``கடலூர் மத்திய சிறையில் உள்ள தீவிரவாதியை கடத்த சதி” -துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு

``கடலூர் மத்திய சிறையில் உள்ள தீவிரவாதியை கடத்த சதி” -துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு
கடலூர் கேப்பர் குவாரி மலையில் கடலூர் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என சுமார் 1500 -க்கும் மேற்பட்டவர்கள் இருக்கின்றனர். சிறைச்சாலை பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.
சிரியாவில் செயல்படும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக சென்னையைச் சேர்ந்த அன்சர்மீரன்(29) என்பவரைக் கடந்த பிப்ரவரி மாதம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். இதனையடுத்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் புழல் சிறையில் கைதிகளுக்குள் மோதல் நடந்தது. இதனைத் தொடர்ந்து அன்சர்மீரன் கடலூர் மத்திய சிறை சாலைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் அன்வர்மீரனை வரும் 3 -ம் தேதி(நாளை) சிறையைத் தகர்த்து தீவிரவாதிகள் கடத்த இருப்பதாக மத்திய உளவுத்துறை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மாநில உளவுப் பிரிவு போலீஸார் உஷார் படுத்தப்பட்டனர். நேற்று இரவு திருச்சி சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் கடலூர் மத்திய சிறைச்சாலைக்கு சென்றார். அங்குச் சிறை அலுவலர்களுடன் அதிரடி சோதனை நடத்தினார். கைதிகள் தங்கியுள்ள அறை சிறை வளாகம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மத்திய சிறைச்சாலைக்கு செல்லும் அனைத்துச் சாலைகளிலும் போலீஸார் தீவிர வாகன சோதனை நடத்தினர். மேலும் சிறை பகுதியைச் சுற்றிலும் விடிய, விடியத் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 2 வது நாளாக நேற்றும் சிறைச்சாலையை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். சிறைச்சாலையில் அன்சர்மீரான் தங்கியிருக்கும் அறையை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அன்சர் மீரான் கடத்தப்பட இருக்கும் செய்தி கடலூர் மாவட்ட போலீஸாரிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.