Published:Updated:

சென்னையில் அரை சவரனுக்கு ஆசைப்பட்டு சிக்கிய கொள்ளையர்கள்!

எஸ்.மகேஷ்
சென்னையில் அரை சவரனுக்கு ஆசைப்பட்டு சிக்கிய கொள்ளையர்கள்!
சென்னையில் அரை சவரனுக்கு ஆசைப்பட்டு சிக்கிய கொள்ளையர்கள்!

சென்னை அரும்பாக்கத்தில் அரை சவரன் தங்கச் செயினுக்கு ஆசைப்பட்டு வழிப்பறி செய்த மூன்று கொள்ளையர்கள் போலீஸாரிடம் சிக்கினர். 41 சவரன் நகைகள், கார், பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 

சென்னை அரும்பாக்கம், ராணி அண்ணா நகரைச் சேர்ந்தவர் திருப்பதி. இவர், அரும்பாக்கம் ரசாக் கார்டன், பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் நேற்று மதியம் 12 மணியளவில் நடந்து சென்றார். அப்போது ஒரே பைக்கில் மூன்று பேர் வந்தனர். அவர்கள், திருப்பதியை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டினர். ஆனால், அவர் பணம் கொடுக்க மறுத்தார். ஆத்திரமடைந்த வழிப்பறிக் கொள்ளையர்கள் திருப்பதியைத் தாக்கி அவர் அணிந்திருந்த அரை சவரன் தங்கச் செயின் மற்றும் 400 ரூபாய் ஆகியவற்றை பறித்துக்கொண்டு பைக்கில் சென்றனர்.

திருடன் திருடன் என்று திருப்பதி அலறினார். அவரின் அலறல் சத்தம் கேட்டு ரோந்து போலீஸார், பைக்கில் சென்ற பைக் கொள்ளையர்களை விரட்டிப் பிடித்து அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சபீர் பாஷா, அண்ணா நகர் மேற்குப் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், பெரம்பூரைச் சேர்ந்த ராஜ்குமார் என தெரிவந்தது. இவர்கள் தனியாக நடந்துசெல்லும் பெண்களிடம் வழிப்பறி செய்துள்ளனர். தொடர்ந்து இவர்களிடமிருந்து 41 சவரன் தங்க நகைகள், கார், இரண்டு பைக்குகள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.