மெக்ஸிகோவைச் சேர்ந்த ஒரு தம்பதி, 20 பெண்களைக் கொலை செய்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக அந்தத் தம்பதி அளித்துள்ள வாக்குமூலம் மெக்ஸிகோவை அதிரவைத்துள்ளது.
Photo Source: @telediariomty
மெக்ஸிகோவைச் சேர்ந்த சமந்தா, எவ்லின் ரோஜஸ் மற்றும் நான்சி நோமி ஆகியோரைக் கடந்த சில மாதங்களுக்கு முன் காணவில்லை. இவர்கள் ஏப்ரல் - செப்டம்பர் மாதங்களுக்கிடையே மாயமாகினர். இவர்களில் நான்சி நோமி என்பவர், தனது இரண்டு மாத கைக்குழந்தையுடன் மாயமாகிவிட்டார். இதுகுறித்து இவர்களது குடும்பத்தினர் காவல் துறையினர் புகார் தெரிவித்திருந்தனர். இவ்விவகாரம் தொடர்பாகக் காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டிருந்தனர் இருப்பினும், அவர்களைக் கண்டுபிடிக்க இயலவில்லை.
இந்த நிலையில், மெக்ஸிகோவின் Ecatepec பகுதியில் ஒரு ஆணும் பெண்ணும் கைக்குழந்தைகளைக் கொண்டுசெல்லும் வண்டியில் மூட்டை மூட்டையாக எதையோ கட்டி ஒரு வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அதைக் கண்டு சந்தேகம் அடைந்த சிலர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், அந்த மூட்டைகளைச் சோதனைசெய்தனர். அதில், துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருந்த மனித உடல்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர்கள் Ecatepec பகுதியைச் சேர்ந்த ஜூயான் கார்லஸ் (Juan Casrloas) மற்றும் அவரது மனைவி பேட்ரி (Patricia)என்பது தெரியவந்தது. அவர்களிடம் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொள்ளும்போதே, காவல் துறையின் ஒரு பிரிவினர் அவர்களது வீடுகளைச் சோதனைசெய்தனர். அங்கு, 20 வாளிகளில் மனித உடல்கள் இருந்துள்ளன. அவை அனைத்தும் சிமென்ட்டால் பூசப்பட்டு இருந்துள்ளது. அந்த வீட்டில் இருந்த ஃப்ரிட்ஜில், மனித உடலின் பாகங்கள் பாலித்தீன் பேப்பரில் சுற்றி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
விசாரணையில், அந்தத் தம்பதியினர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். அனைத்துக் கொலைகளையும் கணவன் செய்ய, மனைவி அதற்கு உடந்தையாக இருந்துள்ளார். கொலை செய்யப்பட்ட 20 பேரும் பெண்கள் என்பது தெரியவந்துள்ளது. கொலை செய்வதற்கு முன்பு ஜூயான் கார்லஸ் அந்தப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அனைத்துப் பெண்களையும் கத்தியால் கழுத்தை அறுத்து கொலைசெய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். எந்த அச்ச உணர்வும் இல்லாமல், சர்வசாதாரணமாகவே இருக்கிறார் எனக் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பெண்கள் யார்... அவர்கள் எப்படி வீட்டுக்கு வந்தார்கள் என்பதை அவரது மனைவி காவல் துறையிடம் கூறுகையில், குறைந்த விலையில் துணிகளை விற்பனைசெய்வதாகக் கூறி, அந்தப் பெண்களை வீட்டுக்கு அழைந்துவந்ததாகவும், அவர்களைக் கொலைசெய்த பின்னர், தங்கள் வீட்டில் உள்ள செல்லப் பிராணிகளுக்கு அவர்களின் உடல்களை உணவாக அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். மனித உடல்களை அவர்களது சொந்த நிலத்தில் உரமாகப் பயன்படுத்தியதாகவும், அந்தப் பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன நான்சி நோமியைக் கொலை செய்ததையும் அவரது 2 மாத குழந்தையை மற்றோரு தம்பதிக்கு விற்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளார். தற்போது அந்தக்குழந்தையை மீட்டுள்ள காவல் துறையினர், அவரது பாட்டியிடம் ஒப்படைத்துள்ளனர். குழந்தையை விலைக்கு வாங்கிய தம்பதியையும் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்
கைதுசெய்யப்பட்ட இருவரையும் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இருவரும், இறுகிய முகத்துடன் நீதிமன்றத்தில் காணப்பட்டனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகுறித்து இருவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் மெக்ஸிகோவில் காட்டுத்தீயாகப் பரவியது. ஏராளமான பொதுமக்கள் சாலைகளில் திரண்டனர். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, மெழுகுவத்தி ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்.