Published:Updated:

சென்னையில் ஒரே நாளில் மூன்று இடங்களில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்!

எஸ்.மகேஷ்
சென்னையில் ஒரே நாளில் மூன்று இடங்களில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்!
சென்னையில் ஒரே நாளில் மூன்று இடங்களில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்!

சென்னையில், ஒரே நாளில் மூன்று இடங்களில் 50 சவரன் நகைகள் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மாங்காடு, அம்பாள் நகர் பாலாஜி அவென்யூவில் குடியிருந்து வருபவர், ரமேஷ். இவர், பெருங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜினீயராக வேலைபார்த்துவருகிறார். இவரின் சொந்த ஊர் திருவண்ணாமலை. கடந்த 13-ம் தேதி ரமேஷின் மனைவி மற்றும் குழந்தைகள் திருவண்ணாமலைக்குச் சென்றனர். கடந்த 21-ம் தேதி, ரமேஷ் வீட்டை பூட்டிவிட்டு அங்கு சென்றார். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள், பூட்டை உடைத்து உள்ளே சென்று, வீட்டிலிருந்த 25 சவரன் நகை மற்றும் 15,000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பிவிட்டனர். வீடு திரும்பிய ரமேஷ், பீரோ உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பிறகு, கொள்ளைச் சம்பவம்குறித்து மாங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்மூலம் கொள்ளையர்களை போலீஸார் தேடிவருகின்றனர். 

இதையடுத்து, மாங்காடு பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் வீட்டில் 13 சவரன் நகை கொள்ளை போனது. அவர் கொடுத்த புகாரின்பேரில், மாங்காடு போலீஸார் விசாரித்துவருகின்றனர். தொடர்ந்து, கொருக்குப்பேட்டையில் சலீம் என்பவரின் வீட்டில் 12 சவரன் நகைகள், 7,000 ரூபாய் பணம் ஆகியவை கொள்ளை போயுள்ளது. இதுதொடர்பாக கொருக்குப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். சென்னையில், நேற்று மட்டும் 50 சவரன் நகைகள் கொள்ளை போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.