வெளியிடப்பட்ட நேரம்: 19:46 (06/08/2018)

கடைசி தொடர்பு:20:39 (06/08/2018)

``கரடி பொம்மையை வைத்து அத்தையைக் கொன்ற சிறுவன்!'' - அவனை கொலைகாரனாக்கியது எது?

காதல்தோல்வி வந்தால் குடித்துவிட்டு காதலியை அவமானப்படுத்த வேண்டுமெனத் திரைப்பாடல்கள் அவனுக்கு அறிவுறுத்துகின்றன. `இந்தப் பொண்ணுங்களே இப்படிதான் புரிஞ்சுப்போச்சுடா' என்று தன் ஆதர்ச நாயகனைப்போல அவனால் பாட முடியவில்லை. அதே சமயம் அவள் மீது அவனுக்கு இருப்பும் அதிருப்தியை வெறுப்பாக மாற்ற இதுபோன்ற பாடல்கள் உதவுகின்றன.

``கரடி பொம்மையை வைத்து அத்தையைக் கொன்ற சிறுவன்!'' - அவனை கொலைகாரனாக்கியது எது?

புதியதாய் வெளியான ஒரு பாடலைப் பற்றி புளகாங்கிதம் அடைவதுபோல, சமீபத்தில் ரிலீஸான திரைப்படத்தைப் பற்றி ஒருவருக்கொருவர் கருத்து மோதல் செய்வதுபோல, விளையாட்டில் நம் நாடு அடைந்த வெற்றிச் செய்தியைக் களிப்புடன் பகிர்ந்து கொள்வதுபோல, அரசியல்வாதிகளின் அறிக்கையைப் பகடி செய்வதுபோல, ஒரு படத்தின் டீசர் வெளியானதும் அதுகுறித்து விவாதிப்பது போல அல்லாமல் சமூகத்தின் பல விஷயங்களை நாம் மௌனமாகக் கடந்து போகிறோம். அதில், முக்கியமானது 'க்ரைம்' தொடர்பான செய்திகள். நம் ஊரில் நடக்கும் கொலையைப் பற்றி நமக்குள் உரையாடுவதில்லை. ஒரு கொலைச் செய்தியை நமக்குத் தொடர்பில்லாத ஒன்றாகக் கருதிவிடுகிறோம். அப்படியே, ஏதாவது க்ரைம் செய்தி பேசுபொருள் ஆனாலும், அது சிசிடிவியில் பதிவாகி நம் கண்களால் பார்த்துப் பதற்றமடைந்த செய்தியாகவே இருக்கிறது. ஒரு சம்பவத்தையொட்டி உரையாடல் நடப்பதற்குக் குறைந்தபட்சம் நமக்கு ஒரு காணொளி தேவைப்படுகிறது. இந்தக் குற்ற சம்பவத்துக்குக் காணொளி இருக்கிறதா இல்லையா என்பதைப் பொறுத்தே அதன் முக்கியத்துவம் இருக்கிறது. வெகு சமீபத்தில் சென்னையில் ஒரு கொலைச் சம்பவம் நடந்திருக்கிறது. செய்திகளை வாசித்துவிட்டு எப்போதும்போல கடந்துபோக முடியாதபடி இருக்கிறது அந்தக் கொலைச் சம்பவம். அதற்கு முக்கியக் காரணம், இந்தக் கொலையை செய்திருப்பது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ஒரு சிறுவன். 

தூங்கிக்கொண்டிருந்த அத்தையின் முகத்தில் கரடி பொம்மையை வைத்து அழுத்தி மூச்சுத் திணற அவரைக் கொன்றிருக்கிறான். அது தற்கொலை என மற்றவர் நம்பும்விதமாகச் சமையல் அறையிலிருந்து கத்தியை எடுத்து வந்து அத்தையின் மணிக்கட்டை அறுத்து இருக்கிறான். அரைமணி நேரத்தில் இதை அந்தச் சிறுவன் செய்து முடித்திருக்கிறான். ஒருவேளை இது 'சிசிடிவி'யில் பதிவாகி வாட்ஸப் வழியாகவோ அல்லது செய்தித் தொலைக்காட்சிகளிலோ நாம் காண நேர்ந்திருந்தால் இன்றைக்கு இதுதான் ட்ரெண்டிங். அப்படி ஏதும் இல்லை. ஆகவே, நாம் இதைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டோம். 

சிறுவன் கத்தி

மாமன் மகளுடனான காதல், ஒருதலைக் காதலாகவே நீடித்துவிடும் என்ற விரக்தியில், தன்காதலுக்கு இடையூறாக இருந்த காதலியின் அம்மாவை, அதாவது தன்னுடைய அத்தையையே கொலை செய்திருக்கும் அந்தச் சிறுவன் தற்போது சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறான். 

ஒவ்வொரு குற்றச் சம்பவங்களையும் நாம் வாசித்த அல்லது பார்த்த அடுத்த நொடியிலேயே கடந்து போகமால் அந்தக் குற்றத்தின் பின்னணியைப் பற்றி சிந்திக்கிறபோதும், அதுகுறித்து உரையாடுகிறபோதும்தான் இதில் சமூகத்தின் பங்கு எந்த அளவுக்கு புரையோடியிருக்கிறது என்பதை நாம் கவனிக்க முடியும். 

