காரில் குட்கா கடத்தல்; பெங்களூரைச் சேர்ந்த இருவர் கும்பகோணத்தில் கைது!

கும்பகோணத்தில், பெங்களூரிலிருந்து காரில் கடத்திவரப்பட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா மற்றும் பான்மசாலா பொருள்களை  போலீஸார் பறிமுதல் செய்ததோடு, கடத்தலில் ஈடுபட்ட பெங்களூரைச் சேர்ந்த இருவரைக் கைதுசெய்தனர்.

குட்கா கடத்திய இன்னோவா கார்

கும்பகோணம் அருகே அணைக்கரை கொள்ளிடம் பாலத்தில், சில ஆண்டுகளாகவே ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டு, இலகு ரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கபடுகிறது. இதில், ஒரு பக்கத்தில் வாகனங்கள் வந்தால் எதிர்த்திசையில் வருபவர்கள் காத்திருக்க வேண்டும். இதற்காக, இருபுறமும் செக்போஸ்ட் அமைக்கப்பட்டு, எப்போதும்  காவலர்கள் பணியில் இருப்பார்கள். அவர்கள் வாக்கி டாக்கி மூலம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திவருகின்றனர்.

இந்நிலையில், அணைக்கரை பாலாத்தில் இன்று இனோவா கார் ஒன்று வந்தது. எதிர் திசையில் வாகனங்கள் வந்துகொண்டிருந்ததால், போலீஸார் இனோவா காரை நிறுத்த முயன்றனர். ஆனால் காரில் வந்தவர்கள், காரை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றனர். இதனால் போலீஸார் அந்த காரை மடக்கிப்பிடித்து அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.  அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப்  பேசியதால், காரில் என்ன உள்ளது என சோதனையிட்டனர். காரில், தடைசெய்யப்பட்ட குட்கா, பான்பராக், பான்மசாலா உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் இருவரும் திருப்பனந்தாள் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டனர்.  பின்னர், திருவிடைமருதுார் டி.எஸ்.பி.,ராமச்சந்திரன் விசாரணைசெய்தார். இதில், இருவரும் பெங்களூருவைச் சேர்ந்த ஜித்து படேல், நரசிங்கா என்பது தெரியவந்தது. தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து வாங்கி,  தஞ்சாவூரில் விற்பனைசெய்ய கொண்டுவந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து, ரூபாய் 1.50 லட்சம் மதிப்பிலான பொருள்களையும் அவர்கள் ஓட்டிவந்த காரையும் பறிமுதல் செய்ததோடு,  இருவரையும் போலீஸார் கைதுசெய்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!