Published:Updated:

`நண்பருடன் சேர்ந்து மனைவி கொல்லப்பார்க்கிறாள்!'- நெல்லை கலெக்டர் ஆபீஸில் தீக்குளிக்க முயன்ற கணவன்

பி.ஆண்டனிராஜ்
`நண்பருடன் சேர்ந்து மனைவி கொல்லப்பார்க்கிறாள்!'- நெல்லை கலெக்டர் ஆபீஸில் தீக்குளிக்க முயன்ற கணவன்
`நண்பருடன் சேர்ந்து மனைவி கொல்லப்பார்க்கிறாள்!'- நெல்லை கலெக்டர் ஆபீஸில் தீக்குளிக்க முயன்ற கணவன்

குடும்பத் தகராறு குறித்து உள்ளூர் காவல்நிலையத்தில் முறையிட்டும் உரிய தீர்வு கிடைக்காததால் மனம் உடைந்த இளைஞர் ஒருவர், ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


நெல்லை மாவட்டம், தாழையூத்து அருகே உள்ள தாதனூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். 38 வயதான இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். அவர் சங்கர் நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட கட்டணக் கழிவறையில் பணியாற்றி வருகிறார். அவருக்கும் அவருடைய மனைவி கவிதாவுக்கும் இடையே கடந்த சில தினங்களாக குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக இருவரும் சண்டையிட்டு வந்துள்ளனர்.

முருகன் தனது மனைவி கவிதா மீது சில தினங்களுக்கு முன்பு தாழையூத்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தனது மனைவி கவிதாவுக்கு ராஜாபுதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவருடன் முறைதவறிய உறவு கொண்டுள்ளதாகவும் இருவரும் சேர்ந்து தன்னைக் கொல்ல சதித் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகவும் புகார் செய்திருந்தார். அவர்களிடமிருந்து தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். 

ஆனால், காவல்துறையினர் அந்தப் புகார் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எதிர்தரப்பைச் சேர்ந்த செல்வம் தொடர்ந்து முருகனை மிரட்டி வந்த நிலையில், அச்சமடைந்த அவர் தனக்குப் பாதுகாப்பு கோரி இன்று  மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து   மனு அளிக்க வந்திருந்தார். மனம் உடைந்த நிலையில் இருந்த அவர் திடீரென கையில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொளுத்த முயற்சி செய்தார்.

அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவரைத் தடுத்து நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் இருந்த சமயத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவியது. காவல்துறையினர் முருகனை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.