சிலைகள் மாயமானது தொடர்பாகப் போராட்டங்கள் நடத்தியவருக்கு கொலை மிரட்டல்!

கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிலைகள் மாயமானது தொடர்பாகப் பல கட்ட போராட்டங்களை  நடத்தியும் அது தொடர்பான மனுக்களை அரசு  உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியும் வந்த விஷ்வ இந்து பரிஷத் மாவட்டத் தலைவருக்குத்   தபால் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர் திருநீலக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

துரை வேங்கடம்

 

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் புலவர் துரை.திருவேங்கடம். இவர் தஞ்சாவூர் மாவட்ட விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். இவர் பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிலைகள் மாயமானது தொடர்பாக பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தார். மேலும், அது தொடர்பான மனுக்களை அரசு உயர் அதிகாரிகளுக்கும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கும் அனுப்பி வந்துள்ளார்.

கொலை மிரட்டல்

இந்நிலையில்  திருவேங்கடத்தின் முகவரிக்கு தபாலில் ஒரு கடிதம் வந்தது, அதைப் பிரித்து பார்த்த அவர் பெரும் அதிர்ச்சியடைந்தார். அதில் அரிவாள் படம் வரைந்து, உலகிலேயே நம்பர் 1 முட்டாளே, நீ இன்னும் சில நாள்களில் படுபயங்கரமாகப் படுகொலை செய்யப்படுவாய். படுகொலைக்கு பயந்து வீட்டிலேயே இருந்தால் வெடி குண்டு வீசி உன் குடும்பத்தையே ஒழித்துவிடுவோம் என மிரட்டலாக எழுதியிருந்தது. இந்தக் கடிதத்தைப் பார்த்ததும் திருவேங்கடம் மற்றும் அவர் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்ததோடு அது குறித்து திருநீலக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் விசாரித்து மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர். சிலைகள் மாயமானது தொடர்பாகப் போராட்டங்கள் நடத்தி வந்தவருக்கு கொலை மிரட்டல் வந்ததால் அப்பகுதியே பெரும் பரபரப்படைந்துள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!