Published:Updated:

தட்டிக் கேட்டதால் 'நிர்வாண' தண்டனை!

மூடி மறைக்கப்படும் அருந்ததியர் பெண் சோகம்

பிரீமியம் ஸ்டோரி
##~##

ருளர் இனப் பெண்கள் நால்வர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமையின் அதிர்வு அடங்குவதற்குள், தர்மபுரி மாவட்டத்தில் இன்னோர் அதிர்ச்சி.   

பாலக்கோடு தாலுக்கா, பஞ்சப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஜலதிம்மனூர் கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 30 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதை ஒட்டியே பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களின் வீடுகள் உள்ளன. அதில், முத்து என்பவர் வளர்த்த கோழி ஒன்று சமீபத்தில் காணாமல் போக, அருந்ததியர் மக்களுக்கும் எதிர்த் தரப்புக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டு, ஒரு கொடூரம் நடந்தேறி விட்டது.

பாதிக்கப்பட்ட கங்காதேவி பேசுவதற்குத் தயங்கினார். அவர் கணவர் கிருஷ்ணன், ''சம்பவம் நடந்த

தட்டிக் கேட்டதால் 'நிர்வாண' தண்டனை!

அன்னிக்கு நான் பக்கத்து ஊருக்குப் போயிருந்தேன். அப்போ சதீஷ்குமார், கானே கவுண்டர் ரெண்டு பேரும் போதையில் எங்க ஏரியாவுக்கு வந்து, அங்கே விளையாடிட்டு இருந்த மூணு ஸ்கூல் பசங்களை மிரட்டி இருக்காங்க. முத்துவோட கோழியை அந்தப் பசங்கதான் திருடியதா கெட்டவார்த்தையால் திட்டி இருக்காங்க. உடனே எங்கப்பா ஊசப்பன், 'ஊர்ஜிதம் செய்யாமப் பேசாதீங்க’னு சொல்லி இருக்கார். 75 வயசுப் பெரியவர்னுகூட பார்க்காம, அவரையும் கெட்ட வார்த்தையால் திட்டி இருக்காங்க. உடனே என் மனைவி கங்காதேவி, மனசு கேட்காம அவங்ககிட்ட வாக்குவாதம் செஞ்சிருக்கா.

உடனே சாதிப்பேரைச் சொல்லி அவளை அசிங்கமாத் திட்டிட்டு, கங்கா போட்டிருந்த நைட்டியை ஆளுக்கொரு பக்கம் கிழிச்சு வீசி இருக்கானுங்க. உள்ளாடையோட கூனிக் குறுகி நின்னவளை, தாறுமாறா அடிச்சிருக்கானுங்க. தடுக்க வந்த எங்க சித்தி கதிரியம்மாளையும் தாக்கி இருக்காங்க. அதுக்கப்புறம், உடம்புல போர்வையை மட்டும் சுத்திவிட்டு, அரை கிலோ மீட்டர் தூரத்துல இருக்குற பஞ்சப்பள்ளி போலீஸ் ஸ்டேஷனுக்கு கங்காவை கூட்டிட்டுப் போயிருக்காங்க. எனக்கும் தகவல் கிடைச்சு, பதறியடிச்சு ஸ்டேஷனுக்கு போனேன். ஆனா, ஸ்டேஷன்ல இருந்த போலீஸ்காரங்க எங்க பேச்சை காது கொடுத்துக் கேட்காம, ஆஸ்பத்திரிக்குப் போகச்சொல்லி விரட்டிட்டாங்க. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலையிட்ட பிறகுதான் வழக்குப் பதிவு செஞ்சு, அவங்க ரெண்டு பேரையும் கைது செஞ்சாங்க. என் மனைவிக்கு நேர்ந்த கொடுமையை நினைச்சா, இப்போகூட உடம்பு நடுங்குது சார்'' என்றார் படபடப்புடன்.

தட்டிக் கேட்டதால் 'நிர்வாண' தண்டனை!

கங்காதேவிக்கு நடந்த கொடுமை குறித்து பஞ்சப்பள்ளிபாளையம் அ.தி.மு.க கிளைச் செயலாளரான சண்முகம், ''கோழி காணாமப்போனது தொடர்பா பெண்களுக்கு இடையில்தான் வாய்த் தகராறு நடந்திருக்கு. இரு தரப்பிலுமே ஆண்கள் வேடிக்கைதான் பார்த்திருக்காங்க. யாரும் அவங்களை சாதியைச் சொல்லியும் திட்டலை; அந்தப் பொண்ணு துணியையும் கிழிக்கலை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தூண்டிவிட்டுத்தான் இப்படி ஒரு கதையை  ஜோடிச்சு இருக்காங்க. இப்போ தேவை இல்லாம ரெண்டு பேர் சிறைக்கு போயிட்டாங்க. இப்பவும், நாங்க சமாதானமாப் போகத்தான் விரும்பு​றோம்'' என்றார்.

தட்டிக் கேட்டதால் 'நிர்வாண' தண்டனை!

இளம் சிறுத்தைகள் பாசறை மாநில துணைச் செயலாளர் நந்தன், ''சிறுபான்மையினர் என்ற ஒரே காரணத்துக்காக, நடந்த அநியாயத்தை மூடி மறைக்கப் பார்த்தாங்க. நாங்க தலையிட்ட பிறகுதான், சம்பந்தப்பட்ட ரெண்டு பேரையும் கைது செஞ்சிருக்காங்க. இப்போ வந்து, 'இனி இதுமாதிரி சம்பவங்கள் எதுவும் நடக்காது. வழக்கை வாபஸ் வாங்கிடுங்க’னு கேட்கிறாங்க. அதிகாரிகளும் அவங்க பேச்சைத்தான் வழிமொழியுறாங்க. அவங்க வீட்டுப் பெண்களுக்கு இப்படி ஒரு  அசிங்கம் நடந்திருந்தா... சும்மா விடுவாங்களா? இந்த அக்கிரமத்துக்குக் காரணமா இருந்தவங்களுக்கு சட்டத்தின் மூலம் கடுமையான தண்​டனை வாங்கித் தருவோம். அதிகாரிகளோ, மத்தவங்களோ இதைத் தடுக்க நினைச்சா... அவங்களுக்கு எதிராக் கடும் போராட்டங்கள் நடத்தவும் சிறுத்தைகள் கட்சி தயங்காது'' என்றார் கோபாவேசமாக.

கடந்த 4-ம் தேதி பாலக்கோடு தாசில்தார் மணி, பென்னாகரம் டி.எஸ்.பி-யான ராஜேந்திரன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்திருக்கிறது. ஆனாலும் ஊருக்குள் அனல் குறையவே இல்லை. என்றுதான் தீருமோ இந்த சாதிக் கொடுமை?

- எஸ்.ராஜாசெல்லம்

படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு