Published:Updated:

புகழேந்திக்கு என்கவுன்ட்டர் மிரட்டல்?

அணுஉலைக் களேபரம்

பிரீமியம் ஸ்டோரி
##~##

ணு உலைப் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வரும் மருத்துவர் புகழேந்தி மீது ஒரு கொலை மிரட்டல் புகார் வரவே, கல்பாக்கம் ஏரியா பரபரத்துக்கிடக்கிறது. 

புகார் கொடுத்த புதுப்பட்டினம் பஞ்சாயத்துத் தலைவர் கலியபெருமாளிடம்  பேசினோம். ''அணு உலையை மூடணும்னு ஆர்ப்பாட்டம் செய்வ தற்குத் தலைமை தாங்க என்னைக் கூப்பிட்டார் புகழேந்தி. எனக்கு உடன்பாடு இல்லை என்பதால் மறுத்துவிட்டேன். அந்தக் கோபத்தில் யாரையோ தூண்டிவிட்டிருக்கார். 'உங்களையும், உங்க குடும்பத் தையும் அழிச்சிடுவோம்’னு மிரட்டல் கடிதம் வந்தது. '10 லட்சம் பணம் தரணும்’னு இன்னொரு கடிதம் வந்தது. புகழேந்தி மீதுதான் எனக்கு சந்தேகம் என்பதால், போலீஸில் புகார் கொடுத்தேன்'' என்றார்.

டாக்டர் புகழேந்தியை சந்தித்தபோது, ''டிசம்பர் ஒண்ணாம் தேதி சாயந்திரம் ஆறு மணிக்கு மேல புதுப்பட்டினம் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து போன் வந்தது. 'உங்க மேல் புகார் வந்திருக்கு.

புகழேந்திக்கு என்கவுன்ட்டர் மிரட்டல்?

விசாரணைக்கு வரணும்’னு சொல்லவும் நான் போனேன். கொஞ்ச நேரத்தில் பஞ்சாயத்துத் தலைவர் கலியபெருமாள் வந்தார். இன்ஸ்பெக்டர் சிவகுமார், 'நீங்க கொலை மிரட்டல் விடுத்ததா கலியபெருமாள் புகார் மனு தந்திருக்கார்’னு சொன்னார். ஒரு கூட்டத்துல கலந்துக்க நான் அழைச்சதாகவும், அவர் வர மறுத்ததால் கொலை மிரட்டல் விடுத்தேன்னும் கலியபெருமாள் சொன்னார். 'பல போன்களில் இருந்து எஸ்.எம்.எஸ்-கள் அனுப்பினார், மொட்டக் கடுதாசி போட்டார்’னும் இன்ஸ்பெக்டரிடம் சொன்னார். நான், 'அதை எல்லாம் செய்யவே இல்லை’னு மறுத்தேன். உடனே, 'இவர் தூண்டிவிட்டுத்தான் யாரோ செஞ்சு இருக்காங்க’னு கலியபெருமாள் பழி சுமத்தினார். 'எனக்கு கட்சி, இயக்கம் எல்லாம் கிடையாது. அணு உலை சம்பந்தமா பல மேடைகள்ல பேசி இருக்கேன். கலியபெருமாள் நடத்திய கூட்டத்திலும் பேசி இருக்கேன்’னு சொன்னேன். உடனே கடுப்பான இன்ஸ்பெக்டர், 'ரொம்ப ஓவராப் போறீங்க. இப்படியே நீங்க பண்ணா... நேஷனல் செக்யூரிட்டி ஆக்ட்ல... இல்லேன்னா, என்கவுன்ட்டர்ல போட்ருவேன்... ஜாக்கிரதை’னு மிரட்டினார். 'விசாரணைக்கு எப்போ கூப்பிட்டாலும் ஆஜராகணும்’னு  கையெழுத்து வாங்கிட்டு அனுப்பிவைச்சார்.

கலியபெருமாள் இங்கே ஆளும் கட்சி பஞ்சாயத்துத் தலைவர். அதிகாரிங்க, அரசியல் வாதிங்க யாரு வந்தாலும், அணு உலை தொடர்பா என்னையே பேசச் சொல்வாங்க. அதனால், தலைவரா இருந்தும் நம்மை யாரும் மதிக்கலையேன்னு நினைச்சு கலியபெருமாள் இப்படிப் பண்றார்னு நினைக்கிறேன். இந்தச் சம்பவம் குறித்து 46 பேர் கையெழுத்துப் போட்ட மனுவை முதல்வர், பிரதமர், காஞ்சிபுர மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி இருக்கேன். என்ன நடந்தாலும் சரி, மக்களிடம் என் பணியைத் தொடர்வேன்'' என்றார் உறுதியாக.

இன்ஸ்பெக்டர் சிவகுமாரிடம் பேசினோம். ''நான் ஏதோ என்கவுன்ட்டர் பண்ற மாதிரி புகழேந்தி சொல்றார். தலைவர் புகார் தந்ததால், விசாரிச்சேன். மற்றபடி விசாரணையில் எந்த உள்நோக்கமும் இல்லை. கூடிய விரைவில் போன் நம்பர்களை டிரேஸ் பண்ணி, கொலை மிரட்டல் விடுத்தவரைக் கண்டுபிடிச்சுடுவேன்'' என்றார்.

- க.நாகப்பன்

படம்:  பா.காயத்ரி அகல்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு