வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (13/08/2018)

கடைசி தொடர்பு:00:00 (13/08/2018)

`இரிடியத்தை எடுக்க உதவினால் பெரிய தொகை தருகிறேன்' - மர்ம நபரை போலீஸில் ஒப்படைத்த கிராம மக்கள்!

பேராவூரணி அருகே ''தெய்வீக சக்தி உள்ள இரிடியம் என்ற விலை கண்டுபிடிக்க உதவினால் பணம் தருகிறேன்'' எனக் கூறியவரை பொதுமக்கள் போலீஸில் ஒப்படைத்தனர். 

 மோசடி நபர்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த அம்மணி சத்திரம் கோதண்டராமர் கோயில் பின்புறம் உள்ள பஞ்சாயத்துக்கு சொந்தமான குளக்கரையில் இன்று மர்ம நபர் ஒருவர் நடமாடிகொண்டிர்ந்தார். அப்போது அவர் அங்குள்ள புளியமரத்தின் கீழே குழி தோண்டி உள்ளார். இதனைக் கண்டு சந்தேகமடைந்த  அப்பகுதி மக்கள் அந்த மர்ம நபரிடம் விசாரித்துள்ளனர். அவர்களிடம் ''தெய்வீக சக்தி உள்ள இரிடியம் என்ற விலை உயர்ந்த பொருளை கடந்த ஆண்டு  இங்கு ஒரு அடி ஆழத்தில் புதைத்து வைத்தேன். அதன் சக்தி கூடி இருந்தால் 5 ஆடி ஆழத்திற்குக் கீழே சென்று இருக்கும் அதை எடுப்பதற்கு  நீங்கள் உதவி செய்தால் பெரிய தொகை பணம் தருவதாகவும்'' கூறியுள்ளார். 

மர்ம நபரின் வார்த்தைகளில் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் பேராவூரணி தாசில்தார் பாஸ்கரனுக்குத் தகவல் கொடுத்தனர். உடனே அவர் இது குறித்து விசாரிக்கக் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமாருக்கு உத்தரவிட்டார். விஏஓ கிராம மக்கள் முன்னிலையில் அந்த மர்ம  நபர் சொன்ன இடத்தில் தரையை தோண்டிப் பார்த்தனர். அப்போது சுமார் 5 அடி ஆழத்தில் அரை கிலோ எடையுள்ள பேட்டரி போன்ற தாமிரத்திலான ஒரு பொருள்  இருந்தது. அந்தப் பொருளைப் எடுத்து அதோடு அந்த மர்ம நபரையும் சேதுபாவாசத்திரம் காவல்துறையில் ஒப்படைத்தார். 

காவல்துறை விசாரணையில் அந்த நபர்  ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மடை அருகேயுள்ள கோவர்தனேந்தல் பகுதியைச் சேர்ந்த கருப்பையன் மகன் முனிராஜ் என்பது தெரியவந்தது. அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முன்னுக்குப் பின்னாக முரணாகப் பேசுகிறார். மேலும்  முனிராஜ் இரிடியம் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவரா அல்லது மந்திர தந்திர வேலையில் ஈடுபடக் கூடிய போலி ஆசாமியா என்கிற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றர். இது குறித்து பேசிய கிராம மக்கள் ``பெரிய மோசடியில் ஈடுபடவிருந்த நபரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தால் அங்கு இன்ஸ்பெக்டர் இல்லை. அவர் வந்த பிறகுதான் விசாரிக்க வேண்டும் என ஸ்டேஷனில் இருந்த மற்ற போலீஸார் கூறியதோடு அவன் யார் எந்த ஊர் என்பதை மட்டும் விசாரித்து உட்கார வைத்திருந்தனர். நாங்கள் ஏன் சார் உட்கார வைத்திருக்கிறீர்கள் எனக் கேட்டால் இன்ஸ்பெக்டர் வந்த பிறகுதான் விசாரிப்பார் என கூலாக சொல்கின்றனர். இது போன்ற மெத்தனத்தால் தான் குற்றங்களும், குற்றச் செயல்களும் அதிகரிக்கின்றன" என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க