Published:Updated:

கோகுல்ராஜ் கொலையில் நடந்தது என்ன? வெளியானது ஸ்வாதி பகிர்ந்த தகவல்கள்

கோகுல்ராஜ் கொலையில் நடந்தது என்ன? வெளியானது ஸ்வாதி பகிர்ந்த தகவல்கள்
கோகுல்ராஜ் கொலையில் நடந்தது என்ன? வெளியானது ஸ்வாதி பகிர்ந்த தகவல்கள்

"எங்க பையனைக் கொலை செய்த யுவராஜ், கட்சி அலுவலகத்துக்கு வருவதைப்போல வர்றான். அவுங்க கட்சிக்காரங்க கும்பலா நீதிமன்றத்துக்குள்ளே வரவேற்பு கொடுப்பதைப்போல கும்பலா வர்றாங்க. அதையெல்லாம் கேட்க மாட்டீங்களா, மகனைப் பறிகொடுத்த நாங்க பேசக் கூடாதா'' என்று கேட்டார்கள்.

சேலம் பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது நாமக்கல் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருக்கிறது. 4.9.2018 அன்று கோகுல்ராஜின் அண்ணன் கலைச்செல்வன் வாக்குமூலம் அளித்து இந்த வழக்கை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறார்.

சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ். இவரும், தன்னோடு கல்லூரியில் சக மாணவியாகப் படித்த ஸ்வாதியும் நெருங்கிப் பழகிவந்தார்கள். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் 2015 ஜூன் 23-ம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு பேசிக் கொண்டிருந்தார்கள். அங்கு வந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜும் அவருடைய ஆட்களும் கோகுல்ராஜை மிரட்டிக் கூட்டிச் சென்றார்கள். அதற்கான ஆதாரம், அந்தக் கோயிலில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி. கேமரா ஃபுட்டேஜில் பதிவாகியிருந்ததாகச் சொல்லப்பட்டது.

இரவு ஆகியும் கோகுல்ராஜ் வீடு திரும்பாததால், அவருடைய பெற்றோர்கள் கோகுல்ராஜைத் தேடிக் கொண்டிருந்தார்கள். அடுத்த நாள் பள்ளிப்பாளையம் அருகே தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் உடல் மீட்கப்பட்டது. அதையடுத்து தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் உட்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கே.ஹெச்.இளவழகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. கோகுல்ராஜ் தரப்பில் வாதிட தமிழக அரசு நியமித்த சேலத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கருணாநிதியும், யுவராஜ் தரப்பில் வாதிட மதுரையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஜி.கே. என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமணராஜு என்பவரும் ஆஜராகி வாதாடுகிறார்கள்.

இவ்வழக்கின் விசாரணைக்காக 4.9.2018 அன்று யுவராஜ் தரப்பில் தலைமறைவாக உள்ள அமுதரசு, சுட்டுக் கொல்லப்பட்ட ஜோதிமணியைத் தவிர யுவராஜ், தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் (எ) சிவக்குமார், யுவராஜ் கார் டிரைவர் அருண், சங்கர், செல்வராஜ், ரவி என்கிற ஶ்ரீதர், ரஞ்சித், சதீஷ்குமார், சுரேஷ், பிரபு, கிரி, சந்திரசேகர் ஆகிய 15 பேரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அரசுத் தரப்பில் கோகுல்ராஜின் அண்ணன் கலைச்செல்வன், ஸ்வாதி, ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் கைலாஷ் சந்துமீனா ஆகியோர்  ஆஜரானார்கள்.

இவ்வழக்கு சரியாக 11:15 மணிக்கு விசாரணைக்கு வந்தது. முதலில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் கைலாஷ் சந்துமீனா கூண்டில் ஏறி பதில் அளித்தார், ``பள்ளிப்பாளையம் அருகே தொட்டிபாளையம் ரயில்வே டிராக்கில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 2015 ஜூன் 24-ம் தேதி ஒரு வாலிபர் உடல் கிடந்தது. உடனே ஈரோடு ரயில்வே போலீஸுக்குத் தகவல் கொடுத்தோம்'' என்றார். அவரை குறுக்கிட்ட யுவராஜின் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமணராஜு, பின்வருமாறு கேள்வி எழுப்பினார்.

கே.ஜி.,: ``குறித்த நேரத்தில்தான் ரயில் வந்ததா?''

ஸ்டேஷன் மாஸ்டர்: ``ஆமாம்''.

கே.ஜி.,: ``கீ மேன் பெயர் என்ன?''

ஸ்டேஷன் மாஸ்டர்: ``ராஜன்''.

கே.ஜி.,: ``ரயிலின் பெயர், நெம்பர் என்ன?''

ஸ்டேஷன் மாஸ்டர்: ``ஏற்கெனவே எழுதிக் கொடுத்திருக்கிறோம்'' என்றார்.

அவரை அடுத்து கோகுல்ராஜ் அண்ணன் கலைச்செல்வன் பெயர் கூப்பிடப்பட்டது. கலைச்செல்வன் கூண்டில் ஏறி நின்று தன் வாக்குமூலத்தைத் தெரிவித்தார். அரசுத் தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி நடந்தவற்றை முழுமையாகச் சொல்லச் சொன்னார்.

