வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (10/10/2018)

கடைசி தொடர்பு:22:00 (10/10/2018)

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு இரட்டை ஆயுள்! தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு

ஒரத்தநாடு அருகே ஆடுமேய்த்த 11 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து தொற்று நோய் பரப்பிய முதியவரான ராமையன் என்பவருக்கு தஞ்சை மகளிர் விரைவு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

ராமையன்

ஒரத்தநாடு அருகே செம்மண்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் ராமையன். விவசாயியான இவர் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி அப்பகுதியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமியின் தாயார் ஆடு மேய்ப்பவர். பள்ளி விடுமுறை நாள்களில் அம்மாவுக்கு உதவியாக அநக்ச் சிறுமியும் ஆடு மேய்க்கச் செல்வார். அதே போல் சம்பவத்தன்று தாயுடன் சிறுமி ஆடு மேய்க்கச் சென்றிருந்தார். சிறிது நேரத்துக்குப் பின்னர், அவரின் தாய், தன் மகளான சிறுமியை ஆடுகளை மேய்த்துக் கொண்டு இரு, நான் வீடுவரை போய்விட்டு வருகிறேன் எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அப்போது ராமையன் அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை யாரிடமாவது தெரிவித்தால் அந்தச் சிறுமியைக் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். மேலும், ராமையன் பாலியல் வன்கொடுமை செய்ததில் அந்தச் சிறுமிக்கு ஜெனிடல் கெர்பீஸ் என்ற பாலியல் தொற்று நோய் பரவியது. இது குறித்து அந்தச் சிறுமியின் தாய் ஒரத்தநாடு போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து போலீஸார் பேக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராமையனைக் கைது செய்தனர். 

இந்த வழக்கு விசாரணை தஞ்சை மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை நீதிபதி பாலகிருஷ்ணன் விசாரித்தார். அரசுத் தரப்பில் வக்கீல் தேன்மொழி சுரேஷ்கண்ணன் ஆஜராகி வாதாடினார், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது. இதில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 5 (எம்), 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும், 5 (ஜே) பிரிவு 3 சட்டத்தின் கீழ் சிறுமிக்குப் பால்வினை நோயைப் பரப்பியதற்காக ஆயுள் தண்டனையும் என்று இரட்டை ஆயுள் தண்டனை ராமையனுக்கு விதிக்கப்பட்டது. மேலும், தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் சாகும்வரை ஜெயிலில் இருக்கவும் உத்தரவிடப்பட்டது. சிறுமியை மிரட்டிய குற்றத்துக்காக இந்திய தண்டனை சட்டம் 506 (1) கீழ் ரூ. 2,500 ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், சிறுமிக்கு இழப்பீடு வழங்க இலவச சட்ட உதவி மையத்துக்கு நீதிபதி பாலகிருஷ்ணன் பரிந்துரை செய்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க