Published:Updated:

`` `நாங்களே தீ வச்சு எரிச்சிக்கிட்டோம்'னு சொல்லு" - குடும்பத்தையே கொளுத்திய கார்த்தி கைதான பின்னணி!

வீ கே.ரமேஷ்
`` `நாங்களே தீ வச்சு எரிச்சிக்கிட்டோம்'னு சொல்லு" - குடும்பத்தையே கொளுத்திய கார்த்தி கைதான பின்னணி!
`` `நாங்களே தீ வச்சு எரிச்சிக்கிட்டோம்'னு சொல்லு" - குடும்பத்தையே கொளுத்திய கார்த்தி கைதான பின்னணி!

ட்டிய மனைவியையும் பெற்ற குழந்தைகளையும் கொடுமை செய்து தீ வைத்துக் கொளுத்திவிட்டு குடும்ப பிரச்னை காரணமாகத் தற்கொலைக்கு முயன்றதாகச் சொல்ல வைத்திருக்கிறார் மனசாட்சியில்லாத ஒரு நபர். சிகிச்சைப் பலனின்றி இருவர் இறந்த நிலையில், ஒரு குழந்தை உயிருக்குப் போராடி வருவதை நேரில் பார்க்கும்போது நெஞ்சம் பதைபதைக்கிறது.   

சேலம் மாவட்டம், ஆத்தூர் அழகாபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரின் மனைவி பூமதி வயது 24, இவர்களுக்கு 5 வயதில் பூவரசன் என்ற ஆண் குழந்தையும், இரண்டரை வயதில் நிலாஸ்ரீ என்ற பெண் குழந்தையும் இருக்கிறார்கள். கடந்த 18-ம் தேதி இரவு வேலை முடித்து வீட்டுக்குத் திரும்பி வந்த கார்த்திக், தன் மனைவி பூமதி குழந்தைகள் பூவரசன், நிலாஸ்ரீ ஆகியோர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து எரித்து, நெஞ்சை உறைய வைக்கும் இச்சம்பவத்தை செய்திருக்கிறார்.

இதையடுத்து மூன்று பேரும் கடும் தீக்காயங்களுடன் ஆத்தூர் மருத்துவமனையிலிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம்

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் பூமதியும் அவரின் பெண் குழந்தை நிலாஸ்ரீயும் சிகிச்சைப் பலனின்றி இறந்தனர். 5 வயது ஆண் குழந்தை பூவரசன் உயிருக்குப் போராடி வருகிறான். தற்போது, கார்த்திக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி பூமதியின் தம்பி நடராஜிடம் பேசியபோது, ``என்கூட பொறந்தவங்க மூணு சகோதரிகள். நான் ஒரு பையன். அப்பா, அம்மா கூலி வேலை செஞ்சு எங்க எல்லாரையும், 12வதுக்கு மேல படிக்க வச்சாங்க. என் கூட பொறந்த மூணு பொண்ணுங்களுமே ஒரு சண்டை சல்லுக்கு போகமாட்டாங்க. என் பெரியக்கா செந்தாமரையை ஆத்தூர் அழகாபுரத்தில் திருமணம் செஞ்சு கொடுத்தோம். எங்க பெரியக்கா கணவரின் பங்காளி பையன்தான் இந்த கார்த்திக். பெரியக்காவின் மாமனாரும் மாமியாரும் தலையிட்டதால் சின்ன அக்காவை, கார்த்திக்கு கல்யாணம் செஞ்சு கொடுத்தோம். பெரியக்கா வீடும் சின்னக்கா வீடும் பக்கத்திலேயே இருக்கு. கார்த்திக் ரிக்வண்டிக்கு போயிட்டு ரெண்டு, மூணு மாசம் கழிச்சுதான் வீட்டுக்கு வருவான். எப்போ வீட்டுக்கு வந்தாலும் குடிச்சுட்டு வந்து அக்காவை அடிச்சு சித்ரவதை பண்ணுவான். 'எதுக்கு அக்காவ அடிக்கிற'ன்னு நாங்க கேட்டதுக்காக எங்கக்கிட்டேயும் சண்டைக்கு வந்துட்டான். அதனால், நாங்க சரியா ஆத்தூருக்கு போக மாட்டோம்.