அதையடுத்து கோகுல்ராஜின் அண்ணன் கலைச்செல்வன்: ``2015 ஜூன் 23-ம் தேதி காலை சுமார் 6:30 மணிக்கு நண்பர்களைப் பார்த்துட்டு

வருவதாக எங்க அம்மாவிடம் சொல்லிட்டு என் தம்பி கோகுல்ராஜ் வீட்டைவிட்டுக் கிளம்பினான். 10:30 மணிக்கு அம்மா அவனுக்கு போன் பண்ணினாங்க. அவன், போனை எடுக்கலை. கொஞ்ச நேரத்தில் புதிய நெம்பரிலிருந்து அம்மாவுக்கு போன் வந்தது. அந்த போனிலிருந்து கோகுல்ராஜ் பேசினான். `எங்கடா இருக்கே'னு கேட்டதற்கு, `வெளியில ஃப்ரெண்ட்ஸ்கூட இருக்குறேன். வந்திடுவேன்' என்று சொன்னான்.

ஆனால், மாலை 5:00 மணி ஆகியும் வீட்டுக்கு வரலை. போன் பண்ணினால் சுவிட்ச் ஆஃப் என்றே வந்தது. இதையடுத்து, எங்க ஊரிலிருந்து கோகுல்ராஜுடன் கல்லூரிக்குச் செல்லும் நண்பர்களிடம் போய்க் கேட்டேன். அவர்கள், `காலையில் கல்லூரி வாகனத்தில் வந்தான். திருசெங்கோட்டிலேயே இறங்கிட்டான். சாயந்திரம் கல்லூரி வாகனத்தில் வரவில்லை' என்று சொன்னார்கள். அதன் பிறகு வீட்டுக்கு வந்து என் தம்பி நெம்பருக்கு போன் பண்ணிட்டே இருந்தோம். சுவிட்ச் ஆஃப் என்றே வந்தது. தொடர்ந்து, இரவு சுமார் 8:40 மணிக்கு போன் பண்ணியபோது, `ஏய்... கோகுல்ராஜ் எங்கடா இருக்கே'னு கேட்டதற்கு, `வெளியில இருக்குறே'னு பதில் வந்தது. ஆனா, அது அவனுடைய வாய்ஸ் இல்லை. அதனால, `யாரு பேசறது'னு கேட்டதற்கு, `அவனோட ஃப்ரெண்டு'னு சொல்லிட்டு போனை சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டாங்க.

அன்று இரவு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. அடுத்த நாள் அதிகாலை ஃபேஸ்புக்கில் அவனுடைய கல்லூரி நண்பர்கள் யாராவது இருந்தால் கேட்டுப் பார்க்கலாம் என்று தேடினேன். அதில் பாலமுருகன் நெம்பர் இருந்தது. அவருக்கு, போன் பண்ணி கேட்டேன். `நான் வேற செக்‌ஷன்... அவன் வேற செக்‌ஷன். கோகுல்ராஜின் நண்பர் கார்த்திக் ராஜாவிடம் கேட்டுப் பாருங்கள்' என்று அவருடைய நெம்பரைக் கொடுத்தார்.  

அதையடுத்து கார்த்திக்ராஜாவிடம் பேசினேன். அவர், `நேற்று உங்க தம்பியும், எங்ககூடப் படிக்கும் ஸ்வாதியும் திருச்செங்கோடு மலைக்கோயிலுக்குப் போனாங்களாம். அங்கு யுவராஜ் என்பவர் மிரட்டி ரெண்டு பேரு செல்போனையும் பிடுங்கிட்டு கோகுல்ராஜைக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. ஏதோ பிரச்னை ஆயிடுச்சுபோல, ஸ்வாதியிடமே பேசிப் பாருங்க'' என்று ஸ்வாதியின் அம்மா நெம்பரைக் கொடுத்தார்.

அதையடுத்து ஸ்வாதி அம்மா நெம்பருக்கு போன் பண்ணினேன். ஸ்வாதி எடுத்துப் பேசினாங்க. `நானும் கோகுல்ராஜும் நேற்று திருச்செங்கோடு மலைக்கோயிலுக்குப் போனோம். அங்கு சாமி கும்பிட்டுவிட்டு உட்கார்ந்திருக்கும்போது, `யுவராஜ் அண்ணன் உங்களைக் கூப்பிடறாங்க'னு சொல்லி ரெண்டுபேரு வந்து சொன்னாங்க. நானும், கோகுல்ராஜும் அங்கே போனோம். வெள்ளைக்காரிலிருந்து வெளியே வந்த யுவராஜ், எங்க செல்போன்களைப் பிடுங்கிக்கொண்டு எங்களைத் தனித்தனியே மிரட்டி விசாரிச்சாங்க. ரெண்டு பேரும் லவ்வரா, என்ன சாதினு கேட்டாங்க.

