Published:Updated:

``நூறு ரூபாய்க்கு மிதக்க வைக்கும் போதை!’’ என்ன செய்கிறது தமிழகக் காவல்துறை?!

``நூறு ரூபாய்க்கு மிதக்க வைக்கும் போதை!’’  என்ன செய்கிறது தமிழகக் காவல்துறை?!
``நூறு ரூபாய்க்கு மிதக்க வைக்கும் போதை!’’ என்ன செய்கிறது தமிழகக் காவல்துறை?!

அஞ்சு கிலோ ஆறு கிலோன்னு ஹோல்சேல்ல கஞ்சா வாங்கினு வந்து அதைச் சின்னச் சின்னதா கவர்ல போட்டு வெச்சுக்குக்குவாங்க.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மிழகத்தில் டாஸ்மாக் கடைகளால் மதுப்பழக்கம் தலைவிரித்தாடுவது ஒரு பக்கமென்றால் இன்னொருபுறம் போதை மருந்துகளைப் பயன்படுத்தும் பழக்கமும் வேகமாகப் பரவி வருகிறது. போதை மருந்தைப் பயன்படுத்துவதில் பள்ளி மாணவர்களும், பதினெட்டு வயதுக்குட்பட்ட இளைஞர்களும் அதிகம் இருக்கிறார்கள் என்பதுதான் இதில் அபாயகரமான உண்மை.

மதுப்பழக்கத்தைவிட போதைப் பொருள்களை நோக்கிச் சிறுவர்களும், இளைஞர்களும் செல்வதற்குக் காரணம் என்ன என்பதை அறிந்து கொள்வதற்காக, சிறுவர்கள் சிலரிடம் பேசினேன். பெயரையும், புகைப்படங்களையும் வெளியிட வேண்டாம் என்கிற நிபந்தனையுடன் பேசினார்கள். 

``ஒயின்ஷாப்ல போயி சரக்கு வாங்குனா எல்லோருக்கும் தெரிஞ்சிடும் ப்ரோ. போதை மருந்துனா யாருக்கும் தெரியாம போயி வாங்கிடலாம், செலவும் கம்மி" என்றார் ஒருவர். ``முன்னாடி எல்லாம், நம்ம பீச்சுகிட்ட பொருட்காட்சி இருக்குதுல, அங்கே போவோம். அங்க இல்லைன்னா சேத்பட்டு ரயில்வே ஸ்டேஷன், அங்கேயும் கிடைக்கலன்னா டி.பி. சத்திரம்னு இப்படி அலையணும். இப்போ முன்ன மாதிரியில்ல. எல்லா ஏரியாவிலயும் போதை மருந்து விற்க ஆரம்பிச்சுட்டாங்க. அஞ்சு கிலோ, ஆறு கிலோன்னு மொத்தமா கஞ்சா வாங்கிட்டு வந்து, அதை சின்னச் சின்ன கவர்கள்ல போட்டு வெச்சுக்குக்குவாங்க. ஒரு கவரு நூறு ரூபாயிலிருந்து நூத்தம்து ரூபா வரைக்கும் விற்கப்படும். மூணு சிங்கிள்ஸ் அடிக்கலாம். இரண்டு மணி நேரம் அப்படியே வானத்துல மிதக்கற மாதிரி இருக்கும்" என்று கண்களை மூடியபடி சொன்ன சிறுவனுக்கு வயது பதினாறு இருக்கும். 

ஒய்ட்னர், பெட்ரோல், ஃபெவிகால் ஆகியவற்றைக் கைக்குட்டையில் நனைத்து மோந்து பார்த்து, போதை அனுபவிப்பது வழக்கொழிந்து வருகிறது. சிகரெட்டில் கஞ்சாவை வைத்துப் பயன்படுத்தும் பழக்கம் சாதாரணமாகிவிட்டது. சிகரெட்டினுள் இருக்கும் புகையிலையை எடுத்துவிட்டு, அதனுள் கஞ்சா இலைகளைப் புகுத்துவதை ஒரு கலை போன்று செய்து மற்றவர்களுக்குக் கொடுக்கிறார். பள்ளியில் கண்களை மூடி பாடத்தை மனப்பாடம் செய்கிற வயதில், கண்களை மூடி கஞ்சா சிகரெட்டை இழுத்து, அதன் புகையை வெளியே விடுகிறார்கள் இந்தச் சிறுவர்கள். மாநகராட்சி பள்ளிகள் முதற்கொண்டு கான்வென்ட் பள்ளி மாணவர்கள்வரை இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பது வேதனையளிக்கக்கூடியது. இவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மொத்த வியாபாரிகளிடும் கஞ்சாவை வாங்கி, அதனை விற்கவும் செய்கிறார்கள். இந்தச் செயல் சட்டவிரோதம் என்பதுகூட அவர்களுக்குத் தெரியுமா எனக் கூறமுடியாது. 