இதைப் பற்றி மேற்கொண்டு நாம் உரையாடுவதற்கு இந்தச் சிறுவன் கொடுத்த வாக்குமூலத்தில் ஒரேயொரு விஷயத்தை எடுத்துக் கொள்வோம். "என் மாமன் மகள் பெரியவள் ஆனதும், அவளுடன் பேசக் கூடாது, பழகக் கூடாது என்று என் அத்தை தமிழ்ச்செல்வி என்னைக் கண்டித்தார். இதனால் அவளைப் பார்க்க முடியாமல், பேச முடியாமல் தவித்தேன். என் அத்தை இருக்கும் வரையில் என் காதலுக்கு எதிர்ப்பு வந்துகொண்டே இருக்கும் என்பதால் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன் " எனச் சொல்கிறான். 

பெண் பிள்ளைகளைப் பெற்ற தாய் தந்தையின் பதற்றம் புரிந்துகொள்ளக்கூடியதுதான். அந்தப் பதற்றத்தில் நம் பிள்ளைகளை ராணுவ பாதுகாப்புடன் வளர்க்க வேண்டுமெனக் கருதுகிறோம். அவர்களை யார் கைப்பற்ற நினைத்தாலும் மூர்க்கமாக அவர்களை அணுகுகிறோம். அதன் விளைவு சில சமயத்தில் பெற்றோர்களுக்கும், அந்தப் பெண் பிள்ளைகளுக்கும் எதிராகவே போகக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன என்பதைத்தான் ஆண் இனத்தின் கொடூர குணங்கள் எடுத்துச் சொல்கின்றன. 

அதனால், பெற்றோர்கள்தான் புரிந்துகொண்டு நடக்க வேண்டும் என அர்த்தம் இல்லை. இது இருதரப்பிலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் இதைப்பற்றிப் பேச வேண்டியிருக்கிறது.

குற்றம்

பதின்ம வயதில், இளமைப் பருவத்தில் காதல் ஒன்றே இன்பம் அளிக்கக்கூடிய ஒரு விஷயமாக இருப்பதைத் திரைப்படங்கள் தலைமுறை தலைமுறையாக இளைஞர்களுக்கு உணர்த்துகிறது. அது கைகூடாத பட்சத்தில், தான் தனிமைப்பட்டு போவதாக அவன் எண்ணுகிறான். 'அடிடா அவள, வெட்றா அவள' போன்ற பாடல்கள் அவனுக்குள் இருக்கும் முரட்டுத்தனத்தை நியாயப்படுத்துகின்றன. காதல் தோல்வி வந்தால் குடித்துவிட்டு காதலியை அவமானப்படுத்த வேண்டுமெனத் திரைப்பாடல்கள் அவனுக்கு அறிவுறுத்துகின்றன. 'இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சுப்போச்சுடா' என்று தன் ஆதர்ச நாயகனைப்போல அவனால் பாட முடியவில்லை. அதே சமயம் அவள் மீது அவனுக்கு இருக்கும் அதிருப்தியை வெறுப்பாக மாற்ற இதுபோன்ற பாடல்கள் உதவுகின்றன. விளைவு, காதலியின் முகத்தில் ஆசீட் வீசுதல், நடுரோட்டில் அரிவாளால் வெட்டுதல் என மூர்க்கம் வெளிப்படுகிறது. 

இத்தகைய கொடூரச் செயல்களைப் புரிவதற்கு மது இவர்களுக்குத் துணைபுரிந்து வருவதையும் நாம் கவனிக்க வேண்டும். குடிப்பழக்கம் என்பது தவிர்க்க முடியாத ஒரு சமூகச் செயல்பாடாக நம் ஊரில் கட்டமைக்கப்பட்டுவிட்டது. திரைப்படங்களும் போதைப்பழக்கமும்தான் இன்றைய இளைஞர்களைச் சீரழிக்கிறதா என்றால் 'ஆம்' என்று நூறு சதவிகிதம்  சொல்ல முடியாது. குடும்பங்களுக்கு இதில் பெரிய பங்கு இருக்கிறது. எத்தனை பெற்றோர்கள் இன்று தங்கள் பதின்ம வயது பிள்ளைகளிடம் நட்புத் தோரணையுடன் உரையாடுகிறார்கள்? பெண்ணுக்கும் சுய விருப்பங்கள் இருக்கும் என்பதை அவள் குடும்பமே ஏற்றுக்கொள்ள மறுக்கிறபோது வெளியிலிருந்து அவளை அணுகுகிற ஆண் எப்படி அதைப் புரிந்துகொள்வான். இவைதான் காரணிகள் என்று உறுதியாக ஏதும் முன்வைக்கவில்லை. இது குறித்த ஓர் உரையாடல்தான் இங்கே நிகழ வேண்டுமென எண்ணுகிறேன். 

டெட்டி பியரால் அத்தையைக் கொன்றுவிட்டு, அவர் கை மணிக்கட்டு நரம்பை அறுத்து, அத்தையைக் காப்பாற்ற மருத்துவமனைக்கு உடன் சென்று, சுடுகாட்டில் அத்தையை தகனம் செய்யும்போது அழுது... என ஒரு கொலையைச் செய்து, அதற்குப் பிறகு மிகப்பெரிய நாடகத்தை பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் செய்து முடித்திருக்கிறான். இப்படியொரு நிதானமும் துணிச்சலும் அவனுக்கு எங்கிருந்து வந்தது. அவன் கையில் வைத்திருந்த கரடி பொம்மை என்பது வெறும் பொம்மை மட்டும்தானா, அது இந்தச் சமூகத்தின் அவலமான குறியீடு இல்லையா?


டிரெண்டிங் @ விகடன்