பள்ளியிலேயே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! டெல்லியில் நடந்த அவலம்

டெல்லியில் உள்ள அரசுப் பள்ளியில், இரண்டாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பள்ளி வளாகத்தின் உள்ளே  சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

6 வயது சிறுமி

தலைநகர் டெல்லியில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துவந்த வண்ணமாக உள்ளது. சிறுமியர், இளம் பெண்கள், வயது முதிர்ந்த பெண்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் எதிரான பாலியல் குற்றங்கள் தலைநகரில் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில், இரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். அதுவும், பள்ளி வளாகத்தின் உள்ளேயே அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளாள். அழுதபடி வீட்டுக்குச் சென்ற சிறுமி, `ரெட் டி- ஷர்ட் அணிந்தவர் என்னைப் பம்பு செட்டுக்கு அழைத்துச் சென்றார்' எனப் பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த அவலத்தைக் கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் போலீஸிடம் புகார் அளித்துள்ளனர்.

அந்தப் புகாரில், 'வடக்கு டெல்லி மாநகராட்சிக்கு உட்பட்ட கோல் சந்தைப் பகுதியில், அரசுப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இங்கு, 2-ம் வகுப்பு படிக்கும் தனது மகளை, அதேபள்ளியில் எலெக்ட்ரீஷியனாகப் பணிபுரியும் ராம் அஸ்ரே என்பவர், கடந்த 8-ம் தேதியன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பள்ளி முடிந்தபிறகு, பள்ளி வளாகத்தில் உள்ள பம்பு செடமிருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்று,  பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கிறார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதையடுத்து, ராம் அஸ்ரேவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமியிடம் ராம் அஸ்ரே தவறாக நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே, சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை அறிந்த மற்ற மாணவிகளின் பெற்றோர்கள், பள்ளியின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, `பள்ளியில் பெண்கள் நுழைந்தாலே, பதிவேட்டில் பதிவுசெய்வது அவசியமாக்கப்பட்டுள்ளது. கடுமையாக இந்தமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் எப்படி இந்தக் கொடுமை சிறுமிக்கு நேர்ந்துள்ளது' என பெற்றோர்கள் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!