காஞ்சிபுரத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி அன்று ஐந்து மாணவர்கள் பள்ளிக்கு அருகே கஞ்சா விற்றுக் கொண்டிருந்ததாகக் கூறி, பெற்றோர்களால் பிடிக்கப்பட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். போதை மருந்து பழக்கம் மற்றும் விற்பனையில் மற்றவர்களைக் காட்டிலும் மாணவர்கள் அடிமையாவது என்பது இந்த நாட்டின் வருங்காலத்தையே கேள்விக்குரியதாக்கிவிடும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எத்தனையோ பெற்றோர் இன்று, தங்கள் பிள்ளைகள் போதை மருந்துப் பழக்கத்துக்குத் தடம் மாறிச் சென்றுவிட்டதாகத் தெரிவித்து, குமுறி அழுகிறார்கள். தங்களின் பிள்ளைகளை அத்தகையப்  பழக்கத்திலிருந்து மீட்டெடுக்க முடியாமல் பெற்றோர் தவிக்கிறார்கள். 

இதுகுறித்து போதை மீட்டெடுப்பு மருத்துவர் அனிதாவிடம் பேசினேன். ``வெறும் கஞ்சா மட்டுமன்றி பல்வேறு விதமான போதை மருந்துகளை மாணவர்கள் பயன்படுத்தும் நிலை தற்போது உள்ளது. போதைப் பொருள்களை மாணவர்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்று இந்தப் பிரச்னையைச் சுருக்கிப் பார்க்கவும் கூடாது. ஆண், பெண் என்ற பேதமின்றியும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை பல்வேறு வயதினரும் போதையின் பிடியில் சிக்குண்டு இருப்பதைப் பார்க்கிறோம். அத்தகையோர் அனுபவிக்கக்கூடிய போதைப் பொருள்களை இரண்டுவகையாகப் பிரிக்கலாம். 

ஒன்று சட்டரீதியான டிரக்ஸ். அதாவது, மெடிகல் ஷாப்களில் விற்கக்கூடிய போதை மாத்திரைகள். இங்கு விற்கக்கூடிய இதுபோன்ற  மருந்துகளைச் சராசரியாகப் பயன்படுத்தக்கூடிய அளவைத்தாண்டி பயன்படுத்தக் கூடாது. உதாரணத்துக்கு தூக்க மாத்திரை, இருமல் மருந்து, வலி நிவாரணத்திற்கான மாத்திரைகள் போன்றவற்றை மெடிக்கல்களில் வாங்கி, அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதால், ஏற்படக்கூடிய ஒருவித மயக்கத்தை போதையாக அனுபவிப்பது. 

இரண்டாவது, சட்டவிரோதமாக விற்கப்படும் போதைப் பொருள்கள் மற்றும் மாத்திரைகள். உதாரணமாக கஞ்சா, ஓபியம், பிரவுன் சுகர், கோகைன் போன்ற வஸ்துகள் மற்றும் சில போதை மாத்திரை வகைகள். இவற்றில், எதைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்பது, அவற்றைப் பயன்படுத்தக் கூடியவர்களின் பொருளாதார வசதியைப் பொறுத்து அமைகின்றன. தவிர, ஊசி மூலம் செலுத்தக்கூடிய மருந்துகள், சிகரெட் வழியாக மோந்து பார்த்து போதை அனுபவிப்பது என வெவ்வேறு வடிவங்களில் இந்தப் போதைப் பொருள்களைப் பயன்படுத்துகிறார்கள்.

இத்தகைய கொடூர போதைப் பழக்கத்துக்குப் பள்ளி மாணவர்கள் வீழ்ந்திருப்பதுதான் மிகுந்த கவலை அளிக்கக்கூடியது. அவர்களை அந்தப் பழக்கத்துக்கு ஆளாகாமல் தடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு பள்ளிகளுக்கும் இருக்கிறது. அதற்கு விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகளில் தொடர்ந்து நடத்த வேண்டும். அதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதால் தங்கள் பள்ளிக்குக் கெட்டபெயர் வந்துவிடுமோ எனப் பள்ளி நிர்வாகங்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. வெளிநாடுகளில் உள்ள பள்ளிகளில் போதைப் பொருள்கள் மற்றும் அவற்றின் அபாயம் பற்றிய விழிப்புஉணர்வு பிரசாரத்தை மாணவர்களுக்குத் தொடர்ந்து மேற்கொள்கிறார்கள். நாமும் அதுபோன்ற பிரசாரங்களை செய்யலாம். 

