரிடம் பேசியபோது, ‘‘அந்தப் பெண் என்னுடைய பேத்தி முறை. உடல் பருமனைக் குறைக்க மட்டுமே வரவில்லை. வலிப்பு, சளி, கண்பார்வை பாதிப்பு, மூச்சுத் திணறல் எனப் பல நோய்கள் பிறவியில் இருந்த உள்ளன. அதற்காக தமிழகத்தில் உள்ள பிரபல மருத்துவமனைகளில் காண்பித்து, குணப்படுத்த முடியாத நிலையில்தான் இங்கு வந்தார்கள். என்னுடைய மருத்துவமனையில் 70-க்கும் மேற்பட்ட அரசு பதிவுபெற்ற இயற்கை மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஜூஸ், மண் குளியல், வாழை இலை குளியல் போன்றவற்றின் மூலம் மூளையில் இருந்து பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றி இயற்கை வைத்தியம் செய்கிறார்கள். பாக்யஸ்ரீ திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்துவிட்டாள். இதற்கான அனைத்து ஆவணங்களையும் வைத்திருக்கிறோம். மகளை இழந்ததால் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகிறார்கள்’’ என்றார்.
கவுந்தப்பாடி இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி யிடம் கேட்டதற்கு, ‘‘பாக்யஸ்ரீயின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஹெர்போகேர் மருத்துவமனையின் மீது வழக்குப் போட்டிருக் கிறோம். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
எடை குறைத்தல், முடி நரைத்தல் இதற்கெல்லாம் உயிரைப் பணயம் வைப்பது அர்த்தமற்றது
- வீ.கே.ரமேஷ்
படங்கள்: எம்.விஜயகுமார்
‘‘குண்டாக இருப்பது கொலைக் குற்றமில்லை!”

‘‘முன்பெல்லாம் குழந்தைகள் சற்றே பூசினாற்போல இருந்தால் பெற்றோர் கொண்டாடுவார்கள். இன்று ‘அதைச் சாப்பிடாதே... இதைத் தொடாதே... வெயிட் போட்டுடும்... நாளைக்குக் கல்யாணமாகாது’ என்றெல்லாம் அழுத்தம் கொடுக்கிறார்கள். குழந்தைகளின் நிறத்தையோ உடல் அளவையோ சுட்டிக்காட்டிப் பேசுவதையும், பட்டப் பெயர் வைத்து அழைப்பதையும் பெற்றோர் தவிர்க்க வேண்டும். தன்னம்பிக்கை என்பது அவர்களின் தனிப்பட்ட திறமைகள் சார்ந்தது என்று புரிய வைக்க வேண்டும். `ஆரோக்கியமாக இருப்பது வேறு... அழகாக இருப்பது வேறு’ என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கறுப்பாக இருப்பதோ, குண்டாக இருப்பதோ, ஆரோக்கியக் கேட்டின் அடையாளங்கள் இல்லை. குண்டாக இருப்பது கொலைக் குற்றமில்லை என்பதைப் பெற்றோர் புரிந்துகொண்டு பிள்ளைகளுக்கும் புரிய வைக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பாதிக்காத வரை பருமன் என்பது ஆபத்தாவதில்லை” என்கிறார் உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த்.
- ஆர்.வைதேகி