Published:Updated:

மனநலம் பாதித்த சிறுமிக்கு நடந்த கொடுமை! - முதியவர் உட்பட மூவர் போக்ஸோ சட்டத்தில் கைது

மனநலம் பாதித்த சிறுமிக்கு நடந்த கொடுமை! -  முதியவர் உட்பட மூவர் போக்ஸோ சட்டத்தில் கைது
மனநலம் பாதித்த சிறுமிக்கு நடந்த கொடுமை! - முதியவர் உட்பட மூவர் போக்ஸோ சட்டத்தில் கைது

கூடுவாஞ்சேரி அருகே, தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக சிறுமி அடையாளம் காட்டியதன் பேரில், மூன்று பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே உள்ள அருங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் நிஷா (பெயர் மாற்றம்). லேசான மனநலம் பாதிக்கப்பட்ட நிஷா, பெற்றோர் பிரிந்து சென்றுவிட்டதால் பாட்டியுடன் வசித்துவருகிறார். பாட்டி கூலி வேலைக்குச் செல்லும்போது நிஷாவை வீட்டில் விட்டுவிட்டுச் செல்வது வழக்கம். அத்தகைய நேரங்களில், நிஷா வீட்டில் தனியாக இருப்பார். நிஷா தனியாக இருக்கும் போது, அவரைக் கட்டாயப்படுத்தி சிலர் பாலியல் வன்புணர்வு செய்துவந்துள்ளனர். இந்த நிலையில், அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவதாக நிஷா தனது பாட்டியிடம் கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து அவரின் பாட்டி, அருகில் உள்ள மருத்துவமனைக்கு நிஷாவை அழைத்துச் சென்று பரிசோதனை செய்தார்.

அப்போது, நிஷா நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதாக அவரது பாட்டியிடம் மருத்துவர் கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பாட்டி, கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தினர் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். சிறுமி அடையாளம் காட்டியதன் பேரில், அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் (60), சிதம்பரம்(40), சங்கர்(45) ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் மூவர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.