ஒருவேளை ஏதாவதொரு மாணவன், போதைப் பழக்கத்துக்கு ஆளாகியிருப்பது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட மாணவனின் பெற்றோரை பள்ளி நிர்வாகம், உடனடியாக அழைத்துப் பேசி அவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க ஆவன செய்யலாம். மாணவர்கள் பயன்படுத்தும் போதைப்பொருள்கள், அவற்றை எப்படிப் பெறுகிறார்கள் என்பன போன்ற விவரங்களைக் கண்டறிந்து, அதைத் தடுக்க பெற்றோருடன் இணைந்து பள்ளி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றைச் செய்யத் தவறும்பட்சத்தில் மாணவர்கள், தவறான பாதைக்குச் செல்வதைத் தடுப்பது சிரமமாகி விடும்.போதைப் பழக்கத்தினால் சிந்திக்கும் திறன் பாதிக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தப் பழக்கம் மேலோங்கும்போது, போதை மருந்துகளை வாங்க, செயின் பறிப்பு, திருட்டு போன்ற செயல்களில் எந்தவித குற்ற உணர்வுமின்றி ஈடுபடத் தொடங்குவார்கள். ஒருகட்டத்தில் அத்தகைய பழக்கத்துக்கு ஆளானவர்கள், வாழ்க்கையை வெறுத்து தற்கொலையும் செய்யவும் துணிவதைப் பார்க்கிறோம். அந்த அளவுக்கு எல்லாம் சென்றுவிடாமல், நம் குழந்தைகளை பெற்றோரும், பள்ளி நிர்வாகமும் தீவிரமாகக் கண்காணித்து, அத்தகைய பழக்கங்களுக்கு ஆட்படாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கிறது" என்றார்.

மேலும் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தல் போன்ற சட்டவிரோதச் செயல்கள் நடக்காமல் தடுக்க வேண்டிய மிகமுக்கியப் பொறுப்பு, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய இடத்தில் இருக்கும் காவல்துறையினருக்கும் உண்டு. இதுகுறித்து காவல்துறை தரப்பில் என்ன சொல்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள சென்னை மாநகரபோலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனைத் தொடர்பு கொண்டு பேசினேன். 

அவர், ``ஆகஸ்ட் 1-ம் தேதியுடன் நிறைவடைந்த, கடந்த ஓராண்டில் மட்டும் போதைப் பொருள்கள் சம்பந்தமாக சென்னையில் 2,868 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது 2,516 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களிடமிருந்து 21,640 கிலோ போதைப் பொருள்களும், சுமார் 17 லட்சத்து 15 ஆயிரம் போதைப்பொருள் பொட்டலங்களும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகையிலைப் பொட்டலங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பொருள்களின் சந்தை மதிப்பு, மூன்று கோடியே 16 லட்சத்து 39 ஆயிரம் ரூபாயாகும். மேலும் ரொக்கப்பணமாக சுமார் 19 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. கைதானவர்களில் 35 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை பெருநகரப் பகுதிகளில் போதைப் பொருள்களின் தீமைகள் பற்றி விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் பணியில், காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை முழுவதும் போதைப்பொருள் பயன்பாட்டை விரைவில் முழுமையாக ஒழிப்போம்" என்றார்.

மாணவப் பருவத்தில், அதிலும் பதின்ம மற்றும் இளம் பருவத்தில் எதையும் செய்து பார்க்கத் தூண்டும் மனோபாவம் ஏற்படுவது இயல்புதான். அந்தப் பருவத்தில் இருக்கும் சிறுவர்-சிறுமிகளிடம் தோழமை உணர்வுடன் உரையாடி, இளம் வயதினர் பாதை தவறாமல் நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மட்டுமன்றி, இந்தச் சமுதாயத்தில் அவர்களைச் சுற்றி இருப்போருக்கும் உண்டு. இத்தகைய சூழ்நிலையை அனைவரும் உணர்வது மட்டுமே இதுபோன்ற கொடிய பிரச்னைகளுக்கான நிரந்தரத் தீர்வை எட்டும் முதல்படி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு