Published:Updated:

’கவிதாவும் உடந்தை!’ vs ’கையெழுத்திட்டது மட்டுமே கவிதா!’ - சிலை கடத்தல் சிக்கல்

நிலவரம் எதுவாக இருந்தாலும், உயர்ந்த பொறுப்பில் இருப்பவரைச் சுற்றி இவ்வளவு சர்ச்சைகள்... அவருக்குத் தெரியாமலே இவ்வளவு விவகாரம் நடந்திருந்தாலும் அது குற்றத்தின் ஒரு பகுதிதான். அதே சமயம் அவரை பலிகடாவாக்கும் முயற்சிகள் நடப்பின், அதுவும் கண்டனத்துக்குரியது.

’கவிதாவும் உடந்தை!’ vs ’கையெழுத்திட்டது மட்டுமே கவிதா!’ - சிலை கடத்தல் சிக்கல்
’கவிதாவும் உடந்தை!’ vs ’கையெழுத்திட்டது மட்டுமே கவிதா!’ - சிலை கடத்தல் சிக்கல்

ந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கவிதா குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகின்றன. `முதல் தகவல் அறிக்கையில் கவிதா பெயர் இல்லை. இந்தக் கைதின் மூலம் பொன்.மாணிக்கவேலுக்குத்தான் பாதிப்பு வரப் போகிறது' என ஒரு பிரிவினரும், `ஆதாரங்கள் இல்லாமல் ஓர் உயர் அதிகாரியை அவர் கைது செய்ய மாட்டார்' எனவும் மற்றொரு சாராரும் பேசி வருகின்றனர்.

கவிதா விவகாரத்தில் என்ன நடக்கிறது? 

திருநெல்வேலியைப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர் கவிதா. சட்டப்படிப்பு முடித்து சென்னையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். பாரம்பர்யமான தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜெயலலிதா முதன் முறையாக முதல்வரானபோது அவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தன. அதில் கொடைக்கானலில் உள்ள பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு மிக முக்கியமானது. 1991 -96 ஆட்சிக்காலத்தில் இந்த ஹோட்டலுக்கு விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கியதாக அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, உள்ளாட்சித்துறை அமைச்சர் செல்வகணபதி ஆகியோர் மீது புகார் எழுந்தது. தி.மு.க தரப்பில் தொடரப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு 2000-ல் வழங்கப்பட்டது. அதில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஓராண்டு சிறைத்தண்டனையும் அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்ட வழக்கில் சீனியர் வழக்கறிஞரிடம் ஜூனியராகப் பணியாற்றியவர் கவிதா. முக்கியத் தரவுகளை எடுத்துக்கொடுப்பது என இந்த வழக்கில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார் என்கின்றனர் அவரது ஆதரவு அதிகாரிகள். 

தி.மு.க, அ.தி.மு.க பின்னணி! 

இதுகுறித்து நம்மிடம் பேசிய அதிகாரி ஒருவர், ``கவிதாவின் தந்தை, முன்னாள் முதல்வர் அண்ணாதுரைக்கு இந்தி மொழிபெயர்ப்பாளராகவும் உதவியாளராகவும் பணியாற்றியவர். அதனால் தி.மு.கவில் கவிதாவின் குடும்பம் செல்வாக்கோடு இருந்து வந்தது. வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில், சரவணன் என்ற வழக்கறிஞரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார் கவிதா. சசிகலாவின் உறவினர்தான் சரவணன். அதாவது, சசிகலாவின் அண்ணி இளவரசியின் சம்பந்தியான திருச்சி கலியப்பெருமாள், சரவணனுக்கு சித்தப்பா முறை ஆவார். அ.தி.மு.கவில் ஏற்பட்டுள்ள நெருக்கத்தால் போயஸ் கார்டனில் சர்வசாதாரணமாகச் சென்றுவரக்கூடியவராக இருந்தார் சரவணன். இந்த நெருக்கம்தான், `சசிகலாவின் பினாமி’ எனக் கவிதா குறித்து பரவும் தகவல்களுக்கு இதுவே அடிப்படை. கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அறநிலையத்துறை அமைச்சராகப் பெரிய கருப்பன் இருந்தபோது, திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பணியாற்றினார் கவிதா. அறநிலையத்துறை சொத்துகள் தொடர்பான விஷயத்தில் உள்ளூர் தி.மு.க-வினருடன் மோதவேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, கவிதாவுக்குப் பணிமாறுதல் கொடுக்கப்பட்டது. முதல்வர் கருணாநிதியே தலையிட்டு அந்த உத்தரவை ரத்து செய்ததாகவும் தகவல் வெளியானது. 

