Published:Updated:

`பாலியல் தொந்தரவுதான் பிரச்னைக்குக் காரணம்!' - சண்முகராஜன் மீது நடிகை ராணி போலீஸில் புகார்

இரா.தேவேந்திரன்
`பாலியல் தொந்தரவுதான் பிரச்னைக்குக் காரணம்!' - சண்முகராஜன் மீது நடிகை ராணி போலீஸில் புகார்
`பாலியல் தொந்தரவுதான் பிரச்னைக்குக் காரணம்!' - சண்முகராஜன் மீது நடிகை ராணி போலீஸில் புகார்

தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகர் சண்முகராஜன் மீது செங்குன்றம் காவல் நிலையத்தில் நடிகை ராணி புகார் அளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், கொரட்டூர் பகுதியில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நந்தினி தொடரின் ஷூட்டிங் நடந்தது. இந்தத் தொடரில் நடிகை ராணி நடித்து வருகிறார். இந்தத் தொடரில் நடிகை ராணிக்கு கணவராக சண்முகராஜன் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 11-ம் தேதி நடந்த படப்பிடிப்பில் நடிகை ராணி, தன் கணவரான சண்முகராஜனை அடிப்பதுபோல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இந்தநிலையில், நடிகை ராணி அடித்ததில் சண்முகராஜன் கண்கலங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அன்று இருதரப்பினரையும் இயக்குநர் சமாதானம் செய்துவைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று செங்குன்றம் பகுதியில் உள்ள மணி டெக்டைல்ஸ் என்ற துணிக்கடையில் நந்தினி தொடரின் மற்றொரு பகுதியைப் படமாக்கிக்கொண்டிருந்தனர். ராணியின் கணவர் பிரசாந்த், ஷூட்டிங்கில் பார்வையாளராகக் கலந்துகொண்டு வேடிக்கை பார்த்து வந்தார். அப்போது, பிரசாத்தை, நடிகர் சண்முகராஜன் பார்த்து ஏளனமாகச் சிரித்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு, `ஏன் என்னைப் பார்த்து சிரிக்கிறீர்கள்' என்று பிரசாத் கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ராணியின் கணவரை சண்முகராஜன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதை அந்தத் துணிக்கடையில் முதல் தளத்தில் மேக்கப் ரூமில் இருந்த நடிகை ராணி அறிந்து, சம்பவ இடத்துக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், ராணியை நடிகர் சண்முகராஜன் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அருகில் உள்ள செங்குன்றம் காவல் நிலையத்தில், நடிகர் சண்முகராஜன் தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததுதான் இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம் என ராணி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து செங்குன்றம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால், ஷூட்டிங் நடந்த துணிக்கடையில் பரபரப்பு ஏற்பட்டது.