ஹைதராபாத் நிஜாமின் தங்க டிஃபன் பாக்ஸில் உண்டு மகிழ்ந்த கொள்ளையன்! வினோத திருட்டு | several crores wroth tiffin box worth was used by one of the thieves every day to have food

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (11/09/2018)

கடைசி தொடர்பு:14:30 (11/09/2018)

ஹைதராபாத் நிஜாமின் தங்க டிஃபன் பாக்ஸில் உண்டு மகிழ்ந்த கொள்ளையன்! வினோத திருட்டு

`பல கோடி மதிப்பிலான மூன்று அடுக்கு டிஃபன் பாக்ஸை நிஜாம் பயன்படுத்தவில்லை, ஆனால் டிஃபன் பாக்ஸைத் திருடிய திருடன் உணவு உண்பதற்காக ஒவ்வொரு நாளும் அதைப் பயன்படுத்தியிருக்கிறார்' என ஹைதராபாத் போலீஸார் தெரிவிக்கின்றனர். 

தங்க டிஃபன் பாக்ஸ்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நிஜாம் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இங்கு, பல்வேறு கலை மற்றும் பாரம்பர்யம் மிக்க பொருள்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. ஹைதராபாத்தை ஆண்ட நிஜாம் மன்னர்கள் பயன்படுத்திய தங்கம் மற்றும் வைரத்திலான 400-க்கும் மேற்பட்ட பொருள்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த விலைமதிப்புள்ள வைரக் கற்கள் பதித்த தங்க டிஃபன் பாக்ஸ் கேரியர், ஸ்பூனோடு திருடு போனதாக கடந்த 2-ம் தேதி தெரியவந்தது. இந்த டிஃபன் பாக்ஸ் ஏழாவது நிஜாம் மீர் ஓஸ்மான் அலி கான் என்பவருக்கு 1937-ம் ஆண்டு அன்பளிப்பாக வந்தது. 

அருங்காட்சியகம் அளித்த புகாரை அடுத்து ஹைதராபாத் போலீஸார் திருடனைப் பிடிக்கத் தீவிர வேட்டையில் களம் இறங்கினர். அருங்காட்சியகம் வளாகத்தில் உள்ள 32 பாதுகாப்பு சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் திருடர்களைப் போலீஸார் அடையாளம் கண்டனர். அதன் பிறகு, மும்பையில் திருடர்கள் பதுங்கியிருப்பது போலீஸாருக்குத் தெரியவந்தது. மும்பை, ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த திருடர்களை போலீஸார் இன்று கையும் களவுமாகப் பிடித்தனர். 

இது குறித்து போலீஸார் கூறும்போது, `ஹைதராபாத்தில் இருந்து தப்பி ஓடிவந்த திருடர்கள் மும்பையில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியிருந்தனர். ஆடம்பர வாழ்க்கையை அனுபவித்துள்ளனர். இரண்டு பேரில் ஒருவர், உணவு உண்பதற்காக ஒவ்வொரு நாளும் பலகோடி மதிப்பிலான டிஃபன் பாக்ஸைப் பயன்படுத்தியுள்ளார். வைரக் கற்கள் பதித்த டிஃபன் பாக்ஸை நிஜாம் பயன்படுத்தவில்லை. திருடுவதற்கு மூளையாகச் செயல்பட்ட ஒருவன்மீது ஏற்கெனவே 26 வழக்குகள் உள்ளன. பல முறை சிறை சென்றும் வந்துள்ளான்' என்றார்.