அறநிலையத்துறை ஆணையராக தனபால் இருந்தபோது, திருப்பணிகள் ஆணையராக நியமிக்கப்பட்டார் கவிதா. தனபால் மீது பொன்.மாணிக்கவேலின் கரம் இறுகியிருக்கிறது. அவரது பணிக்காலத்தில்தான் பல்வேறு முறைகேடுகள் நடந்தன. திருப்பணிகள் துறையில் இருந்ததால், கவிதா மீதும் சந்தேக வளையம் திரும்பியுள்ளது. தனபால் இணை ஆணையராக இருந்தபோது, அவர் சார்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே கவிதாவுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது என்கிறார்கள். ஆணையராக தனபால் பதவி உயர்வு பெற்றபோது, திருப்பணி இணை ஆணையராகப் பதவிக்கு வந்தார் கவிதா. அதன் பிறகு திருப்பணி கூடுதல் ஆணையராகப் பதவி உயர்வு பெற்றார். சென்னையில் உள்ள எல்லா அதிகாரிகளுக்கும் பணிமாறுதல் கிடைக்கும். ஆனால், கவிதாவும் தனபாலும் சென்னையிலேயே பதவியில் நீடித்து வந்தனர். தனபால் விவகாரத்தில் ஆதாரங்களைச் சேகரித்தபோதுதான், கவிதாவின் தொடர்புகளும் தெரிய வந்ததாகச் சொல்கின்றனர். இதனால் பொன்.மாணிக்கவேல் கவிதாவுக்குச் சிலைக்கடத்தல் விவகாரங்களில் வலுவான தொடர்பு இருக்கும் என நம்பினார்!’’ என்றார்.   

எல்லாம் கமிஷனர்தான்! 

இந்த விவகாரத்தைத் தொடக்கம் முதலே கவனித்து வரும் கோயில் நிர்வாகிகள் சிலர், ``பழநியில் இருக்கும் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் புதிதாகச் செய்யப்பட்ட முருகன் உற்சவர் சிலை முறைகேடு வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜரான இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபால் தற்போது வீட்டுச் சிறையில் இருக்கிறார். காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் உற்சவர் சிலை மோசடி மற்றும் பழனி தண்டாயுதபாணி சிலை மோசடி ஆகிய வழக்குகளில் முத்தையா ஸ்தபதி வீட்டுக் காவலில் இருக்கிறார். கவிதாவை கைது செய்யத் தகுந்த ஆதாரம் வேண்டும் என்பதற்காக, முத்தையா ஸ்தபதி உள்ளிட்டவர்களுக்குச் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினர் வலை விரித்தார்கள். முத்தையா ஸ்தபதி கொடுத்த வாக்குமூலத்தை வைத்தே கவிதாவிடம் விசாரணையைத் தொடங்க நினைத்தார்கள். `என்னைக் கைது செய்தால், விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் சுட்டிக் காட்டுவேன்’ எனக் கவிதா தரப்பினர் மிரட்டியதாக அதிகாரிகள் சொல்கின்றனர். இதையடுத்து, பொன்.மாணிக்கவேலிடமும் பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், அவர் பின்வாங்கவில்லை. இதற்கிடையே கடந்த 7 மாதங்களாக நடந்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் விசாரணைகளுக்குக் கவிதா ஒத்துழைக்கவில்லை. ஏகாம்பர நாதர் கோயில் உற்சவர் சிலை விவகாரம் தொடர்பாக, அர்ச்சகர் ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் கடந்த 31-ம் தேதி கவிதாவைக் கைது செய்துள்ளனர். ஓர் அர்ச்சகர் கூறும் வாக்குமூலத்தை வைத்து ஆதாரமில்லாமல் கூடுதல் ஆணையர் ஒருவரைக் கைது செய்ய முடியுமா என்றெல்லாம் கேள்வி எழுப்புகின்றனர். ‘எல்லாமே கமிஷனர் சொன்னார்... நான் வெறும் கையெழுத்து மட்டுமே போட்டேன்’ எனக் கும்பகோணம் நீதிமன்றத்தில் கவிதா தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில்தான், சி.பி.ஐ விசாரணை என்ற ஆயுதத்தைத் தமிழக அரசு எடுத்தது!" என்கின்றனர் விரிவாக. 

