Published:Updated:

புழல் சிறையில் இறுகும்பிடி - இரண்டாவது நாளாக இன்றும் அதிகாரிகள் இடமாற்றம்!

புழல் சிறையில் இறுகும்பிடி - இரண்டாவது நாளாக இன்றும் அதிகாரிகள் இடமாற்றம்!
புழல் சிறையில் இறுகும்பிடி - இரண்டாவது நாளாக இன்றும் அதிகாரிகள் இடமாற்றம்!

புழல் சிறையில் கைதிகள் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருவதாக வெளியான புகாரையடுத்து, சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து 2 வது நாளாக இன்றும் அதிரடியாக மாற்றபட்டுள்ளனர்.


புழல் சிறையில் உள்ள தண்டனைக் கைதிகள், சிறைக்குள் உல்லாசமாக வாழ்க்கை நடத்திவருவது சமீபத்தில் வெளியான புகைப்படங்கள் மூலம் தெரியவந்தது. குறிப்பாக, உயர்பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் சர்வதேச கைதிகள் மற்றும் முக்கியக் கொலைவழக்கில் சிக்கிய கைதிகள் சிலர், சிறைக்குள் மெத்தை, டிவி, செல்போன், உயர் ரக உணவு என வெளியுலகுக்குச் சிறிதும் குறைவில்லாத அளவுக்கு சுகபோக வாழ்க்கையை சிறைக்குள் அனுபவித்துவந்தது புகைப்படங்கள்மூலம்  வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்தொடர்ச்சியாக, புழல் சிறைக்குள் அதிரடி ஆய்வுசெய்யப்பட்டு, செல்போன், டிவி, சமையலுக்குப் பயன்படுத்தக்கூடிய பொருள்களைக் காவல்துறையினர் பறிமுதல்செய்தனர். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைச்சாலைகளிலும் ஆய்வு நடத்த சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி அசுதோஷ் சுக்லா உத்தரவிட்டார். இந்தப் புகாரின் எதிரொலியாக, சிறைத்துறை அதிகாரிகள் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதன்படி நேற்று, சென்னை புழல் சிறையில் உள்ள அதிகாரிகள், வேலூர், கோயம்புத்தூர், சேலம், திருச்சி ஆகிய சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மொத்தம் 8 பேர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்றும், ஏழு சிறைக்காவலர்களை சிறைத்துறை அதிரடியாக வேறு இடங்களுக்கு பணி மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இன்னும் பலர் பணி மாற்றம் செய்யப்படுவார்கள் என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.