எங்க பெரியக்கா மாமனாரும் மாமியாரும் ரொம்ப மோசமானவங்க. எங்க பெரியக்காவையும் அடிச்சு துரத்திட்டாங்க. அவங்க தூண்டுதலாலதான் கார்த்திக் குடிச்சுட்டு வந்து சின்னக்கா பூமதியை அடிச்சு துன்புறுத்தி இருக்கான். சம்பவத்துக்கு முன்பு அக்காவோட போனை பிடுங்கிட்டு, நாலு நாளா அக்காவையும் குழந்தைகளையும் அடிச்சு கொடுமைப் படுத்தியிருக்கான்.

நாங்க எங்க அக்கா பூமதிக்குப் போன் பண்ணினோம். 'ஸ்விட்ச் ஆஃப்'னு வந்தது. அதையடுத்து கார்த்திக்குப் போன் பண்ணி 'மாமா அக்கா போன் 'ஸ்விட்ச் ஆஃப்'ன்னே வருது. அக்காகிட்ட போன் கொடுங்க'ன்னு கேட்டோம். அதுக்கு அவன், 'நான் டெல்லியில் இருக்கேன். பம்பாயில இருக்கேன்'னு சொன்னான். தீ வச்சு எரிச்ச பிறகு, மருத்துவமனைக்கு ஏத்திட்டு போகும்போதுதான் போன் பண்ணி விவரம் சொன்னாங்க.

எங்க அக்கா மற்றும் குழந்தை மரணத்துக்கு, கார்த்திக் மற்றும் பெரிய அக்காவோட மாமனார் பெரியசாமி மாமியார் லட்சுமிதான் காரணம். அக்கம் பக்கத்துல இருக்கவங்க யாராச்சும் ஒரு வார்த்தை எங்களுக்கு தகவல் கொடுத்திருந்தா எங்க அக்காவையும் குழந்தைகளையும் காப்பாற்றியிருப்போம்'' என்று தலையில் அடித்துக்கொண்டு அழுகிறார். பின் மனதைத் தேற்றிக்கொண்டு பேசத் தொடங்கியவர்...

"இந்த நிலையிலும் மருத்துவமனையில் யாராவது கேட்டால், 'தற்கொலை செஞ்சுக்க தீ வச்சு கொளுத்திக்கிட்டோம்'னு சொல்லச் சொல்லி எங்க அக்காவை மிரட்டியிருக்கான் கார்த்தி. அக்காவும் அப்படியே சொல்லிடுச்சு. பிறகு, நானும் எங்க அம்மாவும் போய் கேட்டதற்கு, அவன் அடிச்சு கொடுமை படுத்தி தீ வச்ச சம்பவத்தைச் சொல்லி அழுதது. 'இந்த ஒருமுறை என்னைக் காப்பாத்துங்க. நான் உங்களோடேயே

வீட்டுக்கு வந்துடுறேன். இனி அவன்கூட வாழ மாட்டேன்' என்று கதறி அழுதது. அதை வீடியோ எடுத்து வாட்ஸ்அப்பில் போட்டேன். அதையடுத்து காவல்துறையினர் அக்காவிடம் விசாரிச்சுட்டு, அவனை கைது பண்ணி சிறையில் அடைச்சிருக்காங்க. எங்க அக்காவையும் குழந்தையையும் கொலை பண்ண அந்த மிருகத்துக்கு தக்க தண்டனை கிடைக்கணும்'' என்றார்.

சேலம் மருத்துவமனையில் உள்ள பிணவறை சுவரில் கண்ணீரோடு சாய்ந்திருந்த பூமதியின் அம்மா கிருஷ்ணவேணி, ''களையெடுத்து, கட்டு சுமந்து கஷ்டப்பட்டு என் மக்களை படிக்க வச்சு, ஒண்ணும் அறியாத குழந்தையைப் போல கல்யாணம் செஞ்சு கொடுத்தேனே. இப்படி கொடுமை பண்ணி நெருப்பு வச்சு எரிச்சு கொன்னு போட்டுட்டானே. அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கப் போறாங்க. இனி என் பொண்ணும் குழந்தைகளும் கிடைக்குமா...'' என்று அழுதார்.