`அந்த' 9 பேர்! 

அதே சமயம் இதுகுறித்து இன்னொரு கோணமும் விவரிக்கிறார் அறநிலையத்துறையின் உயர் அதிகாரி ஒருவர். ``கவிதா மீது பொய்யான குற்றச்சாட்டைச் சொல்லி வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். எங்கள் துறையில் இருப்பவர்கள் யாருமே இந்தக் குற்றச்சாட்டை நம்ப மாட்டார்கள். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சோமாஸ்கந்தர் சிலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், தாங்கள் தப்பிப்பதற்காக கவிதாவின் பெயரைக் கூறியுள்ளனர். இதை அடிப்படையாக வைத்து அவரைக் கைது செய்துவிட்டனர். முதல் தகவல் அறிக்கையில் கவிதாவின் பெயரே கிடையாது. முதல் தகவல் அறிக்கையில் உள்ள 9 பேர்களில் ஒருவரைக்கூட கைது செய்யாமல், அதில் உள்ள ஒருசிலர் சொன்னதாக, வெறுமனே சொல்லப்பட்ட தகவலின் அடிப்படையில் கவிதாவைக் கைது செய்திருக்கிறார்கள். ஆணையர் எழுதி எழுதி வைத்துள்ள உத்தரவில், கையொப்பம் மட்டும்தான் கவிதா போடுவார். அதற்காகச் செய்யாத தவறுக்கு எப்படிப் பொறுப்பாவார். இதுவரை காணாமல் போன சிலைகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை மறைப்பதற்காக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் போடும் நாடகம் இது. பழனி, காஞ்சிபுரம் என முறைகேடு நடந்திருப்பதாகப் புகார் எழுந்துள்ள கோயில் பக்தர்கள் தரப்பிலிருந்து, ‘நான் தங்கம் கொடுத்திருக்கிறேன். ரசீது கொடுக்கவில்லை. முறைகேடு நடந்துள்ளது.’ என யாருமே இதுவரை காவல்நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. தங்கம் வசூல் செய்வதில் முறைகேடு நடந்திருந்தால் விஜிலென்ஸில்தானே விசாரிப்பார்கள். சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் எப்படி விசாரணை செய்ய முடியும். அவர் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் கிடையாது” என்றார் நிதானமாக.

நிலவரம் எதுவாக இருந்தாலும், உயர்ந்த பொறுப்பில் இருப்பவரைச் சுற்றி இவ்வளவு சர்ச்சைகள்... அவருக்குத் தெரியாமலே இவ்வளவு விவகாரம் நடந்திருந்தாலும் அது குற்றத்தின் ஒரு பகுதிதான். அதே சமயம் அவரை பலிகடாவாக்கும் முயற்சிகள் நடப்பின், அதுவும் கண்டனத்துக்குரியது. நேர்மையான விசாரணை மூலம் நியாயம் எது என்பதை சர்ச்சைகளுக்கு இடமில்லாமல் வெளிக்கொணர வேண்டும். 

நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் தாக்கல் செய்யப் போகும் ஆவணங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கலாம்!