கோகுல்ராஜ் முதல்ல ஃப்ரெண்டுனு சொன்னான். பிறகு அவன் தலையில அடிச்சதும் லவ் பண்ணுவதாகச் சொன்னான். உடனே கோகுல்ராஜை அடிச்ச அவுங்க, தீரன் சின்னமலை என்று எழுதி இருந்த அந்த வெள்ளைக் காரில் ஏத்திக்கொண்டு போனாங்க. என்னைக் கோயிலுக்கு வந்த ஒரு தம்பதிகூட அனுப்பிட்டாங்க' என்றார். `ஏன், அவன் எங்களுக்கு போன் பண்ணலை'னு கேட்டேன். `என் போனையும் பிடுங்கிட்டுப் போயிட்டதால பேச முடியவில்லை' என்றவரிடம், `சரி... திருச்செங்கோடு வாங்க... போலீஸில் புகார் கொடுக்கலாம்' என்று நான் சொன்னதற்கு, `இல்லை... அண்ணா நான் ஈரோட்டுக்கு வந்திடுறேன்' என்று சொன்னாங்க. இதையடுத்து, ஸ்வாதி பேசிய அனைத்தையும் ரெக்கார்டு பண்ணிக் கொண்டோம்.

கொஞ்சம் நேரம் கழித்து ஸ்வாதி, `அண்ணா திருச்செங்கோடே வர்றேன். நீங்களும் அங்கேயே வாங்க' என்று சொன்னார். அதையடுத்து நான், அம்மா, மாமா எல்லோரும் திருச்செங்கோடு போனோம். திருச்செங்கோடு பஸ் நிலையத்தில் ஸ்வாதியும், கார்த்திக்ராஜாவும் இருந்தாங்க. அவுங்களைக் கூட்டிக்கொண்டு திருச்செங்கோடு காவல் நிலையத்தில் எஸ்.ஐ. ஒருவரிடம் புகார் கொடுத்தோம். ஒரு மணி நேரம் கழித்து அந்தக் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் வந்தார். அவரிடம் சம்பவத்தைச் சொன்னோம். `யுவராஜ், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் தலைவர்' என்று கூறி அவருக்கு போன் செய்து ஸ்டேஷனுக்கு வரச் சொன்னார்.

அதற்குப் பிறகு, எங்க அம்மா போனுக்கு ஈரோடு ரயில்வே போலீஸார் போன் பண்ணி, பள்ளிப்பாளையம் அருகே தொட்டிபாளையத்தில் உள்ள தண்டவாளத்தில் கல்லூரி ஐ.டி. கார்டுடன் ஓர் உடல் கிடப்பதாகத் தகவல் வந்தது. அதையடுத்து, காவல் துறையினர் என்னைக் கூட்டிட்டுப் போனார்கள். நான் போய்ப் பார்த்தேன். அது என் தம்பியின் உடல்'' என்று பேச முடியாமல் விக்கித்தார்.

சிறிது நேரம் கழித்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தவர், ``பிறகு, பிரேதப் பரிசோதனை செய்வதற்காக ஈரோடு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். `எங்க தம்பியின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. இவ்வழக்கைக் கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும்' என்பதால் நாங்கள் கையொப்பம் போடவில்லை. அதையடுத்து சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவந்தார்கள். 27-ம் தேதி பிரேதப் பரிசோதனை செய்தார்கள். ஆனால் நாங்கள், `குற்றவாளிகளைப் பிடித்தால்தான் உடலை வாங்குவோம்' என்று கூறி உடலை வாங்கவில்லை. அதையடுத்து 6 பேரைக் கைதுசெய்தார்கள். உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் 2-ம் தேதி உடலைக் கொடுத்தார்கள். நாங்கள் வாங்கிச் சென்று அடக்கம் செய்தோம்'' என்றார்.

இவை அனைத்தையும் யுவராஜும் அவருடைய ஆட்கள் 14 பேரும் கூண்டுக்குள் நின்று சிரித்த முகத்துடனுயே கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதையடுத்து, இவ்வழக்கு 6-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வெளியே வந்து வேனில் அமர்ந்திருக்கும்போது கோகுல்ராஜ் அம்மா கோபம் கொண்டு, ``என் குழந்தையைக் கொன்ற நீங்கள் நல்லா இருக்க மாட்டீங்க, நாசமா போயிடுவீங்க'' என்று மண்ணைவாரி தூற்றினார். கதிரேசன் என்ற எஸ்.ஐ. ``கோர்ட் வளாகத்துக்குள் சத்தம் போடக் கூடாது'' என்றதால், கோகுல்ராஜ் உறவினர்கள் சூழ்ந்துகொண்டு, ``எங்க பையனைக் கொலை செய்த யுவராஜ், கட்சி அலுவலகத்துக்கு வருவதைப்போல வர்றான். அவுங்க கட்சிக்காரங்க கும்பலா நீதிமன்றத்துக்குள்ளே வரவேற்பு கொடுப்பதைப்போல கும்பலா வர்றாங்க. அதையெல்லாம் கேட்க மாட்டீங்களா, மகனைப் பறிகொடுத்த நாங்க பேசக் கூடாதா'' என்று கேட்டார்கள்.

மகனைப் பறிகொடுத்தவர்களுக்குத்தானே வலி தெரியும்.

அடுத்த கட்டுரைக்கு