Published:Updated:

`யார் இந்தக் கவிதா?' - அறநிலையத்துறையை ஆட்டிப்படைத்த பின்னணி

`யார் இந்தக் கவிதா?' - அறநிலையத்துறையை ஆட்டிப்படைத்த பின்னணி
News
`யார் இந்தக் கவிதா?' - அறநிலையத்துறையை ஆட்டிப்படைத்த பின்னணி

`யார் இந்தக் கவிதா?' - அறநிலையத்துறையை ஆட்டிப்படைத்த பின்னணி

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சிலை செய்ததில் மோசடியில் ஈடுபட்டதாக அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கவிதா, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பணிப் பிரிவின் தலைமை அதிகாரியாக இருக்கும் கவிதாவின் கைது அறநிலையத்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் வழிபாடுகளுக்கு மட்டுமின்றி கலை மற்றும் சிற்பங்களுக்காவும் பிரமாண்டமாகப் பல கோயில்களைக் கட்டியிருக்கிறார்கள். கோயில்களை நிர்வகிக்க ஓர் ஊரையே தானமாகக் கொடுத்த வரலாற்றையும் நாமறிவோம். இத்தனை புராதனமான கோயில்கள் அனைத்தும் தற்போது தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் வருகின்றன.

தமிழகத்தில் மட்டும் சுமார் 36,000-த்துக்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களில் சிறிய மண்டபம் கட்டுவது முதல் கோயில் கும்பாபிஷேகத்துக்குத் திருப்பணி செய்வது வரை எந்தவகை திருப்பணியாக இருந்தாலும் சென்னையில் உள்ள அறநிலையத்துறை அலுவலகம் அனுமதி கொடுத்த பிறகுதான் செய்ய முடியும். இந்த மிகப்பெரிய பொறுப்புக்குக் கூடுதல் ஆணையரை நியமித்து திருப்பணிகளைக் கவனித்து வந்தது அறநிலையத்துறை. திருப்பணிப் பிரிவின் கூடுதல் ஆணையராகப் பதவி வகித்து வந்தவர்தான் கவிதா. சிலை மோசடி வழக்கில் அவர் இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

2015-ல், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் ‘சோமாஸ் கந்தர்’ சிலை பழுதடைந்ததால் புதிய சிலை செய்ய  உத்தரவு பெற்று, 50 கிலோ எடையில், ரூ.2.12 கோடி செலவில் புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டு, 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இந்தச் சிலையில் அறநிலையத்துறை குறிப்பிட்ட 5 சதவிகித தங்கம்கூட கலக்கப்படவில்லை என்று பக்தர்கள் தரப்பில் புகார் எழுந்தது. உபயதாரர்களிடமிருந்து பெறப்பட்ட தங்கத்திலும் கோயில் அதிகாரிகள் முறைகேடுகள் செய்திருப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் அண்ணாமலை என்ற பக்தர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் விசாரணை செய்து அறிக்கை அளிக்குமாறு, காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு, வழக்கு சிலைகடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் விசாரணை நடைபெற்றது. 

விசாரணையின் அடிப்படையில் சிலை செய்வதில் 5.75 கிலோ தங்கம் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக தலைமை ஸ்தபதி முத்தையா, கோயில் செயல் அலுவலர் முருகேசன், ஸ்தானிகர் ராஜப்பா மற்றும் செந்தில், கிருஷ்ணமூர்த்தி, சங்கரன், பரத்குமார், வினோத்குமார், சுவாமிமலை மாசிலாமணி ஸ்தபதி ஆகிய 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிலை செய்வதற்கு பக்தர்களிடமிருந்து பெறப்பட்ட தங்கத்துக்கு எந்தவித கணக்கு வழக்குகளும் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது. தற்போது, இந்த வழக்கின் விசாரணையின்போது, இக்கோயில் அலுவலர்கள் இந்தச் சிலை செய்வதற்கு 5 லட்சம் ரூபாய் பணம் கவிதாவிடம் கொடுத்திருப்பதாகக் கோயில் அர்ச்சகர் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு இன்று காலை கவிதா அவருடைய இல்லத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரைக் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.

கவிதா மீது, மேலும் சில புகார்கள் இருப்பதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. காஞ்சிபுரம் இரட்டைத் திருமாளிகை சிதிலமடைந்தது, அதைச் சீரமைக்க, 79.90 லட்சம் ரூபாயை அறநிலையத்துறை ஒதுக்கியது. மேலும், மாளிகையின் கீழ்ப் பகுதியைச் சீரமைக்க 65 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இவ்வளவு பணம் ஒதுக்கியும் திருப்பணிகள் முறையாக நடக்கவில்லை என்றும், மாளிகையில் இருந்த சிற்ப வேலைப்பாடுகளுடைய தூண்களைக் கூடுதல் ஆணையர் கவிதாவுக்குத் தெரிந்தே அந்நியர்களுக்கு விதிகளை மீறி விற்றுவிட்டதாகவும் இவர் மீது ஓர் குற்றச்சாட்டு உள்ளது. இதையடுத்து, காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் நீதிபதி மீனாட்சி முன் விசாரணைக்கு வந்த வழக்கில், இந்து அறநிலையத்துறை திருப்பணிகள் கூடுதல் ஆணையர் கவிதா, இணை ஆணையர் சிவாஜி, உதவி ஆணையர் ரமணி, கோவில் செயல் அலுவலர் முருகேசன், கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்ரமணியம், ஸ்தபதி மாமல்லபுரம் நந்தகுமார் ஆகிய 6 பேர் மீது சிவ காஞ்சிபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது, இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், திருத்தணி கோயில் தங்க விமானம் செய்யும் திருப்பணியிலும் தங்கத்தில் முறைகேடு செய்திருப்பதாகவும், தங்கக் கோபுர ஒப்பந்தக்காரருடன் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாகவும் அதற்கான வழக்கு விஜிலென்ஸ் விசாரித்து வருவதும் இவர் மீதுள்ள குற்றச்சாட்டுகளில் மிக முக்கியமானது.

கறைபடாத கைகளுக்குச் சொந்தக்காரர் என்று அறநிலையத்துறை கவிதாவை பாராட்டி வந்த நிலையில், இவரது கைது நடவடிக்கை மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து  சில அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பேசினோம்..  ''கவிதாவை கைது செய்தது பொன்.மாணிக்கவேலின் திட்டமிட்ட சதி. சமூகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவரை வேண்டும் என்றே இதுபோன்ற வழக்குகளில் மாட்டிவிட்டிருக்கிறார்கள். இதுவரை எந்தவித நேரடிக் குற்றச்சாட்டுகளும் இவர் மீது இல்லாத நிலையில், இவரைக் கைது செய்திருப்பதிலேயே இது பழிவாங்கும் நடவடிக்கை என்று தெரிகிறது. 1998ல் அறநிலையத்துறையில் பணிக்கு சேர்ந்ததுமுதல் இப்போதுவரையிலும் துறை ரீதியாகக்கூட இவர்மீது நடவடிக்கை இருந்ததில்லை. கோயில் திருப்பணிகளின் போது துறைக்குச் சொந்தமான 500 கிலோ தங்கத்தை மீட்டுக்கொடுத்த பெருமையும் இவரைத் தான் சேரும்'' என்று கைது நடவடிக்கைக்கு எதிராகப் பேசி வருகிறார்கள் அறநிலையத்துறை அதிகாரிகள்.