இதுபற்றி ஜனநாயக மாதர் சங்கத்தின் சேலம் மாவட்டத் தலைவர் பரமேஸ்வரி, ''குழந்தைப் பெற்றெடுக்கும் திறனும், குழந்தையைப் பாலூட்டி வளர்க்கும் சக்தியும் கொண்டதால் பெண்களின் உடல் இலகுவாகவும், வலிமைக் குறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், ஆண்கள் உடல் ரீதியாக வலிமை வாய்ந்தவர்களாக இருப்பதால் காட்டில் புள்ளிமான்களைப் புலிகள் வேட்டையாடுவதைப்போல, ஆண்கள் பெண்களைக் கொடுமைப்படுத்தும் நிலை உருவாகிறது. 'நாகரிக உலகம் பெண்களை மேன்மைப்படுத்தினால் மட்டுமே சமுதாயம் மேன்மை அடையும்' என்றார் ராபர்ட் இங்கர்சால்.

ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்தும் இன்னும் பெண்கள் நிலை, அதுவும் கிராமப்புற பெண்களின் நிலைமை பரிதாபத்துக்குரியதாகவே இருந்து வருகிறது. சதி, தேவதாசி, பெண்கள் மீதான வன்முறை என்று பெயர்கள்தான் மாறி இருக்கிறதே தவிர, இன்னும் ஆணாதிக்க சமூகம் பெண்களை போதைப் பொருள்களாகவும் அடிமைகளாகவுமே வைத்திருக்கிறது.

காவல் நிலையங்கள் வெறும் கட்டப்பஞ்சாயத்து கூடங்களாக இருந்து வருகிறது. ஒரு சம்பவம் நடந்த பிறகு தலையிடுவதும், அதில் ஆதிக்க சக்தியாக யார் இருக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக இருக்கிறது. ஒரு காவல் நிலையத்தின் எல்லைக்குள் இருக்கும் திருடர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகப் பேருந்து நிலையங்கள், காவல் நிலையங்களில் புகைப்படம் போட்டு போஸ்டர் அடித்து ஒட்டுவதைப்போல, பெண்களைக் கொடுமைப்படுத்துபவர்களின் புகைப்படங்களையும் ஒட்ட வேண்டும். அவர்களின் நடவடிக்கைகளையும் கண்காணிக்க வேண்டும்.

முதலில் அரசாங்கங்கள், பெண்கள் மீதான கொடுமைகளைத் தடுக்க முன்வந்து புதிய சட்டங்களை அறிவிப்பதோடு, அதை உடனே

நடைமுறைப்படுத்த வேண்டும். பெண்களைக் காக்கின்ற பொறுப்பு இந்தச் சமுதாயத்துக்கும் இருக்கிறது என்பதை உணர்ந்து பெண்கள் சித்ரவதைக்கு உள்ளானால், உடனே தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்ததும், அவன் மறுமணம் செய்துகொண்டு சந்தோஷமாக இருப்பான். பெண்களைக் கொடுமைப்படுத்துபவர்களுக்கு மறுவாழ்வே கேள்விக்குறியாக மாறும் என்ற நிலை உருவாகும்போது மட்டுமே ஓரளவுக்கு பெண்கள் மீதான கொடுமைகளைத் தடுக்க முடியும்'' என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆத்தூர் காவல்நிலையத்தில் விசாரித்தபோது, ''தொடர்ந்து குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகளைப் பற்றி விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஏதாவது சம்பவங்கள் நடந்தால் மட்டுமே நம் கவனத்துக்கு வருகிறது. இதுமாதிரியான விஷயங்களில் முன்கூட்டியே தெரிந்தால்கூட, பாதிக்கப்பட்டவரை அணுகி விசாரிக்கும்போது அவர்கள் மறுத்து விடுகின்றனர். மேற்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை. இந்த வழக்கைப் பொறுத்தவரை எங்களுக்குத் தெரிய வந்ததும் கார்த்திக் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருக்கிறோம். பெண்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கணவன் கொடுமைப்படுத்தினால் தாமதிக்காமல் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தை அணுகி தெரிவித்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும்'' என்றார்கள்.